சென்னையில் தங்க நிற சொகுசு பஸ்கள்
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தங்க நிற சொகுசு பஸ்களை அறிமுகம் செய்யவுள்ளது.
முதல் கட்டமாக 30 வழித் தடங்களில் இந்த 75 சொகுசு பஸ்கள் விடப்படவுள்ளன. இந்த புதிய பஸ்கள் தொடக்க விழா இன்று மாலை சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் நடை பெறுகிறது.
உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பஸ்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.
நவீன மாதாந்திர பயண அட்டை
இதற்கிடையே முறைகேடுகளைத் தடுக்க நவீன மாதந்திர பயண அட்டையும் தயாரிக்கப்பட்டு வினியோகிகப்படவுள்ளது.
ரூ. 600 மதிப்புள்ள அட்டையை மாதம் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். ஏ.சி. பஸ்கள் தவிர மற்ற அனைத்து மாநகர பஸ்களிலும் எந்த இடத்தில் இருந்தும் எந்த இடத்துக்கும் இந்த அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கலாம்.
லேமினேஷன் செய்யப்பட்டு விசிட்டிங் கார்டு அளவில் உள்ள இந்த புதிய பயண அட்டையையும் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைக்கிறார்.
பெண் போலீஸுக்கு சிறப்பு பஸ்:
இதற்கிடையே இந்தியாவிலேயே முதன் முறையாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் பணிபுரியும் ஆயுதப்படை பெண் போலீசாருக்கு நவீன பஸ் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த நவீன பஸ்சில் பெண் போலீசார் உடை மாற்றும் அறை, நவீன கழிப்பிடம், போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்த நவீன பஸ் சென்னையில் அறிமுகப்படுத்தப்படும்.
இது போன்ற பஸ்கள் கரூர், மதுரை போன்ற இடங்களில் தயாராகி வருகிறது.