For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'இலங்கை': அரசியல் வேண்டாம்-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: விடுதலைப் புலிகள் என்ற பூச்சாண்டியை காட்டி தமிழர்களின் தன்மானத்தை மழுங்கடிக்க செய்யும் எத்தகைய முயற்சியிலும் நம்மில் எவரும் ஈடுபட வேண்டாம். இலங்கை தமிழர் பிரச்சனையில் தேவையில்லாத அரசியல் வேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இலங்கை இனி சிங்களவர்களுக்கே சொந்தம். தமிழர்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கையை சிங்களவர்களின் நாடு என்பதை ஒப்புக் கொண்டு தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக, அதாவது சிங்களவர்களுக்கு அடிமையாக வாழக்கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழர்களுக்கு இங்கே இடமில்லை'' என்று சிங்கள போர்ப்படைத் தளபதி பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

சிங்கள போர்ப்படைத் தளபதியின் இந்த பிரகடனம் ஒட்டுமொத்த தமிழினத்திற்கு விடப்பட்ட சவால் என்பதை உணர்ந்து செயல்பட முன் வர வேண்டும்.

இலங்கையில் தமிழினத்தின் உரிமைகளுக்காகவும், தமிழர்களின் தன்மானத்தை காக்கவும் போர்முனையில் போராடி வரும் பிரபாகரன் எங்கள் முன்னால் மண்டியிட வேண்டும் என்றும் சிங்கள வெறிப்பிடித்த அந்த தளபதி முழங்கியிருக்கிறார்.

இதன் மூலம் பிரபாகரனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினமே சிங்களவர்கள் முன் மண்டியிட வேண்டும் என்றுதான் சொல்கிறார் அந்த போர்ப்படை தளபதி பொன்சேகா.

பொன்சேகா அங்கே தளபதியாக நீடிக்க கூடாது என்று இங்கே நாம் உரக்க குரல் எழுப்ப வேண்டும். இங்கே எழுப்பப்படும் குரல் டெல்லி வரை எட்ட வேண்டும். அதற்கான முயற்சியில் தமிழக அரசும் ஈடுபட வேண்டும்.

விடுதலைப் புலிகள் என்ற பூச்சாண்டியை காட்டி தமிழர்களின் தன்மானத்தை மழுங்கடிக்க செய்யும் எத்தகைய முயற்சியிலும் நம்மில் எவரும் ஈடுபட வேண்டாம். இது ஓர் இனத்தின் தன்மான பிரச்சினை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கை தமிழர்களும், இங்குள்ள தமிழர்களும் ஒன்றுபட்டவர்கள் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். இலங்கை தமிழர்களை காக்கும் பிரச்சினையில் அரசியல் வேண்டாம். இதில் அரசியலை ஒதுக்கி வைத்து விடுவோம். இலங்கை தமிழர்களை காக்கும் முயற்சியில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்.

தமிழர்கள் சார்பில் தமிழக அரசும், முதல்வரும் முன் நின்று மேற்கொள்ளும் முயற்சிக்கு துணை நிற்போம். தமிழக அரசும், முதல்வரும் அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கட்டி தீர்மானம் நிறைவேற்றி விட்டோம் என்பதோடு கடமை முடிந்து விட்டது என்று கருதிவிடக்கூடாது.

இலங்கை அதிபருடன் நமது பிரதமர் நேரடியாக பேசவேண்டும் என்றும், இந்தியாவில் இருந்து உடனடியாக உயர்மட்ட தூதுக்குழு ஒன்றை அனுப்பி இலங்கை தலைவர்களை சந்தித்து போரை நிறுத்தும்படியும் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால், இனி இலங்கை தமிழர்களுக்கு உரிமைகளை பெற்றுத்தர வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காது என்பதை மனதில் நிறுத்தி செயல்பட அனைவரும் முன் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் ரயில் மறியல்:

இதற்கிடையே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் சார்பில் வரும் 23ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈழத் தமிழினம் அழிவதை தடுக்க வலியுறுத்தி தமிழக மக்களிடையே கடந்த சில வாரங்களாக கொந்தளிப்பு நிலவி வருகிறது. அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வணிகர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பிலும் சிங்கள இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.

அந்த வரிசையில் 18ம் தேதி திரையுலகத்தினரும் ராமேஸ்வரத்தில் கண்டன அணிவகுப்பு நடத்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரையுலகத்தினரின் மனிதநேயம் மற்றும் இனமான உணர்வுகளை விடுதலை சிறுத்தைகள் நெஞ்சார வரவேற்று பாராட்டுகிறது.

ஈழத் தமிழர்களை பாதுகாத்திட இந்திய அரசு உடனடியாக தலையிடும்படி வலியுறுத்தி 21ம் தேதி மனித சங்கிலி அறப்போர் சென்னையில் நடைபெறுவதாக முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதில் விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்பர். தமிழர் சங்கிலி போராட்டம் டெல்லியை அசைப்பதாகவும், கொழும்புவை அச்சுறுத்துவதாகவும் பெரும் தாக்கத்தை உருவாக்குவதாகவும் அமைய வேண்டும்.

மேலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 23ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் விடுதலை சிறுத்தைகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடும். அன்று தமிழகத்தின் எந்த திசையிலும் தொடர் வண்டிகள் ஓடுவதற்கு விடுதலை சிறுத்தைகள் அனுமதிக்க மாட்டோம் என்பதை தெரிவித்து அப்போராட்டத்திற்கும் தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X