For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரான்ஸ் உள்ளாட்சி தேர்தலில் 12 தமிழர்கள் வெற்றி

By Staff
Google Oneindia Tamil News

Alain Anandane, Asamta Thayalini William-Reginald, Naguleswari Ariyaratnam, Sophia Soosaipillai and Lilawtee Rajendram
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் 12 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வெளிநாட்டு வாழ் தமிழர்களின் அரசியல் பங்கேற்பில் இந்த வெற்றி புதிய மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க கண்டங்களில் குடிபெயர்ந்துள்ள தமிழர்கள் உள்நாட்டு அரசியலில் முக்கிய பங்கை வகிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, இளம்தலைமுறை ஈழத்தமிழர்களிடம் பரபரப்பான அரசியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கவேண்டும் என்ற புதிய உத்வேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் புறநகர்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இதில் 12 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

நகுலேஸ்வரி ஆரியரத்தினம், சர்மிளா சபாரத்தினம், சோபியா சூசைபிள்ளை, ப்ரீதி நவநீதராஜூ, அஸம்ந்த தயாளினி வி்ல்லியம் ரெஜினால்டு, அருள்சாந்தம் புவனேஸ்வரராஜா, கலையரசி ரவீந்திரநாதன் ஆகிய ஈழத் தமிழர்கள், அலைன் ஆனந்தன், சந்திரசேகரன் பரசுராமன், ஷாமா நீலவண்ணன் ஆகிய பாண்டிச்சேரி தமிழர்கள், மேரி தார்வேஸ் போர்னாஸ் என்ற குவாதுலோப் தமிழர் மற்றும் லீலாவதி ராஜேந்திரம் என்ற மொரிஷியஸ் தமிழர் என மொத்தம் 12 ஆவர்.

மார்ச் மாதத் தொடக்கத்தில் நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 14 ஈழத்தமிழர்கள் போட்டியிட்டனர். முதல் ரவுண்டிலேயே 5 பேர் வெற்றிபெற்றனர்.


இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் வெற்றிபெற்ற ஈழத்தமிழர்கள் எல்லோரும் இடதுசாரி அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பது. ஆளும் வலதுசாரி அரசின் கொள்கைக்கு எதிராக தமிழ் சமுதாயத்தினர் வழங்கிய மறைமுக தீர்ப்பு இது என்று பிரான்ஸ் வாழ் தமிழ் எழுத்தாளர் கி.பி. அரவிந்தன் குறிப்பிடுகிறார்.


கடந்த 1664ல் பாண்டிச்சேரியில் பிரஞ்சு தேச கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டதில் இருந்து பிரஞ்சு- தமிழர்களின் பாரம்பரியங்களுக்கு இடையிலான உறவுப்பாலம் காலம்காலமாக இன்னும் தொடர்கிறது.

தமிழர் பூமியில் தங்கள் காலனியாதிக்க தலைமையிடங்களை அமைத்த இரு பெரும் ஐரோப்பிய சக்திகள் என்றால் அவை பிரஞ்சு மற்றும் டச்சுக்காரர்கள்தான். தமிழகத்தில் தரங்கம்பாடி (டிரான்கூபார்) துறைமுக நகரில் டச்சுக்காரர்கள் முகாமிட்டிருந்தனர்.

தமிழர்களின் நவீன வரலாற்றில் பிரஞ்சு கலாசாரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பிரான்ஸ் மற்றும் அதன் காலனி நாடுகளில் எல்லாம் தமிழர்கள் குடியேறி இப்போதும் வாழ்ந்து வருகின்றனர்.

பிரஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகள் சுதந்திர இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது ஏராளமான தமிழர்கள் பிரான்சுக்கு குடிபெயர்ந்தனர். பிரஞ்சு தேச அரசியலில் தமிழர்கள் குறிப்பிட்ட பிரதிநிதித்துவத்தைப் பெற்றுவந்தபோதும், ஈழத்தமிழர்களின் வரவுக்குப் பிறகே தமிழர்களின் அரசியல் அந்தஸ்து, ஒரு புதிய தனிப்பட்ட அடையாளத்தைப் பெற்றது எனலாம்.

பிரான்சில் மட்டும் 1 லட்சத்து 25 ஆயிரம் தமிழர்கள் வசிக்கின்றனர். இதில் 50 ஆயிரம் பேர் ஈழத்தமிழர்கள். பிரான்ஸ்வாழ் தமிழர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட குறிப்பிட்ட நிகழ்வு என்றால், கடந்த ஜனவரி மாதத்தில் நாடு பேதமின்றி தமிழர்கள் என்ற ஒரே அடையாளத்தோடு ஒற்றுமையுடன் பொங்கல் திருநாளை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கலாசாரத்தை வளர்க்கும் முகமாக பாரிஸ் நகர் லா சேப்பல் பகுதியில் 4 தமிழ் புத்தகக் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றனவாம்.

இதேபோல் கடந்த ஆண்டு நார்வே நாட்டில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்ற 8 ஈழத்தமிழர்களில் 5 பேர் பெண்கள். இதில் 19 மற்றும் 22 வயதே ஆன இளம் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் 70 சதவீத ஈழத் தமிழ் பெண்கள் ஆர்வமாக வந்து ஓட்டளித்துள்ளனர்.

அரசியல் விழிப்புணர்வு, கல்வி, உணர்வோடு ஊறிவிட்ட ஜனநாயக மாண்பு ஆகிய காரணிகளால் இந்த வெளிநாட்டு தமிழர்களிடையே பெரும் அரசியல் எழுச்சி ஏற்பட்டுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X