மதுரையில் அழகிரி சர்வாதிகாரம்: விஜயகாந்த் விளாசல்

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேமுதிகவில் இணையும் விழா, தேமுதிக தலைமைக் கழக அலுவலக வளாகத்தில் நடந்தது. தேமுதிகவுக்கு வந்தவர்களை வரவேற்று விஜயகாந்த் பேசுகையில், தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்று முதல்வர் கூறுகிறார். ஆனால் மதுரையில் அவரது மகன் சர்வாதிகாரம் செய்து வருகிறார்.
முதல்வர் அவரா, அல்லது அவரது மகனா. மதுரையில் தனியாட்சி நடந்து வருகிறது. நேரு, படேல் உள்ளிட்டோர் பாடுபட்டு வாங்கிக் கொடுத்த சுதந்திரம் மதுரையில் இல்லை.
ஒரு திரைப்படத்தைத் திரையிடக் கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுவது ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிப்பது போலாகும்.
காதலில் விழுந்தேன் படத்தை போடுகிறீர்களா, சரி போட்டுக் கொள்ளுங்கள், ஆனால் மவனே அடுத்தடுத்து டார்ச்சர் கொடுப்போம் என்று பயமுறுத்துகிறார்கள். இதைப் பார்த்து பயந்து போன தியேட்டர் உரிமையாளர்கள் எதற்கு வம்பு என்று படத்தை திரையிட தயங்குகின்றனர்.
எனது கல்யாண மண்டபத்தை இடித்து விட்டு பாலம் கட்டப் போவதாக கூறினார்கள். ஆனால் பாலம் கட்டுவதற்கான ஒரு நடைமுறையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய முடியும். இது எல்லோருடைய கேள்வி. 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதியால் விலைவாசி குறையவில்லை.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தமிழக அமைச்சரவையில் இடம் கேட்பேன் என்றால் புதுச்சேரியில் திமுகவுக்கு இடம் கேட்பேன் என்கிறார் கருணாநிதி.
ரேஷன் கடைகளில் 50 ரூபாய்க்கு மளிகைப் பொருட்களை தரப் போவதாக கூறுகிறார்கள். நான் அதற்கு முன்பே ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் போட்டு வீட்டுக்கே தருவோம் என்றேன்.
50 ரூபாய் மளிகைப் பொருட்களை வாங்கினால்தான் ஒரு ரூபாய் அரிசியைத் தருகிறார்கள். அப்படியானால் ஒரு கிலோ அரிசி விலை 51 ரூபாயா.
எல்லாத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் அரசு பஸ் விபத்துக்கள் அதிகம். காரணம், டிரைவிங் தெரியாமலேயே பலர் லஞ்சம் கொடுத்து டிரைவர் வேலை வாங்குகிறார்கள்.
நான் தேர்தலில் விற்றால் பசு மாடு தருவேன் என்றேன். இலவசமாக அல்ல, பாலை விற்று அதை வைத்து பணத்தைக் கட்டுங்கள் என்கிறேன். பெண் குழந்தை பிறந்தால் 10 ஆயிரம் ரூபாய், அந்தக் குழந்தையின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்வேன் என்றேன். அந்தக் குழந்தையின் திருமணத்தின்போது 1 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதால்தான் அப்படிச் சொன்னேன்.
அடுத்து தேமுதிக ஆட்சிதான்:
அடுத்து தேமுதிகதான் ஆட்சி அமைக்கும் என்பதை அடித்துச் சொல்வேன். நான் நானாகத்தான் இருக்கிறேன். தெய்வமும், மக்களும் எனக்குத் துணையாக உள்ளனர். பல கட்சிள் கூட்டணிக்காக வருகிறார்கள். தேமுதிகவின் வளர்ச்சிையப் பார்த்து வருகிறார்கள்.
தேமுதிக தொடங்கி 4 ஆண்டுகளிலேயே 20 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறியதைப் பார்த்து பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
தேமுதிக சொன்ன தேர்தல் அறிக்கையைத்தான் தற்போது திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. இன்று கட்சியில் சேர்ந்துள்ள 5 ஆயிரம் பேரும், 50 ஆயிரம் ஓட்டுக்களாக மாற்றித் தர வேண்டும் என்றார் விஜயகாந்த்.