For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சச்சினுக்கு கோடிகளை வாரியிறைத்த பேங்க் ஆப் ஸ்காட்லாந்து!

By Sridhar L
Google Oneindia Tamil News

லண்டன்: வங்கிகள் எல்லாம் 'திவால் வாந்தி' எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், பிராண்ட் அம்பாசடர்களாக சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளை நியமித்து அவர்களுக்கு ரூ. 1,600 கோடி அளவுக்கு ஒப்பந்தம் செய்து அனைவரின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டுள்ளது பேங்க் ஆப் ஸ்காட்லாந்து வங்கி.

சமீபத்தில் மாபெரும் நஷ்டத்தில் மூழ்திய இந்த வங்கியின் தலைவராக இருந்த பிரெட் குட்வின்தான் இப்படி வாடிக்கையாளர்களின் வயிறு எரியும் வேலையைச் செய்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம்தான் இவரை பதவியை விட்ட தூக்கி அடித்தார்கள். அதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் இதுதொடர்பான கான்டிராக்டுகளை சம்பந்தப்பட்ட வீரர், வீராங்கனைகளுடன் ஸ்காட்லாந்து வங்கி போட்டுள்ளது.

இதுகுறித்து சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், நஷ்டத்தில் மூழ்கிய ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்தை மக்கள் பணத்தைக் கொண்டு அரசு காப்பாற்றியது. ஆனால், இப்படி வரி கட்டும் பொது மக்களின் பணத்திலிருந்து ஆயிரக்கணக்கான கோடியை எடுத்து விளையாட்டு வீரர்களையும், பிறரையும் பிராண்ட் அம்பாசடர்களாக நியமித்துள்ளது.

இவர்கள் அனைவரும் ரூ. 1600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பேங்க் ஆப் ஸ்காட்லாந்தின் அம்பாசடர்களாக செயல்பட, சச்சின் டெண்டுல்கர், ராணி எலிசபெத்தின் பேத்தியும், குதிரரையேற்ற வீராங்கனையமான ஜாரா பிலிப்ஸ், கோல்ப் வீரர் ஜேக் நிக்கலஸ், முன்னாள் மோட்டார் ரேஸ் சாம்பியன் சர் ஜாக்கி ஸ்டூவர்ட் உள்ளிட்டோரை ஐந்து ஆண்டுகள் வரை காண்டிராக்ட் போட்டுள்ளார் குட்வின்.

கடந்த மாதம்தான் 28 பில்லியன் பவுண்டு இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்த வங்கி அறிவித்தது. இங்கிலாந்து வர்த்தக வங்கிகளின் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில்தான் விளையாட்டு வீர்ரகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து அனைவரிடமும் திட்டு வாங்கியுள்ளது ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து.

இத்தனை நடந்தும் கூட குட்வின் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை மதித்து அவற்றை கடைப்பிடிக்கப் போவதாக அந்த வங்கி கூறியுள்ளதுதான் வேதனையில் கொதி நீரை ஊற்றுவதாக உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குமுறியுள்ளனர்.

இப்படி விளையாட்டு வீரர்களை கோடிகளால் குளிப்பாட்டியுள்ள ஸ்காட்லாந்து வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்குத் தர வேண்டிய பத்து கோடி பவுண்டு போனஸ் தொகையை நிறுத்தி வைத்துள்ளதாம். இதனால் வாடிக்கையாளர்கள் கடும் கடுப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து இங்கிலாந்து அரசின் கருவூலப் பிரிவு உறுப்பினர் ஜான் மான் கூறுகையில், மறுபடியும் ஒரு முட்டாள்தனமான வேலையை ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து செய்துள்ளது. கொஞ்சம் கூட மாறும் யோசனையில் வங்கி இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.

ஸ்காட்லாந்து வங்கியின் பொற்காலம், பழைய பசுமையான காலம் முடிந்து விட்டதையே இது உணர்த்துகிறது என்றார்.

விளையாட்டுக்கு அதிக அளவில் ஸ்பான்சர் செய்வதில் உலகிலேயே முதலிடத்தில் உள்ள வங்கி ஸ்காட்லாந்து வங்கிதான். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கோல்ப் போட்டிகள், ஆறு நாடுகள் பங்கேற்கும் ரக்பி போட்டி, நெட் -வெஸ்ட் கிரிக்கெட் தொடர், பார்முலா ஒன் கார் பந்தயம் போன்றவற்றை இந்த வங்கி ஸ்பான்சர் செய்கிறது.

தனக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து குட்வின் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அவருக்கு வருடந்தோறும் 40.2 லட்சம் பவுண்டு சம்பளம் தரப்பட்டது என்பது போனஸ் செய்தி.

ஒருபக்கம் கோடிக்கணக்கில் பணத்தை விளையாட்டு பக்கம் திருப்பி விட்டு விட்டு, மறுபக்கம் செலவுகளைக் குறைக்க கடுமையான நடைமுறைகளை அறிவித்துள்ளது ஸ்காட்லாந்து வங்கி. இதனால், இந்த வங்கியில் மேலும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை வேலை இழக்கும் அபாயம் எழுந்துள்ளது.

ஸ்காட்லாந்து வங்கி 30 பில்லியன் பவுண்டு அளவுக்கு பெரு நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் செலவுகளைக் குறைக்கும் நடைமுறைகளை தொடங்கப் போகிறதாம் ஸ்காட்லாந்து வங்கி.

இதுகுறித்து சண்டே டைம்ஸ் கூறுகையில், ஸ்காட்லாந்து வங்கித் தலைவர் ஸ்டீபன் ஹெஸ்டர், விரைவில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளார். இதனால் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேருக்கு வேலை போகும் அபாயம் எழுந்துள்ளது.

இந்தத் திட்டத்தை இறுதிப்படுத்தி வருகிறாராம் ஹெஸ்டர். அடுத்த வாரத்தில் அது அறிவிக்கப்படுமாம்.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 13 ஆயிரம் ஊழியர்களை (உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் பணியாற்றியவர்கள்) வீட்டுக்கு அனுப்பியுள்ளது ஸ்காட்லாந்து வங்கி. கடந்த வாரம் இங்கிலாந்து கிளைகளில் பணியாற்றும் 2300 பேரை வீட்டுக்கு அனுப்ப உத்தரவிட்டது. இந்த நிலையில் மறுபடியும் பல ஆயிரம் பேரின் வயிற்றில் அடிக்கவுள்ளது ஸ்காட்லாந்து வங்கி.

இந்த நிலையில், ஏபிஎன் அம்ரோ வங்கியின் பங்குகள் சிலவற்றை விற்கவும் ஸ்காட்லாந்து வங்கி திட்டமிட்டுள்ளதாம்.

'விவர' சச்சின் மெளனம்:

இதற்கிடையே, ஸ்காட்லாந்து வங்கியுடன் போட்டுக் கொண்ட பிராண்ட் அம்பாசடர் ஒப்பந்தம் குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது ஸ்பான்சர்கள் யாருடனும் நான் நேரடியாக ஒருபோதும் பேசுவதில்லை. எனது நிர்வாகக் குழுவுடன் தான் அனைவருமே பேசுவார்கள். அவர்களிடமிருந்து எனக்கு கிடைத்துள்ள தகவல்கள் இதுவரை நல்லவையாகவே உள்ளன என்று கூறியுள்ளார் சச்சின்.

கிராமப் புறங்களில் ஒரு பழமொழி உண்டு. ஊரான் விட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே என்று. ஸ்காட்லாந்து வங்கி அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X