டயபடீஸ்: 14 ஊசி வேண்டாம்-வருகிறது வாரம் ஒரு ஊசி!
டோரன்டோ: டைப் 2 சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இனிமேல வாரம் 14 முறை ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய கொடுமை நீங்கப் போகிறது. வாரத்திற்கு ஒரே ஒரு ஊசி போடும் முறை விரைவில் நடைமுறைக்கு வரப் போகிறது.
டைப் 2 சர்க்கரை வியாதியஸ்தர்கள் தற்போது வாரம் 14 முறை ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதை ஒழித்து விட்டு வாரம் ஒரு முறை ஊசி போட்டுக் கொள்ளும் புதிய சிகிச்சை முறை வரவுள்ளதாக கனடாவின் மெளன்ட் சினாய் மருத்துவமனையைச் சேர்ந்த சாமுவேல் லுனென்பெல்ட் ஆய்வுக் கழக ஆய்வாளரும், மூத்த விஞ்ஞானியுமான டேனியல் டிரக்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கனடாவில் மட்டும் 20 லட்சம் பேருக்கு சர்க்கரை வியாதி உள்ளது. இதில் டைப் 2 சர்க்கரை வியாதிக்கு முறையான தெரபி எதுவும் இல்லை. வாரம் 14 முறை அவர்கள் ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய சிகிச்சையான எக்ஸனெடைட் (Exenatide) மூலம், நீண்ட காலம் செயல்படக் கூடிய மருந்துகளை வாரம் ஒரு முறை ஊசி மூலம் போட்டுக் கொள்ளலாம். இந்த மருந்து ஜி.எல்.பி-1 எனப்படக் கூடிய பெப்டைட் ஹார்மோனை ஒத்ததாகும்.
இது இயற்கையாகவே நமது உடலில் உற்பத்தியாகக் கூடிய ஹார்மோன் ஆகும். சாப்பிட்ட பிறகு இது உற்பத்தியாகும்.
இந்த வாரம் ஒரு முறை மருந்தை, 14 முறை ஊசி போட்டுக் கொள்ளும் நோயாளிகளுக்கு செலுத்தி அதன் முடிவுகள் கண்காணிக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
பல நாடுகளைச் சேர்ந்த 300 நோயாளிகளிடம் 6 மாத காலத்திற்கு இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் 75 சதவீதம் பேருக்கு, வாரம் ஒருமுறை மருந்தை செலுத்தியவர்களுக்கு சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டது தெரிய வந்தது.
இவர்களுக்கு மிக மிக குறைவான பக்க விளைவுகளே ஏற்பட்டன. அதேசமயம், ஹைப்போகிளைசீமியா (ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவது) ஆபத்தும் ஏற்படவில்லை. மேலும் உடல் எடையும் கூட குறைந்தது என்றார் டிரக்கர்.
கடந்த 20 ஆண்டுகளாக ஜிஎல்பி-1 ஹார்மோன் குறித்த ஆய்வை மேற்கொண்டவர் டிரக்கர். தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாரம் ஒருமுறை மருந்து சிகிச்சை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரக் கூடும் எனத் தெரிகிறது.
இதன் மூலம் சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்களுக்கு பெரும் நிம்மதியும், முன்னேற்றமும் ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications