தமிழகம் ஆயுதக் கிடங்கு ஆகிவிட்டது- அதிமுக 'திடுக்'
சென்னை: தமிழகம் ஆயுதக் கிடங்காக மாறிவிட்டது போலிருக்கிறது என்று சட்டசபையில் அதிமுக கடுமையாக சாடியுள்ளது.
சட்டசபையில் போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தை நிறைவுசெய்து அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
கடந்த 1991ல் அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாதான், ராஜிவ்காந்தியை கொன்ற விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.
அதிமுக அரசின் கடுமையான நடவடிக்கையால்தான் சந்தனக்கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டான்.
இதுபோன்ற நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் கொலைப்பட்டியலில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 'இசட்' பிளஸ் பிரிவு பாதுகாப்பை அளிக்க இந்த அரசு மறுத்துவிட்டது.
ஜெயலலிதாவின் வீட்டுக்குள் அடையாளம் தெரியாத சிலர் அத்துமீறி நுழைந்ததை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவருக்கு ஏதாவது அசம்பாவிதமாக நேர்ந்தால் அதற்கு இந்த ஆட்சியாளர்கள்தான் பொறுப்பு.
இசட் பிரிவு பாதுகாப்பு தர தமிழக அரசு மறுத்ததையடுத்து வேறு வழியில்லாமல்தான் நீதிமன்றத்தி்ன் துணையை ஜெயலலிதா நாடினார்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடிக்கடி தேவர் சிலை அவமதிப்பு சம்பவங்கள் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி கத்தியால் குத்தப்பட்டார்.
உத்தபுரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைவதற்குக் தடையாக இருந்த தீண்டாமை சுவரை இடித்ததால் சில 'உயர் ஜாதி' வகுப்பினர் காட்டுப்பகுதியில் போய் தங்கியிருப்பதால் இன்னும் பதற்றம் நீடிக்கிறது.
அதியமான்கோட்டையில் காவல்நிலையத்திலேயே துப்பாக்கிகள் திருடப்பட்டன.
ஆளும் கட்சியான திமுக நிர்வாகிகள் கூலிப்படையை ஏவி கொல்லப்பட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளுக்கு சப்ளை செய்வதற்கு ஆயுதங்கள், வெடிகுண்டு தயாரிப்பதற்கான இரும்பு பைப் மற்றும் வெடிப்பொருட்கள் ஏராளமாக சமீபத்தில் கைப்பற்றப்பட்டது.
பல பகுதிகளில் நக்ஸல்கள் மற்றும் மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களையெல்லாம் பார்க்கும்போது தமிழகம் மிகப்பெரிய ஆயுதக்கிடங்காக மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காதவாறு அரசு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு ஜெயராமன் பேசினார்.