பிரபல வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 73.

வயலின் என்றவுடன் நினைவுக்கு வருபவர் வைத்தியநாதன்தான். அதிலும் தோடி ராகத்தில் இசைப்பதில் அவருக்கு நிகர் அவரே. வயலின் இசைப்பதில் தன்னிகரற்ற கலைஞராக விளங்கி வந்தவர் குன்னக்குடி வைத்தியநாதன்.

சில நாட்களாக அவருக்கு உடல் நலம் சரியில்லை. வயிற்றில் ஏற்பட்ட பிரச்சினையால் அவதிப்பட்ட அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 9மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது உயிர் பிரிந்தது.

இதையடுத்து குன்னக்குடியின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் பிறந்தவர் வைத்தியநாதன். இவரது தந்தை ராமசாமி சாஸ்திரி, தாயார் மீனாட்சி அம்மாள்.

சிறு வயதிலேயே கர்நாடக இசையில் தேறினார். தந்தைதான் இவருக்கு சங்கீகத்தில் குரு. அவரே வயலின் கலையையும் மகனுக்கு கற்றுக் கொடுத்தார்.

12 வயது முதல் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார் குன்னக்குடி. ஆரம்பத்தில் செம்மங்குடி சீனிவாசய்யர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி பின்னர் தனிக் குழுவை அமைத்து கச்சேரிகள் நடத்தி வந்தார். தனியாகவும் பின்னர் கச்சேரி செய்ய ஆரம்பித்தார்.

பின்னர் திரைப்படங்களிலும் இசையமைக்க ஆரம்பித்தார் குன்னக்குடி. 1969ம் ஆண்டு வா ராஜா வா என்ற படத்துக்கு இசையமைத்தார். பின்னர் திருமலை தென்குமரி, தெய்வம், கந்தன் கருனை உள்ளிட்ட 22 படங்களுக்கு இசையமைத்தார். தோடிராகம் என்ற படத்தை டி.என்.சேஷகோபாலனை ஹீரோவாகப் போட்டு சொந்தமாக தயாரித்தார்.

மத்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் குன்னக்குடி. திருவையாறு தியாக பிரம்ம சபையின் செயலராக 28 வருடம் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு இயல்இசை நாடக மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

குன்னக்குடியின் இசை தெரபி:

வயலின் கலையில் சக்கரவர்த்தியாக விளங்கிய குன்னக்குடி வைத்தியநாதன், இசை தெரபியிலும் முத்திரை பதித்தவர். இசையால் நோய்களை குணமாக்க முடியும் என்ற ஆய்விலும் ஈடுபட்டிருந்தார்.

மறைந்த குன்னக்குடி வைத்தியநாதனுக்கு மனைவி, நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற