For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பங்கு முதலீடு: மீண்டும் ஜெ எழுப்பும் 10 கேள்விகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய பங்குச் சந்தையில் செய்யப்படும் முறைகேடான முதலீடுகள் குறித்து நான் எழுப்பிய கேள்விகளுக்கு விடை சொல்வதற்கு பதிலாக, மத்திய நிதியமைச்சகம் உண்மையை மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பங்கேற்புக் குறிப்புகள் (Participatory notes ) என்ற பங்கு வர்த்தக முதலீட்டு முறைகள் வழியாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் செய்யும் முதலீடுகள் முறைகேடான செயல்களுக்கு காரணமாகி விடும் என்ற கவலையுடன் நான் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சகம் சில பதில்களை அளித்துள்ளது.

ஆனால் இந்த பதில்கள் என் கேள்விகளுக்கு விடை சொல்வதற்கு பதிலாக, உண்மையை மூடி மறைக்கும் முயற்சியாகவே தெரிகிறது. 10 கேள்விகளை நான் எழுப்பினேன். எனவே பத்து பதில்களை எனக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் கருதியது போல் தெரிகிறது.
எண்ணிக்கையைப் பார்த்த அவர்கள், நான் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பதிலோ, அந்த கேள்விகளில் பொதிந்துள்ள அக்கறை உணர்வுக்கு மதிப்பு அளிப்பதிலோ கவனம் செலுத்தத் தவறியுள்ளனர்.

கேள்வி 1: இந்தியாவிற்கும் மொரீஷியஸ்ஸுக்கும் இடையே உள்ள இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு மொரீஷியஸ் நாட்டின் வழியாக நம் நாட்டில் சிலர் முதலீடு செய்கின்றனர்.

மொரீஷியஸ் வழியாக அவர்கள் முதலீடு செய்யும் பணமே நம் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக ஹவாலா முறையில் வெளிநாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்ட பணம் தான் என்பது என் கேள்வியின் மையக் கருத்து.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சகம், முறைகேடுகளைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகக் கூறுகிறது. முறைகேடுகள் நடைபெறுகின்றன; அவற்றைத் தடுக்க அரசிடம் இப்போது எந்த வழி வகையும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் நிலையில் நிதி அமைச்சகம் இருக்கிறது என்பதைத் தானே இந்த பதில் காட்டுகிறது?

கேள்வி 2: இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பவர்கள் பங்கேற்புக் குறிப்புகள் பற்றிய விவரங்கள் செபியிடம் தான் உள்ளன- நிதியமைச்சகத்திடம் இல்லை என்பது தான் அவர்கள் கூறியுள்ள பதில். அப்படியானால், செபி அமைப்பு அந்தப் பட்டியலை தனது இணையதளத்தில் வெளியிடுமா?

கேள்வி 3: இந்தியாவில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு வெளிநாட்டுப் பணம் எப்படி வந்தது? பயங்கரவாதிகளின் பொருளாதாரத்தை முறியடிக்க தங்களிடம் போதுமான சட்டங்கள் உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறிக் கொள்கிறது. இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றுவோருக்கு எதிராக இந்தச் சட்டங்களை மத்திய அரசு எத்தனை முறை பயன்படுத்தி உள்ளது?

கேள்வி 4: பங்கேற்புக் குறிப்புகள் வழியாக செய்யப்படும் முதலீடு இந்திய பங்குச்சந்தை முதலீட்டின் மொத்த மதிப்பில் நான்கில் ஒரு பங்கு. இது யாருடைய பணம் என்பது தெரியாமல் இவ்வளவு பெரிய தொகை முதலீடு செய்யப்பட்டிருப்பது உங்களுக்கு ஏற்புடையதா?

கேள்வி 5: நாட்டின் பாதுகாப்பு குறித்த இந்த முக்கியமான விஷயத்தில் மேலதிக விவரங்களைத் தருமாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை (எம்.கே.நாராயணன்), நிதியமைச்சகம் கேட்டதுண்டா?. சென்னை, மும்பை பங்குச் சந்தைகள், அப்படி தாங்கள் புகார் கூறவில்லை என்று நிதியமைச்சகத்திடம் கூறியுள்ளனவா?. அப்படியானால், தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு இப்படி ஒரு தகவல் எங்கிருந்து வந்தது?.
அது உண்மைக்கு மாறான செய்தி என்றால், ஒரு சர்வதேச மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எப்படி அதை பகிரங்கமாகப் பேசினார்?

கேள்வி 6: பயங்கரவாதிகள் இந்திய பங்குச் சந்தையில் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்று
கூற செபி அமைப்பிடமோ அல்லது அரசிடமோ எந்தத் தடயமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் கூறுகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்திருக்கும் கருத்துக்கு இது முற்றிலும் நேர் எதிரான கருத்து. இந்த இரண்டு கருத்துகளில் ஒன்று தான் உண்மையானதாக இருக்க முடியும். அப்படியானால், யார் சொல்வது உண்மை?

கேள்வி 7: முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும், பலத்தையும் செபி அமைப்புக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த காலம் தொட்டே அளிக்கவில்லை என்ற எனது குற்றச்சாட்டை வலுப்படுத்தும் வகையில், இரண்டு நிறுவனங்கள் தொடர்புடைய விவகாரங்களும் உள்ளனவே (இரு நிறுவனங்களை முந்தைய அறிக்கையில் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்).

கேள்வி 8: பல சந்தேகங்களுக்கு ஆளாகியுள்ள இந்த பங்கேற்புக் குறிப்பு முதலீடுகளை வரிந்து கட்டிக்கொண்டு டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன?

கேள்வி 9: ஜனவரி மாதம் மூன்றாவது வாரம் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகளில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டதை யாரும் மறுக்க முடியாது. இந்த வீழ்ச்சிக்குக் காரணம் அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்றது தான் என்பதை செபி இணையதளத்தின் புள்ளி விவரங்களே உறுதி செய்கின்றன. இதற்கு யாரெல்லாம் பொறுப்பு?. இது தான் எனது கேள்வி.

கேள்வி 10: எனது ஆரம்ப அடிப்படையான கேள்வி இன்னமும் அப்படியே உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறையுடன் நான் எழுப்பியுள்ள இந்தக் கேள்விகளுக்கு ஏற்புடைய பதில் கூற முடியவில்லை என்றால், மத்திய நிதியமைச்சர் பதவி விலகத் தயாரா? அப்படி அவர் பதவி விலகவில்லை எனில், பிரதமர் நிதி அமைச்சரை பதவி நீக்கம் செய்வாரா?

இவ்வாறு ஜெயலலிதா கேள்விகளை எழுப்பியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X