பழனி மலையில் நக்சலைட்டுகள் ஊடுறுவல்? தீவிர வேட்டை!
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப் பகுதியைத் தொடர்ந்து தற்போது பழனி மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தேனி மலைப் பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. முதலில் பெரியகுளம் அருகே முருகமலைப் பகுதியில் நக்சலைட்டுகள் சிக்கினர். இதையடுத்து வருசநாடு உள்ளிட்ட சில பகுதிகளில் நக்சலைட்டுகள் வேட்டையாடப்பட்டனர்.
சமீபத்தில் கொடைக்கானல் மலைப் பகுதியில் நடந்த நக்சலைட் வேட்டையில், நவீன் பிரசாத் என்கிற நக்சலைட் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த 9 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
அப்பகுதியில் அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பழனி மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அங்கு அதிரடிப்படையினர் விரைந்துள்ளனர். வீரப்பன் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்ட 120 அதிரடிப்படை வீரர்கள் பழனியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
அவர்களிடம் டிஐஜி கிருஷ்ணமூர்த்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். பண்ணைக்காடு, பாச்சலூர், தாண்டிக்குடி, மறையூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நக்சலைட் வேட்டை குறித்து டிஐஜி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், கொடைக்கானல் பகுதியில் தப்பி ஓடிய தீவிரவாதிகளைப் பிடிக்க நடவடிக்ைககள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அங்கு அதிரடிப்படை முகாமை நிரந்தரமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.