• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண".. கருணாநிதி சம்மதம்!

By Staff
|

சென்னை: கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று தனது 85வது பிறந்த நாளை வழக்கம் போல கொண்டாடுவதற்கு முதல்வர் கருணாநிதி சம்மதம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்த நாள் விழா வருகிற ஜூன் 3ம் தேதி வருகிறது. ஆனால் சமீபத்தில் முதல்வர் விடுத்த இரு அறிக்கைககளில் தனது பிறந்த நாளை கொண்டாட விரும்பவில்லை என்றும், அந்த சமயத்தில் தன்னை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு திமுகவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கூட்டணிக் கட்சியான பாமகவின் குடைச்சல் மற்றும் சிக்கலில் மாட்டி ராஜினாமா செய்த அமைச்சர் பூங்கோதை விவகாரம் ஆகியவை காரணமாகவே இந்த முடிவை கருணாநிதி எடுத்ததாகக் கூறப்பட்டது.

இந் நிலையில் கட்சிப் பொதுச் செயலாளரும், நிதியமைச்சருமான அன்பழகன், சில தீய நோக்கம் கொண்டவர்களுக்காக நாம் எப்படி முதல்வரின் பிறந்த நாளைக் கொண்டாடமல் விட்டு விட முடியும். எனவே முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை இந்தியாவே வியக்கும் வண்ணம் பிரமாண்டமாக, உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும் அமைச்சர் ஸ்டாலினும் பிறந்த நாளை இளைஞர் அணி சார்பில் ஒரு மாத காலம் தொடர்ந்து பிரமாண்டமாக கொண்டாடியே தீருவோம் என அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று கவிதை வடிவில் முதல்வர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் லட்சோபம் லட்சம் தொண்டர்களுடனான வலுவான உறவை என்னால் எப்படி துண்டித்துக் கொள்ள முடியும். அவர்களின் அன்புக்கு தலைவணங்க வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இதுதொடர்பாக கருணாநிதி எழுதியுள்ள கவிதை:

முத்தமிழ் வித்தகராம் நல்லோர்க்கும்

முதுபெரும் புலமையில் வல்லோர்க்கும்

முரசு கொட்டி மொழிப்போரில் அணிவகுத்தோர் அனைவருக்கும்

அரசொன்று வருமென்று கருதிடாமல் அறப்போர்களிலே

ஆவிதனை அர்ப்பணித்தோர்க்கும்; அகவை எண்பத்தி ஐந்தில்

அன்பு குழைத்து, அய்யன்மீர்! வீர வணக்கம் செலுத்துகின்றேன்.

வழித்தோன்றல்களாய் அவர்க்கு வாய்த்த குடும்பத்தார்க்கும்

கழிபேருவகைப் பொங்கி வழிந்திட நன்றிகளைக் குவிக்கின்றேன்.

அலை அலையாய்ப் பெருகி அணி வகுத்துத் திராவிட இயக்க

அரண் காத்திட ஆர்த்தெழாமல் அன்றைக்கு அயர்ந்திருப்பின்

தீரா விடமன்றோ நம்மினத்தைத் தீர்த்துக் கட்டியிருக்கும்

ஈரோடு சிங்கமன்றோ எழுந்து முழங்கிற்று!

போராட வா தம்பியென்று காஞ்சியின் புறநானூறும் அழைத்தபோது

வேரோடு தமிழினம் வீழாமல் காப்பதற்கு

வெகுண்டெழுந்து வந்தவர்களில் ஒருவன் நான்!

பகுத்துணர்ந்து பல்லாண்டுகளாக இனமுழக்கம் செய்கின்ற

பண்பாளர் எனக்கு மூத்த பேராசிரியர்

பழகு தமிழில் ஆணையிட்டு அழைத்த பிறகும்

பகுத்தறிவுப் பாசறையாம் பழைய தாய்க் கழகத்து வீர

மணிக்குரலும் விரிவானமாய் மனம் தோய்த்து

பல்லாயிரம், பல லட்சம் உடன் பிறப்பாளர்

பாசத்தை வெள்ளமாய்ப் பாய விட்டுப்

"பணிந்திடுக என் அன்புக்கு!" என ஆணையிட்ட பின்னும்

துணிந்து நான் துண்டிக்க முடியுமோ உடன்பிறப்புத் தொடர்பையெல்லாம்;

அதனாலே பாவேந்தர் பாடல் வரி போல

"தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண" ஒப்பி விட்டேன்!

உன் வாழ்த்தினையேற்று

என் வணக்கமும் வாழ்த்தும் வட்டியும், முதலுமாய் வழங்குதற்கே! என்று கூறியுள்ளார் முதல்வர்.

இதையடுத்து முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் வருகிற ஜூன் 3ம் தேதி வழக்கம் போல உற்சாகமாக கொண்டாட வழி பிறந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X