மருத்துவமனை அலங்கோலம்: நாகையில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்
நாகை: நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நிலவும் அவல நிலையை கண்டித்து அதிமுக சார்பில் நாளை ஆர்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், நாகை அரசு மருத்துவமனையில் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளன. ஆனால் போதிய டாக்டர்கள் இல்லை. சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகள் எடுக்கப்பட்டால் முடிவுகள் வர 15 நாட்கள் ஆகின்றன.
இந்த தாமதத்தால் சிகிச்சையும் தாமதமாகிறது. இதனால் நோயாளிகள் இறக்கக் கூடிய சூழல் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன. சாந்திமோகன் அறக்கட்டளையின் கீழ் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மருத்துவமனையில் பெண் டாக்டரே இல்லை என்றும், கடந்த 24ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட 12 கர்ப்பிணிகளில் ராதிகா என்பவருக்கு பிரசவம் சிக்கலாகி விட்டதாகவும் அதனால் அவருக்கு குழந்தை இறந்தே பிறந்ததாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்த அவல நிலைக்கு காரணமான திமுக அரசை கண்டித்தும், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள நிர்வாக சீர்கேடுகளை உடனே தீர்க்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் நாகை அரசு தலைமை மருத்துவமனை முன் நாளை கண்டன ஆர்பாட்டம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.