For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டணி: ஜெயலலிதா அழைப்பு-காங்கிரஸ் நிராகரிப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்றும், மீண்டும் தன்னுடன் கூட்டணி அமைக்க முன் வர வேண்டும் என்ற ரீதியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்த அழைப்பை காங்கிரஸ் நிராகரித்துவிட்டது.

ஜெயலலிதாவின் 61வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெ பேரவை சார்பில் 61 ஜோடிகளுக்கு இன்று சென்னை திருவான்மியூரில் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த திருமணங்களை நடத்தி வைத்து ஜெயலலிதா பேசியதாவது:

திருமணம் என்பதும் ஒரு கூட்டணி தான். இந்த திருமணக் கூட்டணி வெற்றிகரமாக அமைய மணமக்கள் பரஸ்பரம் விட்டுக் கொடுக்க வேண்டும். இந்த திருமண சீசன் நேரத்தில் தேர்தல் சீசனும் வந்து அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடங்கியிருக்கிறார்கள்.

கடந்த 33 மாத கால திமுக ஆட்சியில் வன்முறை, ஊழல், சட்ட விரோத நடவடிக்கைகள் மலிந்து விட்டன. ஆனால் இதுவரை இதில் ஈடுபட்டவர்கள் எந்த தண்டனையும் பெறாமல் சுதந்திரமாக உலா வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு திமுகவுக்கு தருகின்ற ஆதரவு தான்.

இந்த ஆட்சியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி இடைத்தேர்தல் அனைத்திலும் திமுகதான் வெற்றி பெற்றது. ஆனால், இந்த வெற்றிகள் உண்மையான வெற்றிகள் அல்ல.

பண பலம், படை பலம், ரெளவுடிகள் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை பயன்படுத்தித் தான் திமுக வெற்றி பெற்றது. இதற்கெல்லாம் காங்கிரஸ் தரும் ஆதரவு தான் காரணம். இப்போது திமுகவுக்கு அசட்டு தைரியமும், நம்பிக்கையும் உள்ளது.

இதேபோல வன்முறை, அராஜகம், அதிகார துஷ்பிரயோகம் மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என்று திமுக கருதுகிறது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை திமுகவுடனான கூட்டணியை தொடர விரும்புவதாகவே தகவல்கள் வருகின்றன. இந்தக் கூட்டணியுடனே நாடாளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரசும், திமுகவும் நம்புகின்றன.

ஆனால் மக்களை இந்த கட்சிகள் அடியோடு மறந்துவிட்டன. உண்மை நிலவரம் என்னவென்றால் தமிழக மக்கள் திமுக மீது கடும் கோபத்திலும், வெறுப்பிலும், கொதிப்பிலும் உள்ளனர்.

மத்தியில் உள்ள திமுக அமைச்சர்களும் இமாலய ஊழல்கள் செய்வதை மக்கள் அறிவார்கள். குறிப்பாக 1 லட்சம் கோடி அளவிலான ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்கள் மறந்து விடவில்லை.

இந்த நேரத்தில் மக்கள் மனதில் எழுகின்ற கேள்வி இதுதான். இத்தகைய ஊழல் மலிந்த திமுக மீது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் அந்த கேள்வி.

அவ்வாறு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் திமுக மீது மக்களுக்கு உள்ள கோபம் காங்கிரசின் பக்கமும் திரும்பும்.

கடந்த காலத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் இப்போது நடக்கும் தவறுகளையும் மறந்து மீண்டும் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சி கருதிவிடக்கூடாது.

அவ்வாறு கருதினால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களை சந்தித்து வாக்கு கேட்க முடியாத நிலை உருவாகி விடும். கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியும், அதிமுகவும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறோம். அந்தப் பழைய நட்புறவைப் பாராட்டி நண்பர் என்ற முறையில் ஒரு ஆலோசனை கூறுகிறோம்.

திமுக இப்போது புதை மணலில் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது. அதை இனிமேல் யாராலும் காப்பாற்ற முடியாது. திமுக கதை முடிந்து விட்டது. புதை குழியில் மூழ்கும் திமுகவை கைகொடுத்து காங்கிரஸ் காப்பாற்ற நினைத்தால் அந்தக்கட்சியும் புதைகுழியில் சிக்கி அழியும் ஆபத்து உள்ளது.

எதிர்காலத்தின் மீது காங்கிரசுக்கு அக்கறை இருந்தால் திமுகவுடனான உறவை அக்கட்சி துண்டிக்க வேண்டும். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலங்களில் அதிமுகவும், காங்கிரசும் நல்ல உறவு கொண்டிருந்தன. இந்திராவை நான் அன்னையாகவே மதித்தேன். அதன் பின் ராஜீவ் காலத்திலும் காங்கிர சுடன் எங்களுக்கு நல்ல மரியாதையும் நட்புணர்வும் இருந்தது.

எனவே தான் பழைய நண்பர் என்ற முறையில் இந்த ஆலோசனையை காங்கிரஸ் கட்சிக்கு கூறுகிறேன்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கும் அதற்கு ஆதரவு தருகின்ற கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் கட்சி அல்ல, எந்த கட்சி திமுகவுடன் இணைந்து வந்தாலும் மக்கள் அவர்களை விரட்டியடிப்பார்கள்.

இத்தகைய நிலையை சந்திக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி விரும்பினால் திமுகவுக்கு அளிக்கும் ஆதரவை அந்த கட்சி வாபஸ் பெற வேண்டும். அத்துடன் மக்களிடம் நம்பிக்கையை பெறுவதற்கு இமாலய தவறுகள் செய்யும் திமுக ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யவும் வேண்டும். தவறுகளை திருத்திக்கொண்டு காங்கிரஸ் கட்சி இவ்வாறு மக்களிடம் பரிகாரம் காண வேண்டும்.

அதிமுகவை பொறுத்தவரை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். அந்த தீர்ப்புக்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். எந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிகளுக்குத்தான் லாபம். எந்த கட்சிகள் சேர வில்லையோ, அந்த கட்சிகளுக்குத் தான் நஷ்டம் என்றார் ஜெயலலிதா.

காங்கிரஸ் நிராகரிப்பு:

ஜெயலலிதாவின் பேச்சு மீண்டும் காங்கிரஸ் கூட்டணிக்கு அவர் முயல்வதையே காட்டுகிறது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறுகையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இந்தக் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

மேலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவையோ அல்லது அதற்கான சிந்தனையோ கூட காங்கிரசிடம் இல்லை என்றார்.

வளாகம் வரை வந்த ஜெ:

இந் நிலையில் இன்று தமிழக சட்டசபைக்கு வந்த ஜெயலலிதா, லாபியில் இருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்தி விட்டு திரும்பிச் சென்றார்.

எம்.எல்.ஏவாக இருப்போர், தொடர்ந்து 3 கூட்டங்களுக்கு வராமல் இருந்தால் உறுப்பினர் பதவி பறி போய் விடும். எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொள்கிறார்களோ இல்லையே வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட தவற மாட்டார்கள்.

இந்த நிலையில் சட்டமன்றக் கூட்டங்களில் வெகு அபூர்வமாக கலந்து கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா வழக்கம் போல இன்றும் வருகைப்பதிவேட்டில் மட்டும் கையெழுத்தி விட்டுச் சென்றார்.

சட்டசபைக்கு வந்த ஜெயலலிதாவை அதிமுக எம்.எல்.ஏக்கள் வாழ்த்தி, வரவேற்று அழைத்துச் சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X