For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைவர்களின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்தார் திருமாவளவன்

By Sridhar L
Google Oneindia Tamil News

Thirumavalavan ends fast
சென்னை: அனைத்துக் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று தனது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். அவருக்கு பழச்சாறு கொடுத்து டாக்டர் ராமதாஸ் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கோரி சென்னையை அடுத்த மறைமலை நகரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் திருமாவளவன்.

இதையடுத்து திருமாவளவன் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் கோரி்க்கை விடுத்தனர். டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நேரில் வந்து திருமாவளவனை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

கடந்த வியாழக்கிழமை காலை தொடங்கிய போராட்டம் நேற்று நான்காவது நாளாக தொடர்ந்தது. திருமாவளவனின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. நேற்று மாலை அவர் மயக்க நிலைக்கு போனார். இதையடுத்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸுக்குக் கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டார்.

இதையடுத்து கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம், உண்ணாவிரதம் நடந்த மேடைக்கு அருகில் கூடியது. அக்கூட்டத்தில் உண்ணாவிரதத்தை திருமாவளவன் கைவிட வேண்டும் என மமுடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் திருமாவளவனின் தாயார் பெரியம்மாவும் அங்கு வந்தார். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவர் திருமாவளவன கேட்டுக் கொண்டார். ஆயினும் தனது முடிவை அவர் கைவிடுவதாக இல்லை.

இந்த நிலையில், மாலை 5 மணியளவில் உண்ணாவிரத மேடைக்கு டாக்டர் ராமதாஸ் வந்தார். அவர் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. எனவே உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு திருமாவளவனிடம் கேட்டுக் கொண்டார்.

இலங்கைத் தமிழர்களுக்காக நாம் இருவரும் இணைந்து போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. இலங்கைத் தமிழர் சிக்கலைத் தீர்க்கக் கோரி தமிழகமே செயலிழக்கும் அளவிற்கு ஒரு போராட்டத்தை நாம் நடத்தலாம். அப்போராட்டத்தில் பால் போன்ற அவசர தேவைக்கான பொருட்கள் தவிர மற்றவற்றை ஏற்றிச் செல்லும் எந்த ஊர்தியும் ஓடாது.

எனவே உண்ணாநிலை போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

அதனைக் கேட்ட திருமாவளவன், இலங்கைத் தமிழர்களுக்காகத் தமிழகமே செயலிழக்கும் அளவிற்கு நடத்தப்படும் போராட்டத்திற்கு முதலமைச்சர் கலைஞர் மற்றும் தமிழ் இன உணர்வு கொண்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் திரட்டுவதாகவும், இலங்கைச் சிக்கல் தொடர்பாக விவாதிக்க அடுத்த இரண்டு நாட்களில் முதல்வர் கலைஞர் மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்வதாகவும் ராமதாஸ் உறுதியளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறினார்.

திருமாவளவனின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ராமதாஸ் உறுதியளித்தார். இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிடுவதாக திருமாவளவன் அறிவித்தார்.

இதையடுத்து தொண்டர்கள் உற்சாகத்துடன் கரவொலி எழுப்பினர். அதையடுத்து திருமாவளவனுக்குப் பழச்சாறு கொடுத்து போராட்டத்தை ராமதாஸ் முடித்து வைத்தார்.

உண்ணாவிரதப் போராடத்தை முடித்துக் கொண்ட பின்னர் திருமாவளவன் பேசுகையில், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று ஆறரை கோடி தமிழக மக்களின் சார்பாக முதலமைச்சர் கருணாநிதி வைத்த கோரிக்கையை காங்கிரஸ் புறக்கணித்து விட்டது.

எனவே, காங்கிரசுடன் இனி எந்தவிதமான உறவையும், எக்காலத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வைத்துக்கொள்ளாது. காங்கிரஸ் கட்சியை விட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 மடங்கு பலமானது.

ஈழத் தமிழர் நலனுக்காக மருத்துவர் ராமதாஸ், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்று சேர்க்க உறுதிமொழி எடுக்கவேண்டும்.

இது தொடர்பாக அவர் நல்லதொரு முடிவை எடுத்து விரைவில் போராட்டத்தை அறிவிக்க வேண்டும். மருத்துவர் ராமதாஸ் எந்தவிதமான போராட்டத்தை அறிவித்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம்.

மருத்துவர் ராமதாஸ், அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், தமிழ் உணர்வு உள்ளவர்கள், உலக தமிழர்கள், என்மீது பற்றுக்கொண்ட கட்சித் தொண்டர்கள் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று எனது உண்ணாநிலைப் போராட்டத்தினை முடித்துக் கொள்கிறேன்.

அடுத்த மாதம் 4 ஆம் நாள் சிறிலங்கா அரசாங்கத்தின் சுதந்திர நாள் ஆகும். அன்று தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சிறிலங்காவின் தேசியக்கொடி எரிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார் அவர்.

மருத்துவமனையில் திருமாவளவன்:

4 நாள் உண்ணாவிரதம் இருந்ததால் திருமாவளவனின் ரத்த அழுத்தம் குறைந்துள்ளது. உடல் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர் நேற்றிரவு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

டாக்டர் மஞ்சுநாத் தலைமையிலான மருத்துவ குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இன்று இரவு அல்லது நாளை காலை அவர் வீடு திரும்புவார் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X