சென்னைக்கு பொங்கல் முதல் கடல் குடிநீர்!

சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னை மக்களின் தாகம் வெகுவாக தணிந்தது.
சென்னை நகர மக்களுக்கு தற்போது தினமும் 1,200 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் 98.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் தான் சப்ளை செய்யப்படுகிறது. மக்கள் தொகை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் குடி தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகள் தொழில்மயமாகி வருவதால் 2030ம் ஆண்டில் சுமார் 1,000 மில்லியன் லிட்டர் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர்க்க வட சென்னையில் மீஞ்சூருக்கு அருகில் காட்டுப் பள்ளி கிராமத்தில் ரூ. 510 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு மத்திய அரசு 80 சதவீதமும் மாநில அரசு 10 சதவீதமும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 10 சதவீதமும் நிதி வழங்கின.
60 ஏக்கர் நில பரப்பளவில் இந்த திட்டம் உருவாகி வருகிறது.
சென்னையில் இருந்து வடக்கே 35 கிமீ தொலைவில் கட்டப்பட்டு வரும் இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளில் 75 சதவீதம் முடிந்து விட்டன. மீதமுள்ள 25 சதவீத பணிகள் திட்டமிடப்படி இன்னும் வாரங்களி்ல் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து பொங்கல் முதல் கடல் குடிநீர் சென்னைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை நகர மக்களுக்கு பொங்கல் பரிசாக இந்த புதிய குடிநீர் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு்ள்ளது.
மீஞ்சூர் தொழிற்சாலை மூலம் தினமும் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இந்த கடல் குடிநீர் சென்னை மக்களுக்கு புது சுவையைத் தரும்.
கடல் குடிநீரை கொண்டு செல்ல 23,257 மீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாதவரம் மற்றும் மணலியில் இரண்டு பெரிய தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கிருந்து நீரேற்றப்பட்டு மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும்.
இதைத் தொடர்ந்து இன்னொரு கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தென் சென்னை பகுதியில் அமைக்கப்படவுள்ளது.
நாளை முதல் ரூ.100க்கு குடிநீர் இணைப்பு:
இதற்கிடையே, ஐநூறு சதுரடிக்குள் உள்ள குடிசை மற்றும் ஓட்டு வீட்டில் வசிப்பவர்கள், குறைந்த கட்டணமாக ரூ.100 செலுத்தி குடிநீர் இணைப்பு பெறும் திட்டத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்களுக்கு ரூ.100 கட்டணத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று சட்டசபையில் மானிய கோரிக்கையின்போது ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் அடிப்படையில் சென்னை மாநகரில் 500 சதுரடி அளவில் வசித்து வரும் ஏழைகளுக்கு ரூ.100 என்ற குறைந்த கட்டணத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்படவுள்ளது.
முதல் கட்டமாக 500 பேருக்கு குடிநீர் இணைப்புக்கான உத்தரவை அமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார். சென்னை மாநகரில் 6 லட்சத்து 18,689 பேர் வீட்டு வரி செலுத்துகின்றனர். இதில் 4 லட்சத்து 94,428 பேர் கட்டணம் செலுத்தி குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர்.
மீதமுள்ளவர்களும் குடிநீர் இணைப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் 500 சதுரடிக்குள் குடிசை மற்றும் ஓட்டு வீட்டில் வசிப்பவர்கள் ரூ.100 செலுத்தி குடிநீர் இணைப்பை பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது, ஆயிரம் சதுரடி வரை குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்புகள் பெற ரூ.5,000 கட்டணம் உள்ளது. அதற்கு மேல் உள்ள வீடுகளுக்கு ரூ.7,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குடிநீர் இணைப்பு ரூ.100 கட்டணத்தில் வழங்குவது போல கழிவுநீர் இணைப்பும் ரூ.100 கட்டணத்தில் கொடுக்கப்படவுள்ளது.
இதற்கு வீட்டு வரி செலுத்திய ரசீது கொடுத்தால் போதுமானது.












Click it and Unblock the Notifications