பங்குச் சந்தையில் பெரும் சரிவு-13,000 புள்ளிகளுக்கு கீழ் போன சென்செக்ஸ்
மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று பெரும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 13,000 புள்ளிகளுக்கும் கீழ் போனது. இந்தச் சரிவு மேலும் தொடரும் எனத் தெரிகிறது.
சர்வதேச நிதிச்சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பாதிப்பால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இறங்கு முகத்தை கண்டு வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 445 புள்ளிகளை இழந்தது. இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 108 புள்ளிகளை இழந்தது. நண்பகல் 12 மணிநிலவரப்படி 250 புள்ளிகள் குறைந்து தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது.
இதனால் சென்செக்ஸ் 13 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சரிந்தது. இந்தச் சரிவு மேலும் அதிகமாகும் எனக் கூறப்படுகிறது.
இன்றைய சரிவு எதிர்பார்த்த ஒன்றுதான் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க நிதிச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அந்நிய நிறுவனங்கள் தங்களது இந்திய பங்குகளையும் விற்க ஆரம்பித்துள்ளதே சரிவுக்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.
இன்று அத்தியாவசிய நுகர்பொருட்கள் தவிர அனைத்துத் துறைகளிலும் சரிவு காணப்பட்டது. ரியல் எஸ்டேட், வங்கிகள், மூலதனப் பொருட்கள், தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியவை 3 சதவீத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன.
தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 49 புள்ளிகளை இழந்தது.