குழந்தைகள் மாற்ற குழப்பம்: நாளை டிஎன்ஏ சோதனை
சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில், தவறுதலாக மாற்றப்பட்ட இரு குழந்தைகளுக்கு நாளை டிஎன்ஏ சோதனை நடத்தப்படவுள்ளது. சோதனைக்குப் பின்னர் இரு குழந்தைகளும் உரிய தாயுடன் சேர்த்து வைக்கப்படுவர்.
சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனையில் பரகத் பேகம், காமாட்சி ஆகியோருக்கு ஒரேநேரத்தில் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்தன.
பரக்கத் பேகத்திற்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், காமாட்சிக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் முதலில் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால் டாக்டர்கள் மாற்றிக் கூறியதால் பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து இரு தாய்மார்களும் தங்களுக்கு ஆண் குழந்தைதான் பிறந்தது, மருத்துவமனை ஊழியர்கள் குழந்தைகளை மாற்றி விட்டதாக கூறி போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து டிஎன்ஏ சோதனை மூலம் யாருக்கு எந்தக் குழந்தை பிறந்தது என்பதை தீர்மானிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து மாஜிஸ்திரேட் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்தவுடன், குழந்தைகளின் ரத்த மாதிரியை எடுத்து சாந்தோமில் உள்ள தடயஅறிவியல் பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பவுள்ளனர். அங்கு இரு குழந்தைகளின் தந்தைகளின் மாதிரியுடன் ஒப்பிட்டு யாருக்கு எந்த குழந்தை என்பது முடிவு செய்யப்படும்.
இந்த சோதனைமுடிவு தெரிய ஒரு வாரகாலம் ஆகுமென்பதால் இப்போதைக்கு மருத்துவமனை ஆவணங்களில் உள்ளபடி குழந்தைகளை 3 நாள்களுக்குள் பெற்றுச் செல்லுமாறு சம்பந்தப்பட்ட பெற்றோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதன்படி காமாட்சிக்கு பெண் குழந்தையும், பரக்கத் பேகத்திற்கு ஆண் குழந்தையும் தரப்படும்.












Click it and Unblock the Notifications