விவசாயமே செய்யாத பண்ணை நிலம்-விஜயகாந்த்துக்குப் புதுச் சிக்கல்
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே உள்ள விஜயகாந்த்துக்குச் சொந்தமான பண்ணை நிலத்தில் விவசாயம் செய்யப்படாமல் உள்ளதால் அது தொடர்பாக விஜயகாந்த்துக்கு புதுச் சிக்கல் ஏற்படவுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே விஜயகாந்த்துக்குச் சொந்தமாக 403 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை நிலம் உள்ளது. இதற்கு கேப்டன் பண்ணை என்று பெயர். இந்த பண்ணை இல்லத்தின் இயக்குநர்களாக விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும் உள்ளனர்.
இந்த நிலத்தில் கிட்டத்தட்ட 28 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதவிர கோவில் நிலம், ஏரி நிலம், தனியார் நிலமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மதுராந்தகம் தாசில்தார் ஏற்கனவே விஜயகாந்த்துக்கும், பிரேமலதாவுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் ஏரி நிலத்தை ஆக்கிரமித்துள்ளது தொடர்பாக பொதுப்பணித்துறையும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நேரில் ஆஜராக உத்தரவு:
விழுப்புரம், நிலச் சீர்திருத்த இணை ஆணையர் அலுவலகத்தில் வரும் 11ம் தேதி விஜயகாந்த் நேரிலோ அல்லது பிரதிநிதிகள் மூலமோ ஆஜராகி விளக்கம் தர வேண்டும் எனவும் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விஜயகாந்த்தின் பண்ணை இல்லம் விவசாய நிலமாகும். ஆனால் இதுவரை அங்கு விவசாயம் எதுவுமே செய்யப்படவில்லை. எனவே இதுதொடர்பாக விஜயகாந்த்துக்குப் புதுச் சிக்கல் ஏற்படும் என வருவாய்த்துறை தரப்பில் கூறப்படுகிறது.