கல்விக்கட்டணம் உயர்த்தினால் போராட்டம்- பாமக எச்சரிக்கை
கிருஷ்ணகிரி: பொறியியல் கல்லூரி கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை எடுத்தால் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
பொறியியல் கல்லூரிகளில் சேர தகுதி மதிப்பெண் குறைத்துள்ளது தேவையற்றது. தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பவே தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தமாக ஒரு லட்சம் பொறியியல் இடங்களே உள்ளன. ஆனால் அடைவிட அதிக அளவிலான மாணவர்கள் 60 சதவீதத்துக்கும் மேலாக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தனியார் கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு ஆதரவாக, பணப்பெட்டியை நிரப்புவதற்காகவே தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கட்டணம் உயர்த்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டால் பாமக மாணவர் சங்கம் எதிர்த்துப் போராடும்.
கல்விக்கட்டணத்தை குறைப்பதுடன் கட்டாய நன்கொடையை தடுத்தால் மட்டுமே காலியிடங்கள் நிரம்பும். ஏழை, எளிய மாணவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படவேண்டும்.
பிளஸ்டூ தேர்வில் தனியார் பள்ளி மாணவர்களே முதலிடம் பிடித்துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களில் ஒருவர்கூட மொத்த மதிப்பெண்களிலோ அல்லது தனிப்பாடத்திலோ முதல் 3 இடங்களில் ஒன்றைக்கூட பிடிக்கவில்லை. இந்தநிலைக்கு சமச்சீர் கல்வி இல்லாததே காரணம்.
அரசுப்பள்ளிகளில் தரமான கல்விக்கு அரசு பொறுப்பேற்பதுடன் உறுதி அளித்தபடி இந்தாண்டே சமச்சீர் கல்வியைக் கொண்டுவரவேண்டும்.
முதல்வர் விளக்கணும்:
தமிழகத்தில் காவல்துறையின் செயல்பாடு திருப்தியளிப்பதாக சட்டசபையில் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஆனால் மானியக் கோரிக்கை கொள்கை புத்தகத்தில் அச்சடித்துள்ள புள்ளி விவரங்கள் அதற்கு நேர்மாறாக உள்ளன. இதற்கு தமிழக முதல்வர்தான் விளக்கமளிக்கவேண்டும்.
சாலை விபத்துகளில் இந்தியாவிலேயே தமிழகத்துக்குத்தான் முதலிடம். சாலை விபத்துகள் குறித்து ஆராய்ந்து அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஊழல், ஓட்டநர் உரிமம் பெறுவதில் முறைகேடுகள் ஆகியவையும் விபத்துகளுக்குக் காரணமாக உள்ளன.
புதிதாகப் போடப்படும் சாலைகள், மழை பெய்தால் குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது. ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கூட்டு பரிமாற்றத்தால்தான் இந்த நிலை.