ரவுடி பங்க் குமாரை கொன்ற போலீசுக்கு விருது
சென்னை: ரவுடி பங்க் குமாரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற தனிப்படை போலீசாருக்கு வீர தீரச் செயலுக்கான முதல்வர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை செயலாளர் மாலதி வெளியிட்ட அரசாணை விவரம்:
கொலை, ஆள் கடத்துதல், கற்பழிப்பு, கட்டப் பஞ்சாயத்து உள்பட 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் அசோக்குமார் (எ) பங்க் குமார். அவரை கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதியன்று நடந்த என்கவுன்டரில் இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் தலைமையிலான தனிப்படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்த போலீஸ் படையினருக்கு வீர தீர செயலுக்கான தமிழ்நாடு முதல்வர் விருது வழங்க வேண்டும் என்று டிஜிபி பரிந்துரைத்தார். அவரது பரிந்துரையை ஏற்று விருதுகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன், எஸ்ஐக்கள் மோகன்ராஜ், பூமாறன், ரவிக்குமார், அருள்மணி மற்றும் தலைமைக் காவலர்கள் தேவராஜ குமரேசன் (வில்லிவாக்கம்),
வின்சென்ட் (எம்.ஜி.ஆர்.நகர்), பீட்டர் (எம்.ஜி.ஆர்.நகர்) ஆகிய 8 பேருக்கும் விருது வழங்கப்படுகிறது. 12.12.06 முன்தேதியிட்டு, மாதப்படியாக ரூ.100ம் இவர்களுக்கு வழங்கப்படும்.
சென்னையில் இதற்கான விழாவில் முதல்வர் கருணாநிதி அந்த விருதுகளை வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.