'மஞ்சள் சட்டை எங்களுக்கே': விஜயகாந்த்துக்கு வன்னியர் சங்கம் எதிர்ப்பு!
சென்னை: வன்னியர் சங்கத்திற்கே உரிய மஞ்சள் நிற சட்டையை தனது கட்சியின் இளைஞர் அணியினரை விஜயகாந்த் அணிய வைத்திருப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயலாகும். இதை அவர்கள் செய்ய வேண்டாம் என்று பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் கூறியுள்ளார்.
தேமுதிக இளைஞரணியினர் தற்போது மஞ்சள் சட்டை அணிய ஆரம்பித்தனர். வன்னியர் சங்கத்தினரும் இதே நிறத்திலான சட்டையைத்தான் அணிந்து வருகின்றனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினரும் மஞ்சள் சட்டையைத்தான் அணிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தேமுதிக இளைஞரணியினர் மஞ்சள் சட்டை அணிவதற்கு பாமக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில், வீர வன்னியர்கள் அணிவது மஞ்ள் நிற சட்டையாகும்.
வன்னியர் சமுதாயத்தினரும் மற்றும் நசுக்கப்பட்டு உரிமை இழந்து கிடந்த இந்த மக்களுக்கு வழிகாட்டியாய் கிடைத்த டாக்டர் ராமதாஸை நிறுவனராகக் கொண்டு இயங்கி வரும் பாமகவைச் சேர்ந்தவர்களும் வழக்கமாக அணிவது மஞ்சள் நிற சட்டையாகும்.
இந்த நிலையில் விஜயகாந்த் கட்சி நடத்துகிற இளைஞரணி மாநாட்டிற்கு வரும் இளைஞர்கள் வன்னியர் சங்கத்தினருக்கே உரிய மஞ்சள் நிற சட்டையை அணிந்து வர வேண்டும் என்று அறிவித்திருப்பதை விஜயகாந்த் கைவிட வேண்டும்.
மஞ்சள் சட்டை என்றால் அது வன்னியர் சங்கத்தையே குறிக்கும். எனவே அதில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் வேல்முருகன்.