இ.முன்னணி தொண்டர் குண்டர் சட்டத்தில் கைது
கோவை: கோவையில் கிருஸ்துவ ஆலயம் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியைச் சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை துடியலூர் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள கிருஸ்தவ தேவாலயம் மீது கடந்த மாதம் 28ம் தேதி தாக்குதல் நடந்தது. அதில் தேவாலய கதவு சேதமடைந்தது.
மேலும் அதே பகுதியில் உள்ள ஜஸ்டஸ் என்பவரின் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீதும் தாக்குதல் நடந்தது.
இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திகேயன் (27), ராஜேஷ் (25) ஆகியோரை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையி்ல் அடைக்கப்பட்டனர். இவர்களில் கார்த்திகேயன் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு, 4 அடிதடி வழக்குகளும் உள்ளன.
அவரது நடவடிக்கைகள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் மத கலவரத்தை தூண்டும் வகையிலும் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் கோவை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதை ஏற்ற கலெக்டர் பழனிக்குமார், கார்த்திகேயனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.