இலங்கை- பேச்சுவார்த்தைக்கு இந்தியா உதவ வேண்டும்: சட்டசபையில் தீர்மானம்

இலங்கையில் அமைதி திரும்ப, அரசியல் ரீதியிலான சுமூக தீர்வு ஏற்பட சமாதான பேச்சுவார்த்தைக்கு, மத்திய அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டசசபையில் இன்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் இலங்கை பிரச்சனை தொடர்பாக ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் சுதர்சனம் (காங்.), ஜி.கே.மணி (பாமக), கண்ணப்பன் (மதிமுக) ஆகியோர் பேசினர்கள்.
விவாதத்தில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதியும் தனது கருத்துக்களை தெரிவித்தார். பின்னர் அரசின் சார்பாக தீர்மானம் ஒன்றை அவர் கொண்டு வந்தார்.
தீர்மானத்தை தாக்கல் செய்து கருணாநிதி பேசுகையில், இந்த அவையில் நிறைவேற்றப் படும் தீர்மானம் பரிவு உணர்வோடும், இரக்க சிந்தனையோடும், தமிழர் களுக்கு உதவிடும் பாச மனப்பான்மையோடும் கொண்டு வரவேண்டும். அதே அடிப்படையில் இதன் மீது விவாதம் நடைபெற்று இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
ஆனால் ஜி.கே.மணி என்ன நோக்கத்தில் இந்த தீர்மானத்தை கொண்டு வர நினைத்தாரோ அந்த நோக்கம் சிதையும் வகையில் சில வார்த்தை பிரயோகம் அமைந்து விட்டதற்காக நான் வருத்தப்படுகிறேன்.
இந்திய பேரரசின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு நிர்வாகத்தை நாம் நடத்தி வருகிறோம். இந்த அவையில் எழுப்பப்படும் கருத்து, நிறைவேற்றப்படும் தீர்மானம் அந்த ஆணிவேரை அசைத்துவிடக்கூடாது. அதுதான் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகும்.
இங்கே பேசிய மதிமுக உறுப்பினர் கண்ணப்பன், சுதர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு மாறுபட்ட கருத்தை சொல்ல வந்த போது உணர்ச்சி வேகத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்து விட்டார். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு வேண்டுகிறேன்.
நேபாளம் போல வென்றிருக்கலாம்!
இலங்கை பிரச்சனை தொடங்கிய காலம் முதல் செல்வா உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பல்வேறு அறவழிப்போராட்டங்கள், கிளர்ச்சிகள் நடத்தினார்கள். அது பயனளிக்காத நிலையில் இலங்கை ஆதிக்கத்தின் கொடுமையில் இருந்து விடுதலை பெற்றே ஆக வேண்டும் என்று சிலர் போராளிகளாக மாறினார்கள்.
அவர்கள் அனைவரும் ஒரே குழுவாக ஒற்றுமையுடன் இருந்து போராட்டம் நடத்தி இருந்தால் இப்போது நேபாளத்தில் கிடைத்திருப்பது போல ஒரு வெற்றியை அவர்கள் ஈட்டியிருக்க முடியும். ஆனால் அங்குள்ள போராளி குழுக்களுக்குள்ளே நடந்த போராட்டம் தான் இன்று இந்த அவையிலே அவர்களுக்காக பரிந்துரை செய்து பேசும் நிலைமை உருவாகி உள்ளது. அப்போதே கூட நான் சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.
ஒரே குழுவாக இருந்து தமிழர்களுக்குரிய உரிமைகளை பெறும் எண்ணம் அவர்களிடம் இல்லாமல் ஒரு குழு மற்ற குழுவினரை மாய்க்க வேண்டும் என்று வெட்டிக் கொண்டும், சுடப்பட்டும் மாய்ந்தார்கள். அமிர்தலிங்கம் போன்ற தலைவர் கொல்லப்பட வேண்டியவரா? விருந்துக்கு என்று வந்து அவரையும், அவரது தோழர்களையும் பிணமாக சாய்த்தார்கள்.
தாங்கிப் பிடிக்கும் தாய் உள்ளம்:
அதனால் தான் உலகில் பல விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்றும் கூட இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. நமக்குள்ளே ஒற்றுமையின்றி பகைவருக்கு இடம் கொடுத்துவிட்டதால் தான் சிங்கள ராணுவம் நம்மீது ஏறி மிதிக்கிறது. ஆனாலும் கூட நம் குழந்தை தவறி விழும் போது தாங்கி பிடிக்கும் தாய் உள்ளத்துடன் நாம் செயல்படுகிறோம்.
தொப்புள் கொடி உறவு என்று சொன்னால் மட்டும் போதாது. அந்த உறவுகளை நாம் காப்பாற்ற வேண்டும். அதற்காக இங்கே ஒரு தீர்மானம் வருவதை நானும் ஆதரிக்கிறேன். அதே நேரத்தில் இந்திய அரசை குறை கூறி பயன் இல்லை. அவர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே அவர்களை பழி சொல்லியும், குறை கூறியும் பயன் இல்லை.
அந்த குடும்பம் இன்னும் மனித நேயத்துடன் தான் இருக்கிறது என்பதற்கு வேலூர் சிறைச்சாலை சம்பவமும், சோனியா மன்னிப்பு அளித்ததும் உதாரணங்களாகும். அதன் அடிப்படையில் அவர்கள் தமிழர்களின் உயிருக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். நீங்கள் இதை ஆதரித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் முதல்வர்.
பின்னர் தீர்மானத்தை அவர் வாசித்தார். அதில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கு மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவினர் இடையேயும் பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இலங்கையில் அமைதியை ஏற்படுத்த, முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேசிய சுதர்சனம், ஜி.கே.மணி, கண்ணப்பன் ஆகியோர் இத்தீர்மானத்தை தங்கள் கட்சி வரவேற்பதாக தெரிவித்தனர்.