இலங்கை தமிழர்களை காக்க மேலும் ஒரு புதிய அமைப்பு
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரவும், அங்கிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கும் 'இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்' என்ற புதியஅமைப்பு ஒன்றே துவங்கியிருப்பதாக பாதிரியார் ஜெகத் கஸ்பார் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்தவும் பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் இடம் பெற்ற இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது.
இதைப் பார்த்து திமுக சார்பில் இலங்கைத் தமிழர்கள் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பும், அதற்கு ஒரு துணை அமைப்பும் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பாதிரியார் ஜெகத் கஸ்பார் ஒரு அமைப்பைத் தொடங்கியுள்ளார்.
இது குறித்து ஜெகத் கஸ்பார் கூறுகையில், இலங்கை தமிழர்களின் நலனுக்காக அரசியல் சுவடு இல்லாத 'இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்' என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளோம். இலங்கை தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட அனைவரின் களமாக இந்த அமைப்பு செயல்படும்.
இந்த அமைப்பின் சார்பில் வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்கு போர் நினைவு சின்னத்தில் இருந்து மெரீனா பீச்சில் உள்ள காந்தி சிலை வரை அமைதி பேரணி நடக்கும்.
இதில் அனைத்து மதத் தலைவர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், கலை உலகினர், மாணவர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்க இருக்கின்றனர்.
இலங்கை தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்தி வரும் வன்முறைகளும், அராஜகங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள். அவை அனைத்தும் மனிதாபிமான சட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சட்டங்களின் படியும் தண்டனைக்குரிய குற்றமாகும். நம்பகத்தன்மை வாய்ந்த பல உலக நிறுவனங்கள் இக்குற்றங்களைப் பதிவு செய்துள்ளன என்றார் ஜெகத் கஸ்பார்.












Click it and Unblock the Notifications