நோட்டுக்கு ஓட்டு-வீடியோ வெளியிட்டது ஐபின்!

ஜூலை 22ம் தேதி லோக்சபாவில் நம்பிக்ைக வாக்கெடுப்பு நடந்தது. அப்போது 3 பாஜக எம்.பிக்கள் லோக்சபாவில் கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு வந்து கொட்டி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் தங்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார்கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதை படம் பிடித்துள்ளதாக சிஎன்என் டிவியும் அறிவித்தது. இருப்பினும் அதை ஒளிபரப்பப் போவதில்லை என்றும் அந்த ஆதாரத்தை லோக்சபா சபாநாயகரிடம் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தது.
அதேபோல சபாநாயகர் அலுவலகத்தில் இதுதொடர்பான வீடியோ டேப்புகளையும் ஒப்படைத்தது. இந்தநிலையில் சிஎன்என்-ஐபிஎன் லஞ்சம் கொடுத்த விவகாரம்த தொடர்பான வீடியோ ஆதாரத்தை ஒளிபரப்ப வேண்டும் என பாஜக நெருக்குதல் கொடுத்தது. ஒளிபரப்பும் வரை சிஎன்என் டிவியை பாஜக புறக்கணிப்பதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில் இது நாள் வரை அமைதி காத்து வந்த சிஎன்என் நேற்று இரவு வீடியோ ஆதாரத்தை ஒளிபரப்பியது.
எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.பி. ரியோத்தி ராமன் சிங் முக்கிய பங்கு வகித்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்தான் பாஜக எம்.பிக்கள் மகாவீர் சிங் பகாரியா, பகன் சிங் குலஸ்தே, அசோக் அர்கல் ஆகியோருக்கு பணம் கொடுத்து அரசுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கூறியதும் தெளிவாகியுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 2 நாட்களுக்கு முன்பு ரியோத்தி ரமன் சிங், 3 பாஜக எம்.பிக்களுடனும் பேச்சு நடத்தியுள்ளார். இதுதொடர்பான பேச்சுவார்த்தையின்போது மேலும் இரண்டு பேரும் உடன் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் அமர்சிங்கின் உதவியாளரான சஞ்சீவ்.
முதல் நாள் நடந்த பேச்சுவார்த்தை எந்த வீட்டில் நடந்தது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. 2வது நாள் பேச்சுவார்த்தை எம்.பி. அர்கலின் வீட்டில் நடந்துள்ளது. அங்கு வைத்துத்தான் அவரிடம் சஞ்சீவ் ரூ. 1 கோடி பணத்தை கட்டுக்கட்டாக கொண்டு வந்து கொடுக்கிறார். மேலும் பணத்தைக் கொடுப்பதற்கு முன்பு டெலிபோனில் யாருடனோ அவர் பேசுகிறார். (அவர் அமர்சிங் என்பது பாஜகவின் குற்றச்சாட்டு).
முதலில் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ரியோத்தி ரமன் சிங் கூப்பிடும்போது 3 பாஜக எம்.பிக்களும் தயக்கம் காட்டுகின்றனர். பணத்தைப் பெறுவது குறித்தும், அவர் கூறும் நிபந்தனைகளுக்கும் அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
சஞ்சீவ் பெரிய பாலிதீன் பைகளில் பணத்தைக் கட்டுக் கட்டாக அடுக்கி எடுத்து வருவது வீடியோவில் பதிவாகியுள்ளது. அதை அர்கல் வீட்டில், அவருக்கு முன்பு உள்ள டேபிளில் கொட்டுகிறார் சஞ்சீவ்.
இந்த வீடியோவில், இந்த லஞ்ச விவகாரத்திற்குப் பின்னணியில் இருப்பது யார், யார் பணத்தை அனுப்பியது என்ற விவரங்கள் தெளிவாக இல்லை.
ராஜ்தீப் சர்தேசாய் நேரில் வாக்குமூலம்:
இதற்கிடையே, சிஎன்என் -ஐபிஎன் டிவியின் தலைவர் ராஜ் தீப் சர்தேசதாய் தலைமையிலான 6 பேர் குழு, கிஷோர் சந்திர தியோ தலைமையிலான நாடாளுமன்றக் கமிட்டி முன்பு ஆஜராகி எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்தனர்.
சிஎன்என் குழுவிடம், நாடாளுமன்றக் குழு பல்வேறு கேள்விகளைக் கேட்டது. எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதை படம் எடுக்குமாறு பாஜக தரப்பிலிருந்து முன் கூட்டியே கோரப்பட்டதா, அதன் பேரில் இந்த வீடியோ படமாக்கல் நடந்ததா என்பது குறித்தும் நாடாளுமன்றக் குழுவினர், சிஎன்என் குழுவினரிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் தியோ செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆகஸ்ட் 18ம் தேதி சமாஜ்வாடி கட்சி எம்.பி. ரியோத்தி ரமன் சிங், எல்.கே.அத்வானியின் அரசியல் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி (சிஎன்என் படம் பிடித்தபோது சம்பவ இடத்தில் இருந்தவர்), சஞ்சீவ் சக்சேனா (அர்கல் வீட்டுக்குப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டியவர்), சோஹைல் ஹிந்துஸ்தானி (3 பாஜக எம்.பிக்களுடன் அமர்சிங் வீட்டுக்குப் போனதாக கூறப்படுபவர்) ஆகியோரை நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளோம்.
அர்கல் மற்றும் பகன் சிங் குலஸ்தேவிடம் நடத்திய குறுக்கு விசாரணையின்போது இந்த பெயர்கள் எங்களுக்குக் கிடைத்தன என்றார்.
இவர்ள் தவிர அறுவைச் சிகிச்சை செய்து ஓய்வில் இருந்து வரும் 3வது எம்.பியான மகாவீர் போக்ராவையும் விசாரணைக்கு வருமாறு நாடாளுமன்றக் கமிட்டி அழைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மேலும் இரு வீடியோ டேப்புகளை சிஎன்என் குழு நாடாளுமன்றக் கமிட்டியிடம் வழங்கியுள்ளது.
இந்த டேப்புகள் ஸ்டிங் ஆபரேஷனின்போது எடுக்கப்பட்டவை அல்ல என்றும், அது நடந்து முடிந்த பின்னர் 3 பாஜக எம்.பிக்களையும் பேட்டி கண்டது தொடர்பான வீடியோடேப்புகள் என்றும் சிஎன்என் விளக்கியுள்ளது.
இதற்கிடையே, தாங்கள் படமாக்கிய வீடியோவை அப்படியே ஒளிபரப்புவதற்கு தங்களுக்கு உரிமை உள்ளதாக தியோவிடம், ராஜ்தீப் சர்தேசாய் தெரிவித்துள்ளார். அதற்கு தியோ மறுப்பேதும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications