சென்னை கடல்நீ்ர்-குடிநீர் திட்டத்துக்கு விடிவு காலம்!
சென்னை: சென்னை நகரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி தமிழக அரசுக்கு ரூ.871 கோடியை ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தை கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அறிவித்தார். ஆனால், இதுவரை அதற்கான பணம் முழுமையாக வந்து சேரவில்லை என முதல்வர் கருணாநிதி இரு தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் இதுகுறித்து, கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறுகையில்,
சென்னையில் ஆண்டுதோறும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் 47 லட்சம் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 58.5 கோடி லிட்டர் நீரை வழங்கி வருகிறது.
பூண்டி, சோழவரம், ரெட்ஹில்ஸ், செம்பரம்பாக்கம் மற்றும் கண்டலேறு, வீராணம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் தண்ணீர் போதுமானதாக இல்லை. இவற்றைக் கருத்திற்கொண்டு நெமிலி அருகே கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு திட்டமிட்டது.
இதன் மூலம் சென்னையின் குடிநீர் தேவைக்கு கூடுதலாக நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த குடிநீர் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.908.28 கோடி செலவிலான இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் உதவியாக ரூ.871.24 கோடி வரை வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில் இந்த திட்டத்திற்கு ஏற்கனவே ரூ.300 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் என்றார் பாலு.
காரைக்குடி-ராமநாதபுரம் சாலைக்கு ரூ. 520 கோடி:
அதே போல காரைக்குடி- ராமநாதபுரம் இடையிலான 80 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த ரூ.530 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
80 கி.மீ. நீளம் கொண்ட காரைக்குடி- அமராவதி- தேவகோட்டை- திருவாடனை- தேவிபட்டிணம்- ராமநாதபுரம் சாலையை மேம்படுத்துவதன் மூலம் திருச்சி- ராமநாதபுரம் இடையிலான தேசிய நெடுஞ்சாலை எண்-49 உடன் இணைப்பும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
