கொஞ்சம் அரசு நிலம் இருந்திருக்கு...விஜய்காந்த்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் மொத்தமாக வாங்கிய நிலத்தில் சிறிது அரசு நிலம் இருந்துள்ளது. அதை எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். நான் ஆக்கிமிப்பு ஏதும் செய்யவில்லை என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

மதுராந்தகம் அருகே விஜயகாந்த் 28 ஏக்கர் வரை அரசு நிலத்தை 'ஸ்வாகா' செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் போட்டிருந்த வேலிகளை பிடுங்கி எறிந்துவிட்டு நிலத்தை மீட்டனர் அதிகாரிகள். இதைத் தான் கொஞ்சம் அரசு நிலம் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.

சென்னையில் தேமுதிக நிர்வாகியின் திருமணத்தை மனைவி பிரேமலதாவுடன் சேர்ந்து நடத்தி வைத்து விஜயகாந்த் பேசுகையில்,

நான் அரசியலில் பழிவாங்கப்படுகிறேன். எனக்கு பாதுகாப்பு இல்லை.

தொண்டர்கள்தான் எனக்கு பாதுகாப்பு. எனக்கு கருப்பு பூனைப் படையும், காவலும் தொண்டர் படையினர்தான். இதனால் நான் யாரையும் கண்டு பயப்படுவதில்லை.

யார் யாரையோ விட்டு என்னை பற்றி அவதூறாக பேச வைக்கிறார்கள். அதை கண்டு பயப்படுவதும் கிடையாது. அப்படி பேசுபவர்களுக்கு பதில் சொல்வதும் கிடையாது.

நானும் எனது மனைவியும் நல்ல முறையில் குடும்ப வாழ்க்கை வாழ்கிறோம். என்னில் அவர் 50 சதவீதம். நான் சோர்வடைந்தால் ஊக்கம் தருவது எனது மனைவிதான். நிம்மதியாக வாழ வேண்டுமானால் கணவன்-மனைவி விட்டு கொடுத்து வாழ வேண்டும்.

பிரச்சினை இல்லாத வீடு என்பதே கிடையாது. இவ்வளவு பிரச்சினைகளுக்கும் நடுவிலும் நான் நிம்மதியாக இருக்க மனைவி பிரேமலதாதான் காரணம்.

எனது மண்டபத்தை தொடர்ந்து பண்ணையில் கை வைத்துள்ளார்கள். இதற்கெல்லாம் பயப்படமாட்டேன். மக்களிடம் எனக்கு உள்ள செல்வாக்கை, நல்ல பெயரை கெடுக்க சதி செய்கிறார்கள்.

விஜயகாந்த் அரசு புறம்போக்கு நிலத்தை வளைத்து போட்டு விட்டான் என செய்தி பரப்புகின்றனர். நான் மொத்தமாக வாங்கிய நிலத்தில் சிறிது அரசு நிலம் இருந்துள்ளது. அதை எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். நான் ஆக்கிமிப்பு ஏதும் செய்யவில்லை.

அந்த நிலத்திற்கான பத்திர பதிவின் போது அரசு நிலம் இருப்பதை யாரும் கூறவில்லை. இப்போது பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்.

விஜயகாந்த் நடிகர், சொத்து சேர்த்துவிட்டான் என்கிறார்கள். நான் ஒன்றும் மக்கள் பணத்தை கொள்ளையடித்து சொத்து வாங்கவில்லை. எனது சொந்த சம்பாத்தியத்தில்தான் வாங்கி உள்ளேன். இவர்கள் எடுத்து கொண்டிருக்கும் சொத்துக்களின் மூலம் ரூ.100 கோடியை இழந்துள்ளேன் என்று கூறினால் அதற்கு வருமானவரி கணக்கு காட்ட முடியுமா என சிறுபிள்ளைதனமாக பேசுகிறார்கள்.

அவர்கள் என்னை கூட்டணிக்குள் இழுக்க முயற்சிக்கிறார்கள். நான் எப்போதும் மக்களோடும், தெய்வத்தோடும்தான் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளேன்.

இப்போது ஒரு பவுன் தங்கம் ரூ.10,000தை தாண்டிவிட்டது. எனவே தேமுதிகவினர் யாரிடமும் வரதட்சணை வாங்கவோ கொடுக்கவோ கூடாது என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற