For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கியதில் முறைகேடு இல்லை: கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைத் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கேள்வி - பதில் பாணி அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கேள்வி:- ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் தமிழர்களின் படுகொலைக்கே விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்:- இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்து கண்டுபிடியுங்களேன்.

கேள்வி:- "இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி திரட்டிய நிதி அந்த மக்களுக்கு போய் சேர்ந்ததாக தகவல் இதுவரை இல்லை. அந்த நிதியை கருணாநிதி தன்னுடைய குடும்ப நிதியில் சேர்த்து கொண்டு விட்டாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது'' என்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை பற்றி?

பதில்:- அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு கோடி ரூபாய்க்கான காசோலைகளை-அது யாரிடமிருந்து வந்தது என்றே தெரியவில்லை-எனவே தன் கணக்கிலே அதனை வரவு வைத்துக்கொண்டேன் என்று நிதிமன்றத்திலேயே சொன்னவர் அல்லவா? "தான் திருடி, பிறரை நம்பாள்'' என்ற பழமொழிக்கேற்ப இந்த குற்றச்சாட்டினை கூறியிருக்கிறார்.

மேலும் இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி திரட்டிய நிதி அந்த மக்களுக்கு போய் சேர்ந்ததாக இதுவரை தகவல் இல்லை என்று ஜெயலலிதா சொல்கிறார். பல நாளேடுகளில் அந்த நிவாரண பொருட்கள் எல்லாம் செஞ்சிலுவை சங்கத்தின் உதவியோடு பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டன என்று செய்திகள் வந்துள்ளன. அதுமாத்திரமல்ல, ஜெயலலிதாவின் இந்த அறிக்கையை முதல் பக்கத்தில் வெளியிட்ட, அதே தினமணி நாளிதழில் 5-ம் பக்கத்தில் "60 ஆயிரம் தமிழர் குடும்பங்களுக்கு இந்தியா உதவி'' என்ற தலைப்பில் கடந்த நவம்பர் மாதம் இந்திய அரசால் வழங்கப்பட்ட உதவிப்பொருள்கள் இலங்கையில் உள்ள 60 ஆயிரம் தமிழ் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த உதவிப்பொருள்கள் புலிகள் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் வசிக்கும் தமிழ் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைக் கமிட்டி தெரிவித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் நிவாரண நிதியைப் பொறுத்தவரை ஒவ்வொருவரிடமிருந்தும் காசோலை மூலமாக தான் வழங்கப்பட்டதே தவிர யாரும் தொகையாக வழங்கவில்லை என்பதும், என்னிடம் உதவி நிதி வழங்கிய ஒவ்வொருவரின் பெயரும் ஏடுகளிலே வெளியிடப்பட்டது என்பதும், அந்த நிதிகள் ஒவ்வொரு நாளும் நிதித்துறைக்கு அனுப்பப்பட்டு அரசின் இருப்பிலே செலுத்தப்பட்டு- நிவாரண பொருட்கள் முதற்கட்டமாக வழங்கியது போக, மீத நிதி அனைத்தும் இன்றளவும் அரசு கணக்கிலே இருக்கின்றது.

மேலும் இன்றைய தினம் மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக யாழ்ப்பாணம் பிஷப் டாக்டர் தாமஸ் சவுந்தரநாயகம் என்பவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது.

அந்த கடிதத்தில், இந்திய அரசால் வழங்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்ட தேவையான பொட்டலங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைத்தது. ஒரு வாரத்திற்கு தேவையான பொருள்கள் அதில் இருந்தன. சமையலுக்கு தேவையான மளிகை பொருள்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. தமிழக மக்களிடமிருந்து போர் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் வந்த இந்த நன்கொடை பொருள்களை இலங்கை தமிழர்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.

நான் திரும்பி வரும் போது, தமிழகத்திலிருந்து மக்களுக்கு விநியோகிக்கப்படுவதற்காக அனுப்பப்பட்ட துணிகளை கொண்ட லாரிகள் வரிசையாக சென்று கொண்டிருந்ததை காண நேரிட்டது. கடைகளின் மூலமாக வாங்குவதற்கு வசதியற்ற நிலையிலேயே உள்ள மக்களுக்கு இவை அனைத்தும் மிகவும் தேவையானவையாகும்.

கேள்வி:- ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக தான் பேசவில்லை என்றும், அப்படி மாயத்தோற்றத்தை உருவாக்க சில தீய சக்திகள் முயலுவதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் சொல்லியிருக்கிறாரே?

பதில்:- ஜெயலலிதாவின் பேட்டி அனைத்து ஏடுகளிலும் வெளிவந்துள்ளது. 18.1.2009 தேதிய தினத்தந்தி' நாளிதழில், இலங்கை வேறுநாடு, எனவே அந்த நாட்டு பிரச்சினையில் தலையிடுவதற்கு ஒரு எல்லை உண்டு. இலங்கையில் ஈழம் என்ற நாடு இன்னும் அமையவில்லை. இலங்கை தமிழர்களை கொல்ல வேண்டும் என்று சிங்கள ராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடைபெறும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல' என்று வெளிவந்துள்ளது. அதே நாள் தினமலர்' இதழில் இலங்கைத் தமிழர்களை கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை என்று ஜெயலலிதா சொன்னதாக வெளிவந்துள்ளது. இந்து ஆங்கில இதழிலே கூட, "தமிழர்களை கொல்லக்கூடாது என்பது தான் இலங்கை ராணுவத்தின் நோக்கம் என்றும், ஒரு போரில் அப்பாவிகள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது'' என்றும் ஜெயலலிதா கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

"தினமணி'' நாளிதழிலும், "இலங்கையில் தமிழர்களை கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை'' என்று தான் ஜெயலலிதா கூறியதாக வந்துள்ளது. அவர் அவ்வாறு சொன்னது இலங்கை ராணுவத்திற்கு ஆதரவான வார்த்தைகளா அல்லவா? ஜெயலலிதா இவ்வாறு முதலிலே ஒன்றை சொல்வதும், அதற்கு பிறகு தான் அவ்வாறு சொல்லவில்லை என்று "வாபஸ்'' வாங்குவதும் இது முதல் முறையல்ல. இப்படி முதலில் ஒன்றை சொல்லி விட்டு பிறகு வாபஸ் வாங்குவதும் தான் "கபட நாடகம்'' இது புரியாமல் பன்னீர்செல்வம் எதையோ நாடகம் என்றும், அதில் நடிக்க தான் தயாராக இல்லை என்றும் சொல்கிறார். தேடி பார்த்து கண்டு பிடியுங்கள்

கேள்வி:- இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது என்ற தலைப்பில் நீங்கள் தீர்மானம் கொண்டு வந்த போது, தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வை காட்ட முன்வராமல், அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்ததும், ம.தி.மு.க.வினர் அவர்களை பின்பற்றியதும் பற்றி?

பதில்:- இன்னும் தமிழ் இனம் நெல்லிக்காய் மூட்டையாக தானே இருக்கிறது என்று எண்ணி நெஞ்சம் பதைக்கிறேன்.

கேள்வி:- இலங்கை தமிழர்கள் பிரச்சினை ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை என்றும், அதில் தி.மு.க. செயற்குழுவை மட்டும் கூட்டி முடிவெடுப்பது சரியல்ல என்றும் டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிருக்கிறாரே?

பதில்:- தி.மு.கழகம் ஜனநாயக இயக்கம். அந்த கழகத்தின் தலைவராக நான் இருந்த போதிலும், சில முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது தன்னிசையாக எடுத்து விட முடியாது. முடிவுகளை எடுக்கலாம் என்ற போதிலும், நான் அவ்வாறு சர்வாதிகாரமாக நடந்துகொள்வதில்லை. முதலிலே எங்கள் கட்சியிலே முடிவெடுத்து, அதன் பின்னர் அனைத்து கட்சிகளையோ, தோழமை கட்சிகளையோ கலந்தாலோசித்து தான் முடிவினை அறிவிப்போம். அனைத்து கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளும் கட்சியினர் கூட அப்படி கலந்துகொள்வதற்கு முன்பு தங்கள் கட்சிக்குள்ளேயே அது பற்றி விவாதித்து ஒரு முடிவு எடுத்துக்கொண்டு தான் வருவார்கள்.

கேள்வி:- இந்திய கம்iனிஸ்டு கட்சியின் சட்டமன்ற தலைவர் வெளிநடப்பு செய்த பிறகு தீர்மானம் பற்றிக் கூறும்போது, காங்கிரஸ் அரசையும், மைய அரசையும் தமிழக அரசு பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று தெரிவதாகச் சொல்லியிருக்கிறாரே?

பதில்:- ஆமாம், காங்கிரஸ் அரசு தி.மு.கழகத்தோடு தோழமை கொண்டுள்ள கூட்டணியிலே உள்ள ஒரு கட்சியின் அரசு. கூட்டணி தர்மத்தைப் பின்பற்ற வேண்டுமென்று தி.மு.க. நினைப்பது தவறல்லவே? என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X