எஸ்.ஐ.க்கு எதிராக திருச்செந்தூரில் வக்கீல்கள் ஸ்டிரைக்
திருச்செந்தூர்: வக்கீலை தாக்கிய சப் இன்ஸ்பெக்டரை எதிர்த்து திருச்செந்தூரில் வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்ைத நடத்தினர்.
திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ். வக்கீல். நேற்று முன்தினம் மாலை இவர் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றார். அங்கு பணியிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், அவரை பார்த்து நீ யார், என்று கேட்டார். அதற்கு அமல்ராஜ், நான் ஒரு வக்கீல் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து அடையாள அட்டை வைத்துள்ளேர்களா என்று எஸ்ஐ கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அமல்ராஜை பிடித்து எஸ்ஐ கீழே தள்ளியுள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி எஸ்பிக்கு அமல்ராஜ் புகார் அனுப்பினார். பின்னர் திருச்செந்தூர் வந்த அமல்ராஜ் பார் சங்கத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார்.
தொடர்ந்து நடந்த வக்கீல்கள் சங்க கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோர்ட் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருச்செந்தூர் கோர்ட்டில் பணியாற்றும் 10 பெண் வக்கீல்கள் உள்பட 55 பேர் கோர்ட் பணிகளை புறக்கணித்தனர்..