உற்பத்தியைக் குறைக்கும் டாடா-லேலண்ட்

டாடா மோட்டர்ஸ் நிறுவனம் புனே, லக்னெள, ஜாம்ஷெட்பூர் ஆகிய இடங்களில் உள்ள தனது வாகன தொழிற்சாலைகளை இந்த மாதத்தி்ல் 6 நாட்கள் மூடிவிட முடிவு செய்துள்ளது.
லக்னெள தொழிற்சாலை 10ம் தேதி முதல் 15ம் தேதி ஒட்டுமொத்தமாக மூடப்படுகிறது. இங்கு தாழ்தளப் பேருந்துகள் உள்ளிட்ட பேருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
புனே தொழிற்சாலை 21ம் தேதி முதல் 6 நாட்கள் மூடப்படுகிறது. இங்கு தான் இன்டிகா, இன்டிகோ, சபாரி, சுமோ, மற்றும் இலகு ரக வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு 12,000 பேர் பணியாற்றுகின்றனர்.
இந்தத் தொழிற்சாலையில் கார்கள் உற்பத்திப் பிரிவு மட்டும் வழக்கம்போல் இயங்கவுள்ளது.
அதே போல லாரிகள், கன ரக வாகனங்கள், டிராக்டர் டிரெயலர்களை தயாரிக்கும் டாடாவின் ஜாம்ஷெட்பூர் தொழிற்சாலையும் மொத்தமாக மூடப்படுகிறது. இந்த வாகனங்களுக்கு மீண்டும் டிமாண்ட் வரும் வரை மூடப்பட்டிருக்கும்.
மூடப்படும் நாட்களுக்கு உரிய ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு விடும், அந்த தினங்கள் விடுமுறை தினங்களாகக் கருதப்படும்.
கடும் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை, வங்கிகள்- நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்கள் கிடைக்காமை, வங்கிகளில் கடன் வட்டி உயர்ந்தது ஆகிய காரணங்களால் வாகனங்கள் வாங்குவதை வாடிக்கையாளர்கள் தள்ளிப் போட்டுவிட்டனர். இதனால் வாகன தயாரிப்பைக் குறைப்பதே ஒரே வழி என்பதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாரத்தில் 3 நாள் மூடும் அசோக் லேலண்ட்:
அதே போல அசோக் லேலண்ட் நிறுவனம் தனது வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளை டிசம்பர் வரை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்க முடிவு செய்துள்ளது.
விற்பனை குறைந்து போனதால் இந்த நிறுவன குடவுன்களில் ஏராளமான வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன. இதையடுத்து இந்த நடவடிக்கைகைய எடுத்துள்ளது நிறுவன அதிபர்களான ஹிந்துஜா சகோதரர்கள்.
இதன்மூலம் மாதம் 2,000 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என இந்த நிறுவனம் அறிவித்தாலும் ஊதியங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி பிரச்சனைகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் நிலவும் மின்சார பற்றாக்குறையும் இன்னொரு காரணம் என அசோக் லேலண்ட் அறிவித்துள்ளது. மின் தட்டுப்பாடு காரணம்க வாகன உதிரி பாகங்களை சப்ளை செய்யும் துணை நிறுவனங்கள் முடங்கிவிட்டதாலும் தயாரிப்பை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
இந்த நிறுவனத்தின் விற்பனை கடந்த மாதத்தில் 50 சதவீதம் குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தியை குறைக்கும் இரும்பு நிறுவனம்:
அதே போல இரும்பு உற்பத்தி நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ தனது உற்பத்தியை 20 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்து.
கண்ணாடி தொழிற்சாலைகள் மூடல்:
லக்னெளவில் கண்ணாடியாலான பொருட்களை உற்பத்தி செய்யும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்த இந்த நிறுவனங்கள் ஆர்டர்கள் குறைந்து போனதால் மூடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications