மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மண்ணின் மைந்தர்களாக பிறந்து, மாமன்னர்களாக வாழ்ந்து, இந்த மண்ணுக்குள்ளேயே கலந்திருக்கும் மாமனிதர்களில் மிக முக்கியமானவர் கலைஞர் கருணாநிதி.. காரணம், கருணாநிதி அன்று செதுக்கிய சிலைகளும், எழுப்பிய கட்டிடங்களும், உருவாக்கிய பாலங்களும், தமிழகத்தின் வரலாற்றையும், நவீன வளர்ச்சியையும் என்றென்றும் உலகிற்கு உரக்கச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன..!!!

கட்டிடக்கலை என்றாலே ராஜராஜசோழனும், தஞ்சை பெரிய கோயிலும் நம் கண் முன்னே வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.. வெறும் கல்லால் வானளாவ கோபுரம் அமைத்து, இன்றளவும் போற்றப்படும் அதிசயத்தை அரங்கேற்றியவன் சோழ மன்னன் என்பதில் சந்தேகமும் இல்லை.

Kalaignar Karunanidhi Valluvar Kottam Kalaignar Legacy Kalaignar DMK History

ஆனால், எண்ணற்ற கட்டிட நினைவாலயங்களை எழுப்பிவிட்டு, அதில் சரித்திரத்தையும் எழுதிவிட்டு சென்றவர், சோழ மண்ணின் மைந்தர் கலைஞர் கருணாநிதி...

ஆம், சோழர்கள், முகலாய பேரரசர்களுக்கு பிறகு கட்டிடக்கலை மீது, ஈடில்லா காதல் கொண்ட ஒரே அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி மட்டுமே...

கட்டி முடிக்கப்பட்டு இத்தனை காலமாகியும், நேற்று கட்டின புதுக்கட்டிடம் போலவே கம்பீரம் குறையாமல் உயர்ந்து நிற்கிறது வள்ளுவர் கோட்டம்.. கலைஞர் கருணாநிதி எழுப்பிய ஒவ்வொரு கட்டிடமும், சிலையும் பிரத்யேக வரலாற்றினை தாங்கிப் பிடித்து கொண்டிருப்பவை..

வள்ளுவர் கோட்டம்

இந்த வள்ளுவர் கோட்டத்தையே இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம்.. 1976-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.. பிரம்மாண்டமான கட்டிடமும் உருவானது.. திறப்பு விழாவிற்காக பிப்ரவரி மாதம் 1,2,3 என்ற நாட்களும் குறிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாயின.

ஆனால் அப்போதைய நெருக்கடி நிலையை கருணாநிதி எதிர்த்தற்காக, பிரதமர் இந்திரா காந்தி ஜனவரி-30ம் தேதியே திமுக அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டார்.. வள்ளுவர் கோட்டம் திறப்பதற்கு எல்லாவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், விழாவை தள்ளி போட முடியாத நிலைமை வந்தது.. இதன்காரணமாக வள்ளுவர் கோட்டத்தை ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுதான் திறந்து வைத்தார். இதன்காரணமாக வள்ளுவர் கோட்டம் சம்பவம் கலைஞரின் மனதை கடைசிவரை அரித்து கொண்டே இருந்தது.


அண்ணா சாலை - அண்ணா சிலை

இதேபோல, திமுக சார்பில் அறிஞர் அண்ணாவுக்கு சிலை வைக்க ஆசைப்பட்டார் கலைஞர்.. அதற்காக வள்ளுவர் கோட்டம் எதிரே அண்ணா சிலை வைக்க அனுமதி தரப்பட்டது. ஆனால், இப்போது கலைஞர் வெகு சாமர்த்தியமாக செயல்பட்டார். வள்ளுவர்கோட்டம் நுழைவாயில் அருகே அண்ணாசிலையை திறந்தார். சிலையின் பீடத்தில், "சிலை திறப்பாளர், வள்ளுவர் கோட்டம் கண்ட கலைஞர் கருணாநிதி" என்று கல்வெட்டில் பொறித்து வைத்தார். இதனால் கலைஞரின் மனக்குறை தணிந்தது,. அகம் மகிழ்ந்தது.

அப்போதிருந்து இன்றுவரை திமுகவினர் அண்ணா பிறந்த நாளன்று வள்ளுவர் கோட்டம் சிலைக்கு வந்துதான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி செல்கிறார்கள்.. இப்படி தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில், கட்டிடம் மற்றும் சிலை இரண்டையும் ஒரே இடத்தில் நிறுவும் நுட்பமான அறிவு கலைஞரை தவிர வேறு யாருக்கு வரும்?

அதேபோல கட்டிடக்கலை துறையில் அவர் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் பூம்புகாரில் அமைக்கப்பட்ட சிலப்பதிகார கலைக்கூடம் ஆகும். சிலப்பதிகார காவியத்தை உலகறியச் செய்யும் வகையில், பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைகளுடன் கூடிய அந்த கலைக்கூடத்தை அவர் உருவாக்கினார்.

அதேபோல மதுரையில் உலகத் தமிழ்ச் சங்க வளாகம் அமைப்பதற்கான அடித்தளமிட்டதும், கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக விளங்கும் சென்னை புறநகர் பேருந்து நிலையத்தை உருவாக்கித் தந்ததும் கலைஞரின் தொலைநோக்கு பார்வைக்கு மிகச்சிறந்த சான்றுகளாகும்.

அண்ணா நூற்றாண்டு நூலகம்

நவீன சென்னையின் அறிவுப் புரட்சிக்கு வித்திடும் வகையில், அவர் கொடையாக வழங்கிய அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆசியாவின் மிகப்பெரிய அறிவுப் பொக்கிஷமாக, லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வை ஒளிரச் செய்து கொண்டிருக்கிறது.

சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தியதில் கலைஞரின் பங்கு மிக மிக முக்கியமானது. அதாவது வங்கக் கடலோரத்து மெரினா கடற்கரையை வெறும் மணல் பரப்பாக மட்டும் பார்க்காமல், அதைக் கலாச்சாரத்தின் முகவரியாக மாற்றிய பெருமை கலைஞருக்கு மட்டுமே உண்டு.

தமிழ்ச் சான்றோர்களான கம்பர், அவ்வையார், வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் மற்றும் ஆன்மீகச் சுடர் சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் கம்பீரமான சிலைகளை வரிசையாக நிறுவி, மெரினாவை ஒரு வரலாற்றுப் பேழையாக மாற்றியமைத்தார்.

தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா

சென்னை அண்ணா சாலையில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் முழு உருவச் சிலைகளை நிறுவி, திராவிட இயக்கத்தின் கொள்கை வழிகாட்டிகளுக்குத் தலைவணங்கினார்.

அரசியல் பேரியக்கத்தின் தலைமையகமாக சென்னை தேனாம்பேட்டையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 'அண்ணா அறிவாலயம்' கலைஞரின் உழைப்பிற்குச் சான்றாகும். மேலும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அவர் எழுப்பிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடம், அவரது நவீன கட்டிடக்கலை ரசனைக்கு உச்சகட்ட சான்றாகத் திகழ்கிறது.

சென்னைக்கு மிக அருகில் மறைமலைநகர் புதிய செயற்கைக்கோள் நகரத்தை உருவாக்கி நகர்ப்புற வளர்ச்சிக்கு வழிகோலியதோடு, தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்கக் காரணமாக அமைந்த தரமணி டைடல் பார்க் பிரம்மாண்ட வளாகத்தையும் அவரே கட்டி முடித்தார்.

கன்னியாகுமரி - நவயுக கரிகாலன்

கன்னியாகுமரி கடலின் நடுவே, 133 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 133 அடியில் கலைஞர் எழுப்பிய திருவள்ளுவர் சிலை, தமிழரின் கம்பீரத்திற்கும் உன்னத கட்டிடக்கலைக்கும் உலகளாவிய அடையாளமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது..

இப்படி கலைஞர் கருணாநிதி எழுப்பிய ஒவ்வொரு கட்டிடமும், சிலையும் பிரத்யேக வரலாற்றினை தாங்கிப் பிடித்து கொண்டிருப்பவை.. வெறும் செங்கற்களாலும் கருங்கற்களாலும் ஆன இந்த கட்டிடங்களை, பல நூறு வருடங்களுக்கு பேசக்கூடியவையும்கூட.. மொத்தத்தில், பல கட்டிட நினைவுகளை நம்மிடையை விட்டுச் சென்றுள்ளார் இந்த "நவயுக கரிகாலனான" கலைஞர் கருணாநிதி...!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+