இலங்கை ராணுவ தாக்குதலில் 59 புலிகள் பலி
கொழும்பு: இலங்கையில் ராணுவமும், விமானப்படையும் இணைந்து நேற்று நடத்திய தாக்குதலில் 59 விடுதலைப் புலிகளும், 2 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் முக்கிய தலமான கிளிநொச்சியை குறி வைத்து இலங்கை படைகள் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல், அமைதி மற்றும் போலீஸ் தலைமையகம் மீது விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் இந்த அலுவலகங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
இதேபோல, கொட்டுக்குளம் பகுதியில் தரைப்படை நடத்திய தாக்குதலில் 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். அக்கரயன்குளம், திரிகோணமலை பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த அதிரடி தாக்குதலில் 59 புலிகளும், ராணுவ தரப்பில் 2 வீரர்களும் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர் என்று ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.