ரம்ஜான் திருநாள்-தலைவர்கள் வாழ்த்து

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கி வலிமை சேர்த்திடும் ஒரு மாத காலக்கடுமையான நோன்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்து, ரமலான் திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நிறைந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கை நெறி என்றார் தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா, எந்நெறியாக இருந்தாலும், எத்தகைய மார்க்கமாக இருந்தாலும், அது மனித சமுதாயத்திற்கேற்ற நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியதாக இருக்க வேண்டும். முஸ்லீம் மார்க்கம் எல்லைக் கோட்டைக் கடந்து, மற்ற பிற பாகுபாடுகளைக் கடந்து மக்களைக் கவர்ந்திருக்கிறதென்றால் அதற்குக் காரணம் மனித சமுதாய முன்னேற்றத்திற்கு, நல்வாழ்க்கைக்கு அது உயர்ந்த வழிமுறையைக் காட்டியிருப்பதுதான் என்று கூறி இஸ்லாமிய நெறியைப் புகழ்ந்துரைக்கிறார்.
தந்தை பெரியாராலும், பேரறிஞர் அண்ணாவாலும் போற்றப்பட்ட பெருமைக்குரிய நெறியைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதற்காகப் பல்வேறு சலுகைகளை இந்த அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.
1969 இல் நபிகள் நாயகம் பிறந்த மீலாது நபி தினத்திற்கு அரசு விடுமுறை; 1973ல் உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பு; 1974ல் சென்னை அண்ணா சாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி' எனப் பெயர் சூட்டியமை; 1989ல் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் நலம்பெற சிறுபான்மையினர் ஆணையம்,
1998ல் ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பதை 2200 ஆகவும், 2008ல் 2400 ஆகவும் உயர்த்தியமை; தர்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் ஓய்வூதியம் நீட்டிக்கப்பட்டு, மாதம் 750 ரூபாய் வீதம் வழங்குதல்;
2000ல் உருது அகாடமி தொடங்கப்பட்டமை; 2001ல், காயிதே மில்லத் மணிமண்டபம் கட்ட ஆணையிடப்பட்டு 25.2.2001 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பின்னர் கட்டி முடிக்கப்பட்டமை;
2007ல், சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்திற்காக தனி இயக்குநரகம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை;
2007ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளில் இஸ்லாமியருக்கு 3.5 விழுக் காடு தனி இட ஒதுக்கீடு வழங்கியமை; இவ்வாறு, ஆட்சிப் பொறுப்புக்கு வரும் ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் வாழும் இஸ்லாம் சமுதாய மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு எப்பொழுதும் மிகுந்த அக்கறை கொண்டு சலுகைகள் வழங்கி வருவதனை அனைவரும் நன்கு அறிவர்.
இத்தகைய சலுகைகளை வழங்கி வருவதுடன் இஸ்லாமிய சமுதாய மக்களின் நலம் நாடி, பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் இந்த அரசின் சார்பில் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் எல்லா வளங்களும் நிறைந்திட என் இதயங்கனிந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குகிறேன்.
ஜெயலலிதா வாழ்த்து:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
ரமலான் மாதத்தில் இறைக் கட்டளைப்படி மூன்று செயல்களை ஒரு சேரச் செய்கின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது. அதாவது நோன்பு நோற்பது, ஐந்து வேளை தொழுகை செய்வது, ஏழைகளுக்கு நன்கொடை வழங்குவது. இதில் நோன்பு என்பது உண்ணாமல், பருகாமல் எந்த அளவுக்கு இருக்கிறோம் என்பது மட்டுமல்ல, அதை யாருக்காக கடைபிடிக்கிறோம் என்ற உணர்வோடு இருக்க வேண்டும் என்பதே மேலானது.
உண்ண உணவு கிடைக்காத ஏழைகளின் மன நிலையை உணர வைப்பது ரமலான் நோன்பின் தலையாய நோக்கம் ஆகும். வசதியானவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றார்களோ, அதே போல் ஏழை எளியவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இது இஸ்லாமியர்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.
இந்நோன்பு அனைத்து இஸ்லாமியர்களுக்கு ஏற்றமும், இன்பமும் நல்கட்டும். மன அமைதியை தரட்டும். தமிழகத்தில் நல்லாட்சி மலர வழி வகுக்கட்டும் என்று வாழ்த்தி மீண்டும் எனது உளமார்ந்த 'ஈத்' திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதே போல பாஜக எம்.பி.திருநாவுக்கரசர், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.