பூடான் மன்னரானார் நாம்கியால்-பிரதீபா, சோனியா பங்கேற்பு

நாம்கியால், பூடான் நாட்டின் ஐந்தாவது மன்னர் ஆவார். முன்னாள் மன்னரான ஜிக்மே சிங்கே வாங்சுக்கின் மூத்த மகன் ஆவார். ஜிக்மே சிங்கே வாங்சுக்குக்கு மொத்தம் 10 குழந்தைகள். இவர்களில் ஐந்து பேர் மகன்கள், ஐந்து பேர் மகள்கள் ஆவர்.
மன்னராட்சி நிலவி வரும் பூடானில் சமீபத்தில் ஜனநாயக முறைப்படி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக்கின் முயற்சியால் இந்த தேர்தல் நடந்தது.
இதையடுத்து தான் பதவி விலகிக் கொண்டு தனது மூத்த மகனான நாம்கியாலை மன்னராக்க முடிவு செய்தார் சிங்கே. அதன்படி நேற்று பதவியேற்பு விழா நடந்தது.
பதவியேற்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா, மருமகன் ராபர்ட் வதேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்ற முறையில், பிரதீபா பாட்டீலுக்கும், நேரு குடும்பத்தினரின் நண்பர்கள் என்ற முறையில் சோனியா குடும்பத்தினருக்கும் பூடான் அரச குடும்பத்தினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இந்தியக் குழுவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவு செயலாளர் எஸ்.எஸ். மேனன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
வரவேற்புக்குப் பின்னர் சோனியா காந்தி பதவியேற்பு விழா நடைபெற்ற தங்க அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது நான்காவது மன்னரான ஜிக்மே சிங்கே வாங்சுக் மற்றும் புதிய மன்னரான நாம்கியால் ஆகியோர் புத்த துறவிகள் முன் செல்ல ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
ஆடல், பாடலுடன் இந்த ஊர்வலம் நடந்தது. அரண்மனைக்குள் ஊர்வலம் வந்ததும், அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். அப்போது சோனியாவைப் பார்த்த, ஜிக்மே சிங்கே வாங்சுக்கின் நான்கு மனைவியரும், சோனியாவை கட்டி அணைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர். தங்களுடன் முன் வரிசையில் வந்து நிற்குமாறும் அன்புடன் அழைத்தனர்.
பிரியங்கா, ராகுல் காந்தி மற்றும் ராபர்ட் வதேராவுக்கு நடுவில் நின்றபடி கலை நிகழ்ச்சிகளை ரசித்துப் பார்த்தார்.












Click it and Unblock the Notifications