ரூ. 7627 கோடியில் இரு மின் திட்டம்: ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 1600 மெகாவாட் மின் உற்பத்திக்கு வழிவகுக்கும், ரூ.7627 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய மின் திட்டங்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவைக்கு தீர்வு காணும் வகையில், மாநில அரசும், தமிழ்நாடு மின் வாரியமும் மத்திய அரசின் கிராமப்புற மின்வசதி கழகத்தின் நிதியுதவியுடன் வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கம் மற்றும் நெய்வேலி நிலக்கரி கழகத்துடன் இணைந்து 2008-09ம் ஆண்டில் ரூ.7627 கோடி மதிப்பீட்டில் 1600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இரு பெரிய மின் திட்டங்களை நிர்மாணிக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மேலும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தமிழ்நாடு மின்வாரியமும், நெய்வேலி அனல் மின் நிலையமும் இணைந்து கூட்டுத் துறையில் ரூ.4909 கோடி மதிப்பீட்டில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்திடும் 2 மின் திட்டங்களை அமைக்க உள்ளது. இதற்கு கிராமப்புற மின் வசதிக்கழகம் ரூ.3437 கோடி கடனுதவி வழங்குகிறது.
மேலும் வட சென்னை அனல் மின் நிலையத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தில் தமிழ்நாடு மின்வாரியம் ரூ.2718 கோடி மதிப்பீட்டில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்திடும் 2ம் பிரிவை அமைக்கவும் ரூ.2175 கோடியை கிராமப்புற மின் வசதிக் கழகம் (இரண்டையும் சேர்த்து மொத்தம் ரூ.5612 கோடி கடனுதவி) கடனுதவியாக வழங்குகிறது.
இந்த திட்டங்களுக்காக இன்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் கிராமப்புற மின்வசதிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பி.உமா சங்கர், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் எஸ். மச்சேந்திரநாதன், நெய்வேலி நிலக்கரி கழகத்தின் தலைவர் ஜே.என்.பிரசன்னகுமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இவை தவிர ரூ.3340 கோடி மதிப்பீட்டில் புதிய மின் திட்டங்களால் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தேவைப்படும் இடங்களுக்கு அனுப்புதல் மற்றும் பகிர்ந்து வழங்குதல் ஆகியவற்றுக்கான பெரிய மின்திட்டங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.
இவற்றுக்காக தமிழக மின் வாரியத்துக்கு கிராமப்புற மின்வசதிக் கழகம் ஏற்கனவே இந்த ஆண்டில் ரூ.3113 கோடி கடனுதவி வழங்கியுள்ளது.
இத்திட்டங்களின் வாயிலாக 9000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், தமிழகத்தில் அதிகரித்துவரும் மின் தேவைகள் நிரந்தரமாகவும், நீண்ட காலத்திற்கும் பூர்த்தி செய்யப்படும்.
நிகழ்வின்போது மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மற்றும் நிதித்துறை முதன்மை செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.