For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் அரசியலுக்கு வர உந்துதலாக இருந்தவர் கலாம்: சிரஞ்சீவி

By Staff
Google Oneindia Tamil News

Chiranjeevi
ஹைதராபாத்: பதவி சுகம், அதிகார சுகத்திற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்தான் நான் அரசியலுக்கு வர உந்து சக்தியாக இருந்தார் என்று கூறியுள்ளார் அரசியல் தலைவராக அவதாரம் எடுத்துள்ள தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி.

ஆந்திர அரசியல் வானில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் சிரஞ்சீவி. வருகிற 26ம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ள பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் தனது புதிய கட்சியை அவர் தொடங்குகிறார்.

இந்த நிலையில், தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்று ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை அழைத்து மனம் திறந்து பேசினார் சிரஞ்சீவி.

அரசியல்வாதிகளுக்கே உரிய வெள்ளை நிற உடையில் கம்பீரமாக வந்த சிரஞ்சீவி புகைப்படங்களுக்கு முகம் சுளிக்காமல் போஸ் கொடுத்தார்.

பின்னர் அவர் பேச ஆரம்பித்தார். சிரஞ்சீவி பேசுகையில், என்னை அரசியலுக்கு வரத் தூண்டிய அனைவருக்கும் முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோடானு கோடி தெலுங்கு மக்கள், எனது ரசிகர்கள், ஆதரவாளர்களின் ஆசை, கனவு இது. அதை இப்போது நிறைவேற்றப் போகிறேன்.

கடந்த சில மாதங்களாக மீடியாக்களில் எனது அரசியல் பிரவேசம் குறித்து செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இன்று எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். எனது அரசியல் பிரவேசம் குறித்து பேச விரும்பினேன்.

கடந்த 30 ஆண்டுகளாக நான் திரையுலகில் இருந்து வந்தேன். ஆனால் பொதுமக்களின் தேவைகள் என்னை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளன. எனது அரசியல் எதிர்காலத்தை பொதுமக்கள்தான் நிர்ணயிக்கப் போகிறார்கள்.

எனது வாழ்க்கையும், சேவையும் ஆந்திர மக்களுக்காகவே. இது கடவுள் எனக்குக் கொடுத்துள்ள வாய்ப்பு. சமூக பிரச்சினைகளை தீர்க்க மனிதர்களை பயன்படுத்துவார் கடவுள். அப்படித்தான் என்னை அரசியலுக்கு அனுப்பி சமூத்திற்கு சேவை செய்ய அவர் அனுப்பியுள்ளதாக கருதுகிறேன்.

கடவுளிடமிருந்து வந்த அழைப்பு இது. நான் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் பேரணிகள், கூட்டங்களை நடத்தினர் எனது ஆதரவாளர்கள், அன்புக்குரியவர்கள். அதற்கு இப்போது நான் பதிலளிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

உந்து சக்தியான கலாம் - என்.டி.ஆர்

கடந்த பல நாட்களாக பலரையும் நான் சந்தித்து வந்தேன். சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சந்தித்து வந்தேன். எனது உணர்வுகளை அவர்களிடம் தெரிவித்தேன். அப்படி நான் சந்தித்தவர்களில் ஒருவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

அவர் என்னிடம் பேசுகையில், சிரஞ்சீவி, நான் சண்டிகரில் ஒரு மாணவர் சந்திப்புக்காக போயிருந்தபோது, பல கேள்விகளை அவர்களிடம் கேட்டேன். அவர்களில் பலர் நான் என்ஜீனியர் ஆவேன், வக்கீல் ஆவேன், டாக்டர் ஆவேன் என்று கூறினர். ஆனால் மிகக் குறைந்த சிலரே அரசியல்வாதி ஆவேன் என்றனர்.

அந்த அளவுக்கு மக்கள் மனதில் அரசியல் குறித்த பயம், அவமதிப்பு இருக்கிறது. அந்த நிலையை உங்களைப் போன்றவர்கள்தான் போக்க வேண்டும். உங்களுக்கு உங்களைப் பற்றித் தெரியாது. நீங்கள் நடிகரை விட மேலானவர் என்றார்.

அப்துல் கலாம் கூறிய இந்த வார்த்தைகள்தான் என்னுடைய மன மாற்றத்திற்கு முக்கிய காரணம். அரசியல் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல செய்ய வேண்டும் என்ற எண்ணமும் பிறந்தது.

இளைஞர்களும், மன வலிமை படைத்தவர்களும், உறுதியாக செயல்படக் கூடியவர்களும் சமூகத்தை மாற்றும் வல்லமை படைத்திருந்தால், நிச்சயம் அரசியல் மூலம் அதை சாதிக்கலாம். நான் அரசியலில் நுழைய மறுத்திருந்தால் அது வரலாற்றுப் பிழையாக மாறியிருக்கும். எனவே இந்த நேரத்தில் அப்துல் கலாமுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். அவருடைய வார்த்தைகள்தான் எனக்கு உந்து சக்தியாக இருந்தது.

மறைந்த என்.டி.ஆர். ஆந்திர மாநில சமூக அமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர். அவரும் எனக்கு உந்து சக்தியாக இருக்கிறார். திரைக் கலைஞர்களால் அரசியலிலும், சமூகத்திலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம். அவருக்கும் நான் மானசீக நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

வக்கீல்கள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், பழங்குடியினர் என்னை அரசியலுக்கு வரத் தூண்டியவர்கள். இவர்களும்தான் எனக்கு உந்து சக்தியாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

கம்மம் மாவட்டத்தில் ஒரு ஊர்க்காவல் படை வீரர் எனக்காக தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், சிரஞ்சீவியை முதல்வராக காண முடியவில்லையே என்று எழுதியிருந்தார். இது என்னை நெகிழ வைத்து விட்டது.

அதேபோல ஐடி வேலையில் இருந்து வந்த ஒரு தம்பதியினரும் இதே காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டனர். இது எல்லாம் என்னை நிறைய சிந்திக்க வைத்துவிட்டது.

எனவே இனிமேலும் அரசியலுக்கு வராமல் இருக்கும் பிழையை செய்யக் கூடாது என்ற முடிவை எடுத்தேன்.

நான் அரசியல்வாதியாக நடிக்க மாட்டேன். அதிகாரத்திற்காகவும், பதவிக்காகவும் நான் அரசியலுக்கு வரவில்லை. மன திருப்தியுடன் நான் அரசியலுக்கு வருகிறேன். எனக்கு கடவுள் புகழையும், பணத்தையும் கொடுத்துள்ளார். எனது ரத்த வங்கிகள் மூலம் ஏராளமான மக்கள் பலனடைந்துள்ளனர். என்னைப் பார்க்கும்போதெல்லாம் கைகளைப் பிடித்துக் கொண்டு பாராட்டுகிறார்கள், அது போதும் எனக்கு.

30 வருடங்களாக நடித்து விட்டேன். இனிமேல் ஒரு அரசியல்வாதியாக செயல்படப் போகிறேன். இங்கு நடிப்பு எடுபடாது. இதை நான் உண்மையாகவும், நிஜமாகவும் செய்தாக வேண்டும். அதை கெளரவத்துடனும், களங்கமில்லாமலும் செய்யப் போகிறேன்.

எனது கட்சியின் பெயர், கொள்கைகள், கொடி உள்ளிட்டவை குறித்து ஆகஸ்ட் 26ம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் அறிவிக்கவுள்ளேன்.

ஆந்திராவை சந்தோஷம் மிக்க மாநிலமாக திகழச் செய்ய வேண்டும் என்பதே எனது ஒரே லட்சியம் என்றார் சிரஞ்சீவி.

அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த பெரும் திரளான ரசிகர்கள், சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X