'ஹிண்ட்ராப்' மனோகரனை விடுவிக்க மலேசிய அரசு மறுப்பு
கோலாலம்பூர்: மலேசிய சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஹிண்ட்ராப் தலைவர்களில் ஒருவரான மனோகரனை விடுதலை செய்ய முடியாது என்று மலேசிய அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையையும் அது நிராகரித்துள்ளது.
மலேசிய தமிழர்களுக்கு, மலாய் இனத்தவருக்கு சமமான உரிமைகள், சலுகைகளை வழங்கக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோலாலம்பூரில் மாபெரும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தை இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு ஏற்பாடு செய்திருந்தது.
இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஹிண்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மனோகரன் உள்ளிட்ட ஐந்து பேர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எந்தவித விசாரணையும் இன்றி காலவரையின்றி சிறையில் வைத்திருக்க இந்த சட்டம் வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த மலேசிய மாகாண சட்டசபைத் தேர்தலில் மனோகரன், ஜனநாயக நடவடிக்கைக் கட்சி சார்பில் செலாங்கூர் மாகாணத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகியுள்ளார்.
எனவே அவரையும் மற்ற நான்கு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்தது. பல்வேறு எதிர்க்கட்சிகளும் கூட மனோகரனை விடுதலை செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தின.
ஆனால் உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் இதை ஏற்க மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம். அதை புறக்கணிக்க முடியாது.
மனோகரன் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட அவரை விடுதலை செய்ய முடியாது. சட்டசபை நடவடிக்கைகளில் அவர் கலந்து கொள்ள அனுமதிக்க முடியாது. அவரால் இன்னும் நாட்டுக்கு ஆபத்து இருப்பதாக அரசு கருதுகிறது.
அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்பதால் மட்டும் அதை ஏற்று விடுதலை செய்து விட முடியாது என்றார் அவர்.
ஆனால் அரசின் முடிவை ஜனநாயக நடவடிக்கை கட்சித் தலைவர் லிம் கிட் சியாங் கண்டித்துள்ளார். இதுகுறித்து லிம் கூறுகையில், மக்களின் குரலை அரசு செவிமடுக்காமல் பிடிவாதம் பிடிப்பது சரியல்ல. தேர்தலில் இந்த அரசுக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பை அரசு இன்னும் மதிக்கவில்லை. இது கண்டனத்துக்குரியது என்றார்.