தேர்தல் வழக்கு - விஜயகாந்த் கோர்ட்டில் ஆஜர்
ஆற்காடு: வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் உள்ள நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் ஆஜரானார். அவரைக் காண கட்சித் தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர். அவர்களைப் போலீஸார் தடியடி நடத்திக் கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2006ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது ராணிப்பேட்டை தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட டாக்டர் பாரியை ஆதரித்து மேல்விஷாரம், கத்திவாடி ஆகிய பகுதிகளில் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது விதிமுறைகளை மீறி இரவு 10.20 மணி வரை பிரச்சாரம் செய்ததாக விஜயகாந்த் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை ஆற்காடு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் விஜயகாந்த் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட் குணசேகரன் உத்தரவிட்டிருந்தார். அதற்கிணங்க இன்று காலை 10.55 மணியளவில் விஜயகாந்த் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.
அவருடன் தேமுதிக மாநில இளைஞரணி செயலாளரும், விஜயகாந்த்தின் மைத்துனருமான எல்.கே. சுதீஷ், வழக்கறிஞர் அணி செயலாளர் மணிமாறன், வழக்கறிஞர்கள் தட்சிணாமூர்த்தி, பன்னீர்செல்வம், ஆற்காடு வழக்கறிஞர் செல்வராஜ் ஆகியோரும் வந்திருந்தனர்.
விஜயகாந்த் நீதிபதி முன்பு ஆஜரான பின்னர், வழக்கை அடுத்த மாதம் 18ந் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன் பின்னர் விஜயகாந்த் வெளியே வந்தார்.
விஜயகாந்த் வருவதை அறிந்து கோர்ட்டில் தேமுதிகவினர் பெருமளவில் திரண்டனர். இதன் காரணமாக தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். இதையடுத்து தேமுதிகவினரை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
விசாரணை முடிந்து வெளியே வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், என் மீதான இந்த வழக்கு அரசின் பழிவாங்கும் செயல்.
எனது பண்ணை நிலம் தொடர்பாக நான் ஏற்கனவே தெளிவாக விளக்கி விட்டேன். அரசு நிலமாக இருந்தால் தாராளமாக எடுத்துக் கொள்ளட்டும்.
நாங்களாக இதுவரை யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. பத்திரிக்கைககள்தான் அந்தக் கட்சியுன் கூட்டணி, இந்தக் கட்சியுடன் கூட்டணி என்கிறார்கள்.
உண்மையில் எங்களது பலத்ைதப் பார்த்து விட்டு மற்ற கட்சிகள்தான் கூட்டணி வைக்க விரும்பி வருகிறார்கள் என்றார் விஜயகாந்த்.