For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனப் படுகொலை: உறங்க முடியாமல் தவிக்கிறேன்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanithi
சென்னை: இலங்கையில் தமிழ் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டிருப்பதை எண்ணி எண்ணி ஏங்குகிறேன், பெருமூச்சு விடுகிறேன். மனம் ஒரு நிலையில் இல்லை. உறங்க முடியாமல் தவிக்கிறேன். இந்த இனப் படுகொலையை என்ன விலை கொடுத்தாவது தடுப்போம் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஒரு சில ஏடுகள் மத்திய அரசுக்கு விடுத்த மிரட்டல் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன.

அதைப்பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, தமிழக கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்த மிரட்டலாக கருதவில்லை. அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதற்கு வேதனை தெரிவித்திருப்பதாகத் தான் கருதவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நிலவும் சூழ்நிலை எங்களுக்கு பெரிதும் கவலை அளிக்கிறது. தாங்கள் உருவாக்காத சூழ்நிலையின் பிடியில் அப்பாவி மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலை நினைத்துத் தான் நாங்கள் குறிப்பாகக் கவலைப்படுகிறோம்.

அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது. அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை அனுமதிக்க வேண்டும். ராணுவ பலத்தைப் பயன்படுத்தியோ போர்க்கள வெற்றிகளாலோ இயல்பு நிலையை திரும்ப கொண்டு வர முடியாது என்று இந்தியா உறுதிபட தெரிவித்து வருகிறது என்றெல்லாம் சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றி நாம் அனுப்பிய தீர்மானங்களையெல்லாம் நன்றாகப் பரிசீலித்து அதனையேற்றுக் கொள்ளும் வகையிலே மத்திய அரசு செயல்படும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது நமக்கு!

ஆனால் ஜெயலலிதாவிற்கு இதைப்பற்றியெல்லாம் எண்ணிப் பார்க்க நேரமில்லை. 1983ம் ஆண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக நானும் பொதுச் செயலாளர் பேராசிரியருக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை ஜெயலலிதா கொச்சைப்படுத்தி, அப்போதும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தீரவில்லையே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி பிரச்சினைக்காக ஜெயலலிதா கால வரம்பற்ற உண்ணாவிரதம் என்று தொடங்கினாரே; பிறகு அதனைத் திரும்பப் பெற்றாரே, காவேரி பிரச்சினை தீர்ந்த பிறகா உண்ணா விரதத்தை நிறுத்தினார். இல்லையே. அந்தப் பிரச்சினை இன்னமும் முடிந்தபாடில்லையே?.

இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது ஓராண்டு ஈராண்டுகளாக அல்ல.

1939ம் ஆண்டே பண்டித ஜவகர்லால் நேரு இண்டியன் இன் சவுத் ஏசியா என்ற நூலில்- இந்தியாவுக்கு வெளியே வாழுகின்ற இந்தியர்களைப் பற்றி, அப்போது நடை பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு ஒரு செய்தி அனுப்புகிறார்.

அந்த செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:-

இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது வெளிநாட்டில் வாழும் தனது மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது.

ஆனால் இந்தியா அவர்களையும் அவர்களுக்கு ஏற்படும் துயரத்தையும் இழிவையும் மறப்பதில்லை. ஒரு நாள் வரும் - அன்றைக்கு இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும் - அதன் வலிமையினால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்.

இவ்வாறு பண்டித நேரு 1939ம் ஆண்டிலேயே வெளி நாட்டில் வாழும் தமிழர்களுக்காக இந்தியாவின் பாதுகாப்புக் கரம் நீளுகின்ற நாள் ஒன்று வரும் என்று அறிவித்தாரே, அந்த நாள் இந்த நாளாக இருக்க வேண்டுமென்று தான் மத்திய அரசை நோக்கி நாம் குரல் கொடுக்கின்றோம்.

இலங்கைத் தமிழர்களுக்காக திமுக எதுவும் செய்ய வில்லை என்றதொரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. திமுக பொறுப்பிலே இருந்தபோது 1976ம் ஆண்டிலும், 1991ம் ஆண்டிலும் இரண்டு முறை மத்திய அரசினால் ஆட்சியிலிருந்து கலைக்கப்பட்டது. அந்த இரண்டு முறையும் திமுக மீது பழி சுமத்தப்பட்டது என்றால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக திமுக நடந்து கொண்டது என்பது தான் முக்கியமான குற்றச்சாட்டு! தலையாய பழியுமாகும்!.

1976ம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது, கலைக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை சென்னை கடற்கரையில் அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி உரையாற்றியபோது, திமுக அரசு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கையிலே இருக்கின்ற அரசுக்கு விரோதமாக நடைபெற்று வருகின்றது. அது இந்தியாவின் வெளி நாட்டுக் கொள்கைக்கு ஏற்றதல்ல. கழக ஆட்சியை கலைத்ததற்கு அதுவும் ஒரு காரணம் என்று அவரே கூறியிருக்கிறார். எனவே வேறு எதுவும் அதற்கு சான்று தேவையில்லை என்று கருதுகிறேன்.

1976ம் ஆண்டு ஆட்சிக் கலைப்புக்குப்பிறகு திமுக 12 ஆண்டு காலம் பதவிப் பொறுப்புக்கு வரவில்லை. அந்த இடைக்காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்காக எதுவுமே செய்யாமல் மவுனமாக இருந்து விடவில்லை.

1981ம் ஆண்டு திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, தமிழகச் சட்டமன்றப் பேரவையிலே ஒரு தீர்மானம் அதிமுக ஆட்சியினரால் கொண்டு வரப்பட்டபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான் என்ன செய்தேன்?.

தீர்மானம் அதிமுகவால் கொண்டு வரப்படுகிறது என்பதற்காக புறக்கணித்தேனா? அவையிலிருந்து வெளி நடப்பு செய்தேனா? தீர்மானத்தை எதிர்த்தேனா? இடைவிடாது இழிதகை அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தேனா?, அம்மையாரைப்போல.. கிடையாது.

அதிமுக கொண்டு வந்த தீர்மானம், இலங்கைத் தமிழர்களுக்காக என்பதால், அந்தத் தீர்மானத்தை வழி மொழிந்து உரையாற்றினேன்.

நாம் எந்த அளவிற்கு அன்று பெருந்தன்மையோடு தமிழ் உணர்வோடு நடந்து கொண்டோம், இப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா எந்த அளவிற்கு பெருந்தன்மையோடு நடந்து கொள்கிறார் என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ளது.

இலங்கையிலே உள்ள தமிழ் மக்கள் "கடலுக்கு அப்பால் கரையுண்டு என்றிருந்தோம்; கரையே கடலானால் எங்கே போய்க் கால் வைப்போம்?'' என்று இலங்கைத் தமிழ்க் கவிஞன், உணர்ச்சிக் கவிஞன் காசி ஆனந்தன் பாடிய கவிதையைப் பாடிக் கொண்டு, பல ஆண்டுக் காலமாக உகுத்திடும் கண்ணீர்த் துளிகளுக்கு நாம் தரப் போகும் பதில் என்ன?

'ஆண்மைச் சிங்கத்தின் கூட்டம்' என்று பாவேந்தர் தமிழ் இனம் குறித்துப்பாடியது வெறும் சொற்குப்பை தானா?

'வெங்கொடுமைச் சாக் காட்டில் விளையாடும் தோள் எங்கள் வெற்றித் தோள்கள்' என்றாரே, அந்தத் தோள்கள் எங்கே?

நமது தமிழ் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது. எண்ணி எண்ணி ஏங்குகிறேன், பெருமூச்சு விடுகிறேன். மனம் ஒரு நிலையில் இல்லை. உறங்க முடியாமல் தவிக்கிறேன்.

இனம் காப்போம்!

இனமானம் காப்போம்!

இனப் படுகொலையை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம்!

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X