For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: மத்திய அரசு ஏன் தலையிட முடியாது?-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இன்னொரு நாட்டின் பிரச்சனையில் நாம் தலையிட முடியாது என்றால் வங்காளதேசம் எப்படி உருவானது என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி

கேள்வி: எம்பிக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார்கள். இதை மத்திய அரசு எப்படி எடுத்துக் கொள்ளும் என்று நினைக்கிறீர்கள்?

கருணாநிதி: நாங்கள் எதிர்பார்த்ததைத்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றினோம். அந்தத் தீர்மானத்தைத்தான் நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன், டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியை அழைத்து தனது கவலையை தெரிவித்திருக்கிறாரே? பிரதமரும் தனது கவலையை சொல்லி இருக்கிறாரே?

கருணாநிதி: அது சரியானதுதான்.

கேள்வி: போர் நிறுத்தம் இப்போது சாத்தியமில்லை என்று ராஜபக்சே சொல்லியிருக்கிறாரே?

கருணாநிதி: போர் நிறுத்தம் செய்ய முடியாது என்று அவர் சொன்னதாக காலை பத்திரிகையில் வந்திருக்கிறது. ஆனால் மாலைப் பத்திரிகையில் அவர் அப்படி சொல்லவில்லை என்று செய்திகள் வந்திருக்கின்றன.

கேள்வி: ஏற்கனவே மத்திய அரசுக்கு 2 வார கெடு கொடுத்திருக்கிறீர்களே. அதற்குள் ஏன் திமுக எம்.பி.க்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தனர்?

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு (குறுக்கிட்டு): நாங்கள்தான் தானாக முன்வந்து கொடுத்தோம். முதல்வர் கடிதம் கொடுங்கள் என்று கேட்கவில்லை.

கேள்வி: நாடாளுமன்றத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், அதில் திமுக எம்.பிக்களின் ஓட்டும் அவர்களது எண்ணிக்கையும் தேவைப்பட்டால் திமுக எம்பிக்கள் என்ன நிலை எடுப்பார்கள்?

கருணாநிதி: அங்கு கடிதம் தரப்படவில்லை. அவர்கள் கொடுத்துள்ள கடிதம் என்னிடம்தான் உள்ளது.

கேள்வி: மத்திய அரசு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

கருணாநிதி: இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கு எத்தகைய வழிமுறைகளை கையாள வேண்டும் என்பது மத்திய அரசுக்கு தெளிவாக தெரியும். இலங்கையில் எந்த முறையை கையாள்வது என்பதை அவர்களே முடிவெடுத்து செயல்பட்டு இலங்கையில் படுகொலைக்கு இதுவரை ஆளாகாத தமிழர்களை பாதுகாப்பார்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி: ஒரு நாட்டின் உள்நாட்டு பிரச்சினையில் அண்டை நாடுகள் தலையிடுவது சரியா? நம் நாட்டு பிரச்சினையில் இன்னொரு நாடு நுழைவதை நாம் விரும்புவோமா?

கருணாநிதி: அப்படியானால், வங்காளதேசம் எப்படி உருவானது?

கேள்வி: இந்திய ராணுவம் அங்கே செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

கருணாநிதி: ராணுவத்துக்கு ராணுவம், போருக்கு போர், துப்பாக்கிக்கு துப்பாக்கி, டாங்கிப் படைக்கு டாங்கிப் படை என்று தீர்வு காண வேண்டும் என்று சொல்லவில்லை. அங்கு எழுந்துள்ள பிரச்சினைக்கு அமைதியின் மூலமாகவும் தீர்வு காண முடியும்.

கேள்வி: நீங்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்காகத்தான் இதுபோன்ற தீர்மானம் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறதே?

கருணாநிதி: எங்களுடைய பிரச்சனை நீங்கள் நினைப்பது போல விடுதலைப் புலிகளை காப்பாற்றுவதோ, விடுதலைப் புலிகளுக்கு உதவுவதோ அல்ல. அனாதையாக அங்கே செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதுதான்.

கேள்வி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சிகளுக்கு மனித சங்கிலி போராட்டத்துக்கு அழைப்பு விடுப்பீர்களா?

கருணாநிதி: அனைத்துக் கட்சி கூட்டத்தையே கபட நாடகம் என்று அறிக்கை விடுத்திருக்கிறார்கள். விடுதலைப்புலிகளுக்காக போராட்டம் நடத்துகிறோம் என்றும் மேடையிலே பேசியிருக்கிறார்கள். அப்பேர்பட்டவர்களுக்கு மனித சங்கிலிக்கான அழைப்பு எப்படி அனுப்ப முடியும்? அவர்கள் சங்கிலிக்குள் வரமாட்டார்கள்.

கேள்வி: தற்போது நடக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் திமுக எம்பிக்கள் கலந்து கொள்வார்களா?

கருணாநிதி: ஒரு குறிப்பிட்ட காலக்கெடு (28ம் தேதி) கொடுத்திருக்கிறோம். அதுவரைக்கும் கலந்து கொள்வார்கள்.

கேள்வி: இந்த பிரச்சினையால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவிழும் வாய்ப்பு உள்ளதா?

கருணாநிதி: அப்படிப்பட்ட ஒரு நோக்கத்தோடு நாங்கள் செயல்படவில்லை. அந்த நோக்கத்தோடு தீர்மானமும் நிறைவேற்றவில்லை.

கேள்வி: அக்டோபர் 28ம் தேதியில் காலக்கெடு முடிவதற்குள் ஒரு தீர்வு வரும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

கருணாநிதி: தீர்வு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி: வரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

கருணாநிதி: நாங்கள் எந்த நடவடிக்கையையும் அடுத்தடுத்து என்ன என்பதை முதலிலேயே சொல்வதில்லை. அவ்வப்போது திமுக உயர்மட்டக் குழு, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டித்தான் முடிவு செய்வோம்.

கேள்வி: காங்கிரஸ் உங்களுடைய கூட்டணியில் இருக்கிறார்கள். கே.வி.தங்கபாலு, நான் வேண்டும் என்றால் ராஜினாமா செய்யலாம். மற்ற காங்கிரஸ் எம்பிக்கள் ராஜினாமா குறித்து சோனியா காந்திதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறாரே?

கருணாநிதி: அவருடைய நிலைமையை அவர் சொல்லியிருக்கிறார். அதைப்பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை.

கேள்வி: 28ம் தேதிக்குள் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பீர்களா?

கருணாநிதி: எனக்குத் தெரியாது.

கேள்வி: இதனால் காங்கிரசுடனான கூட்டணிக்கு ஏதும் பாதிப்பு வருமா?

கருணாநிதி: பாதிப்பு யாருக்கு வரும், யாருக்கு வராது என்பது பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. இலங்கையில் உள்ள தமிழனுக்கு வந்த பாதிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் சிந்தனை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X