தமிழனுக்காக எந்த அவமானத்தையும் தாங்கத் தயார் - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: தமிழர்களுக்காக எந்த மாதிரியான அவமானத்தையும் தாங்க நான் தயார் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

தமிழக அரசு சார்பில் 2006ம் ஆண்டிற்கான சின்னத்திரை தொடர்களில் சிறந்த நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் மற்றும் 2005, 2006-ம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.

முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளையும், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு மானியத்தையும் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

சின்னத்திரை படங்களுக்கு இதுபோல் பரிசு வழங்குவதும், மானியம் வழங்குவதும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலே மட்டும்தான் நடைபெறுகிறது.

சின்னத்திரைக்கான விருதுகளும், அந்த தரமான படங்களுக்கு தயாரிப்புக்குத் தேவையான துண்டு விழுகின்ற பற்றாக்குறையை சரி செய்கின்ற பரிவுத் தொகையாக இன்றைக்கு போதுமான தொகையாக அது இல்லாவிட்டாலும், மன ஆறுதல் வழங்கக் கூடிய தொகையாக அதை வழங்கியிருக்கிறோம்.

இங்கே ஒரு தம்பி படம் எடுத்து, அந்த படம் வெற்றிபெறாத காரணத்தால், வாழ்க்கையிலே நொடிந்துப் போயுள்ள அந்த தம்பி, இங்கே பரிவுத்தொகை பெற்ற போது என் கையைப் பிடித்துக் கொண்டு இந்தப் பணத்தை நான் என்னுடைய வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக வைத்துக் கொள்வேன் என்று சொன்னார்.

நான் அவரிடம் தொடர்ந்து இந்த துறையிலேயே தொழில் செய்யப் போகிறாயா? அல்லது தொழிலை மாற்றப் போகிறாயா என்று கேட்டேன். இல்லையில்லை, நிச்சயமாக மாற்றிக் கொள்ளப்போகிறேன் என்றார்.

எங்கள் தங்கம்

அதற்கு என்ன காரணம் என்பதை நான் வேதனையோடு எண்ணிப் பார்க்கிறேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சினிமா படம் எடுப்பவர்கள் அல்லது இந்தத் தொழிலிலே ஈடுபட்டிருப்பவர்கள் சில நேரங்களில் ஏற்படுகின்ற அலுப்பினால், அவர்கள் பட்ட கஷ்டங்களால், அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளால், அவர்களுக்கு ஏற்பட்ட வேதனைகளால் இன்னும் சொல்லப்போனால் அந்த துறையிலே அவர்களுக்கு ஏற்பட்ட அவமானங்களால் கூட போதும் இந்த தொழில் என்று அதை நிறுத்தி விடுவதுண்டு.

என்னுடைய மருமகன் முரசொலி மாறன் தொடர்ந்து ஏழெட்டு படங்கள் தயாரித்தார். அந்த படங்களின் வரிசையில் இறுதியாக வெளியிடப்பட்ட படம் எங்கள் தங்கம். அந்த படம் முடிவுற்று, விற்பனையாகி படம் வெளியிடப்பட்டு அதற்கு பிறகு சில பேர் அவரிடம் வந்து அடுத்த படம் என்னசார் என்று கேட்டார்கள்.

அடுத்த படமா, இதற்குமேல் படம் எடுப்பதில்லை என்று நான் முடிவு செய்திருக்கிறேன் என்று ரொம்ப விரக்தியோடு சொல்லி, அதோடு படம் எடுக்கின்ற தொழிலை அவர் நிறுத்திக் கொண்டார்.

அதை நான் ஆதரிப்பவனல்ல, அதை நான் வரவேற்பவனல்ல, கையை கடிக்கின்ற அளவிற்கு அல்லது குடும்பத்திலே புயலை ஏற்படுத்துகின்ற அளவிற்கு ஒரு படத்தினுடைய விளைவு இருக்குமேயானால், இழப்பு இருக்குமேயானால் அதை ஓரளவாவது சரி செய்கின்ற வகையிலே தொழிலில் வீழ்ந்து விட்டவர்களைக் காப்பாற்றுகின்ற அளவிற்கு, தூக்கிவிடுகின்ற அளவிற்கு அரசும் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட அரசாக, கலைத்துறையைப் பொறுத்தவரையில் இந்த அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை காட்டுகின்ற வகையிலே தான் சில படங்களுக்கு ஏறத்தாழ இரண்டரை கோடி ரூபாயை ஒரு படத்திற்கு ஏழு லட்சம் ரூபாய் என்ற அளவிலே கொடுத்து அவர்களுடைய மன ஆறுதலைக் கண்டிருக்கிறோம்.

எனக்கு வெறுப்பில்லை!

இது முழுமையாக அவர்களுக்கு போதுமானதென்று நான் சொல்லமாட்டேன். இருந்தாலும் இதை வைத்து அவர்கள் மன ஆறுதல் பெறுவார்களேயானால், பரவாயில்லை, நாம் முழுமையாக விழுந்துவிடவில்லை.

மறுபடியும் தலை தூக்கலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு இது ஏற்படுத்தும் என்பதற்காகத்தான் இதைச்சொல்கிறேனே அல்லாமல் வேறல்ல.

இப்படி அளித்த இந்த தொகையை கூட ஓரிருவர் முதலிலே அதற்காக விண்ணப்பித்து கேட்டு, எங்களுக்கு வழங்க வேண்டுமென்று எழுதிக் கொடுத்து, நாமும் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்து அவர்களுக்கு அதற்கான தாக்கீதையும் அனுப்பிய பிறகு வாங்கவில்லை. அப்படி வாங்கப்படாத பணம் எல்லாம் அரசு நிதியிலே சேர்க்கப்படும் என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று சேர்க்கப்படுகின்ற அந்த தொகை இந்த ஆண்டு இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டு இப்படி குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்படுகின்ற ஒரு தரமான தமிழ் திரைப்படத்திற்கு வழங்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் விண்ணப்பித்து விட்டு தரும்போது வேண்டாமென்று சொன்னவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அது அவர்களுடைய உரிமை. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது. கேட்பதற்கும் உரிமை இருக்கிறது. கேட்பதைக் கொடுக்கும்போது வாங்க மறுப்பதற்கும் உரிமை இருக்கிறது.

எனவே உரிமைகளை போற்றுகின்ற ஆட்சி என்ற முறையில் அந்த உரிமைகளுடைய உணர்வை நான் மதிக்கின்றேன். யார் மீதும் இதன் காரணமாக எனக்கு வெறுப்பில்லை. நான் அல்லது இந்த அரசு அதன் காரணமாக அவமானப்பட்டு விட்டதாக கருதமாட்டேன். அவமானப்படுகிறோம் என்றால் யாரிடத்திலே அவமானப்படுகிறோம்?.

தமிழகத்திற்கு நஷ்டம்

ஒரு தமிழன் இன்னொரு தமிழனைப் பார்த்து தூற்றுகிறான். அல்லது கேலி செய்கிறான் அல்லது கிண்டல் செய்கிறான் அல்லது கேவலமாக பேசுகிறான் என்றால் அதை அவமானம் இல்லையா என்று கேட்டால், நான் ஒன்றை இந்த அவையிலே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நான் இன்று படுகின்ற அவமானத்தால் தமிழன் எதிர்காலத்திலே தலைதூக்கி நிற்பான், அதற்காக நான் இந்த அவமானத்தைப் பெறுகிறேன், ஏற்றுக்கொள்கிறேன் என்றால் இப்படி ஆயிரம் அவமானங்கள் வந்தாலும் நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

உச்சநீதிமன்றம் வரையிலே சென்று நியாயம் கேட்கிறோம் என்றால் எதற்காக கேட்கிறோம்? எதற்காக வாதாடுகிறோம்?

பெரியாரும், அண்ணாவும், காமராஜரும் எந்த சேதுசமுத்திர திட்டத்திற்காக குரல் கொடுத்தார்களோ, அந்த திட்டம் நிறைவேற வேண்டும், அதை இடையிலே வந்தவர்கள் கெடுக்க நினைக்கிறார்கள். ஏதேதோ காரணங்களைக் கூறி அந்த திட்டமே நிறைவேறக் கூடாது என்று கருதுகிறார்கள். அது நிறைவேறாவிட்டால் அது இலங்கைக்கு லாபம். தமிழகத்திற்கு நஷ்டம்.

தமிழகத்தின் வளம், வாணிபம், வர்த்தகம், எதிர்காலம் இவைகள் எல்லாம் பாதிக்கப்படும். ஒருதிட்டம் நிறைவேற வேண்டும், அந்த திட்டம் சேதுக் கால்வாய் திட்டம், அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று அண்ணா போராடினார். பெரியார் போராடினார். காமராஜர் நேருவிடம் சென்று வாதிட்டார்.

அத்தகைய ஒரு திட்டத்தை இன்றைக்கு மடக்கிப் போடச் செய்யப்படுகின்ற சூழ்ச்சியை எவ்வளவு நாட்களுக்கு தாக்குப்பிடித்து நாம் தாங்கிக் கொண்டிருக்க முடியும் என்ற காரணத்தினாலே தான், அந்த போராட்டத்தில் எவ்வளவு அவமானங்கள் வந்தாலும் பரவாயில்லை.

அதனைத் தாங்கிக் கொண்டு தமிழகத்தை தாங்குவதற்கு நம்முடைய எதிர்காலத்தை வளமாக்குவதற்கு நம்முடைய தமிழ்இனத்தின் குழந்தை குட்டிகள், எதிர்காலச் சமுதாயம் நலிவடையாமல் இருப்பதற்கு நலிந்து போகாமல் காப்பாற்றப்படுவதற்கு நாம் நம்மை தியாகம் செய்வதென்றால் தியாகம் என்பது உயிரைக் கொடுப்பது மாத்திரமல்ல, தியாகம் என்பது, அவமானப்படுவது கூட தியாகம் தான்.

பெரியாருக்கு வந்த அவமானம்

பெரியார் கடலூரிலே அவருடைய சிலையை திறக்கின்ற ஒரு விழாவிற்கு என்னை வரச்சொல்லி, அழைத்துச் சென்றார். அவருடைய சிலையைத் திறக்கக் கூடாது என்று பெரியாருடைய சிலையை மறுத்து, பெரியார் மீது செருப்பு வீசினார்கள்.

ஐயோ என் மீது செருப்பு வீசி விட்டார்களே என்று பயந்து கொண்டு அவர் சென்னைக்கு திரும்பிவிட வில்லை. அவர் திரும்பிப் பார்த்து, இன்னொரு செருப்பையும் என்மீது வீசு என்று அந்த அவமானத்தை தாங்கிக் கொண்டு பொறுமையோடு விழாவிலே கலந்து கொண்டு விட்டு சிலை திறப்பு விழா முடிந்த பிறகு திரும்பினார்.

ஒரு சிலை திறக்கக்கூடாதென்று செருப்பு வீசினார்கள். இன்று தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சிலைகள் பெரியாருக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்றால் அந்த ஒரு செருப்பு வீசப்பட்டபோது அந்த அவமானம் எனக்கு ஏற்பட்டு விட்டது, இனி அந்த அவமானத்தோடு வாழமாட்டேன் என்று அவர் மன உறுதி கலைந்திருப்பாரயானால், அவரால் இவ்வளவு பெரிய இயக்கத்தைக் கட்டிக் காத்திருக்க முடியாது. நமக்கெல்லாம் தன் மான உணர்வைத் தட்டியெழுப்பியிருக்க முடியாது.

சகிப்புதன்மை, பொறுத்துக்கொள்வது, அது அவமானம் என்றாலும் அதைப் புகழாகவே எண்ணிக் கொள்வது, இவை ஒருவரை வாழ வைக்குமே தவிர அவரை வாடவிட்டு விடாது. அவருடைய எதிர்காலத்தை இருளாக்கிவிடாது. அந்த நம்பிக்கையோடுதான் எவ்வளவு அவமானங்கள் வந்தாலும், எவ்வளவு கண்டனங்கள் வந்தாலும் எவ்வளவு கேலிகள், கிண்டல்கள் வந்தாலும் அவைகளைப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும்.

சின்னத்திரைதான் ஆதாரம்!

இன்றைக்குக்கூட கேட்பார்கள். நாட்டில் எவ்வளவோ இருக்கிறது. அதையெல்லாம்விட்டு விட்டு இந்த சின்னத்திரைக்கு என்ன பரிசளிப்பு விழா என்று கேட்கக்கூடும். சின்னத்திரைக்கு பரிசு கொடுத்தால் தான் பெரியதிரை வாழும். பெரிய திரை அதை மறந்து விடக்கூடாது.

பெரிய திரை திடீரென்று வந்துவிட்டதா, இல்லை. பெரிய திரை வருவதற்கு முன்பு படங்கள் சின்னத்திரையிலே தான் ஓடின. இப்போது பார்க்கின்ற சின்னத் திரைகள் அல்ல. கடைவீதிகளில், சந்தை கூடுகின்ற இடங்களில் பார் பார் பயாஸ் கோப் பார் என்று சின்னத் திரைகளிலே படங்களை காட்டினார்களே. அதனுடைய வளர்ச்சிதான் இன்றைக்கு பெரிய திரை என்பதை எண்ணிப் பார்த்தால், சின்னத்திரை நம்முடைய ஆதி என்பதை நாம் உணர முடியும். ஆகவே சின்னத்திரை இல்லாமல் பெரிய திரை இல்லை.

நாம் 5 அடி உயரம், ஒன்றரை அடி அகலம் இருக்கிறோம் என்றால், குழந்தையாக இருந்த போது 5 அடி உயரம் இருந்தோமா என்றால் இல்லை. அப்போது சின்னத் திரையாகத்தான் இருந்தோம். இப்போதுதான் பெரிய திரையாக இருக்கிறோம். இதை மறந்துவிடக்கூடாது. ஆகவே சின்னத்திரை இல்லாமல் பெரிய திரை இல்லை. சின்னத்திரையை மறந்துவிடக்கூடாது.

நான் விடுதலைக்கு சொல்கிறேன். அன்றைக்கு சொன்னதை மறந்திருப்பேன் என்று கருதுகிறாய். நான் மறக்கமாட்டேன். உங்களுக்கு ஒரு இடம் வேண்டுமென்று கேட்டாய். நான் உங்களுக்கு அதிக இடம் கொடுத்துவிட மாட்டேன், கொடுக்கின்ற இடம், நீங்கள் அலுவலகம் நடத்துவதற்கு ஏற்றதாக அந்த இடத்தை நிச்சயமாகத் தருவேன். அந்த இடம் கலை வளர்க்கின்ற இடமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு அந்த இடத்தை தருவேன்.

இங்கே குஷ்பூ பேசும்போதும், ராதிகா பேசும் போதும் நீங்கள் எங்களுக்கு எப்போதுமே இப்படி பரிசுகளை வழங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அது ராதிகாவின் ஆசையாக இருக்கலாம். அவருடைய வீட்டுக்காரரின் ஆசை எப்படி இருக்குமோ எனக்கு தெரியாது என்றார் முதல்வர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+