For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணன், தம்பி சண்டையை நிறுத்த ஒரு தாய் ஸ்தானத்தில் உண்ணாவிரதத்தை அறிவித்தேன்: கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: வீட்டிலே அண்ணன் தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் முரண்டு பிடித்து கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அவர்களை ஒற்றுமைப்படுத்த உண்மையான ஒரு தாயார் வேறு என்ன தான் செய்ய முடியும்.? நீங்கள் ஒழுங்காக இல்லாவிட்டால் எனக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று உரைப்பதில்லையா? அதைத் தான் நானும் எனது உண்ணாவிரத அறிவிப்பு அறிக்கையாக்கிருக்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

இன்று காலையிருந்து, ஏன் நேற்று மாலை தொலைக்காட்சி செய்திகளுக்கு பிறகு மருத்துவமனைக்கு ஏராளமான தொலைபேசி தொடர்புகள், என்னிடம் பேச வேண்டுமென்று வற்புறுத்தல்கள், தவிர்க்க முடியாமல் சிலரிடம் படுக்கையிலே படுத்தபடியே பேசினால்-உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தது குறித்து ஏராளமான கேள்விக்கணைகள்-இவ்வளவு பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில்-உண்ணாவிரதம் இருக்கலாமா? அது உடல் நிலையை மேலும் பாதிக்காதா? எதற்காக இப்படிப்பட்ட அறிவிப்பு? காக்கி சட்டையினரும், கறுப்புச்சட்டையினரும் காது கொடுத்து உங்கள் பேச்சை கேட்க மாட்டார்களா? ஒரு சிலரின் தூண்டுதல் உண்டு என்ற போதிலும், அவர்கள் உண்மையை அறிந்து கொள்ளாமலா போய் விடுவார்கள்? வழக்கறிஞர்கள் போராட முன் வந்தது எதற்காக? இலங்கை தமிழர்களின் நலன்கள் கருதிதானே இலங்கை தமிழர்களின் பாதுகாப்பிற்காக நீங்கள் பாடுபட்டது இன்று நேற்றிலிருந்தா? அரை நூற்றாண்டுக்கு மேலாக அல்லவா? நீங்கள் அதற்காக எழுதியும், பேசியும் செயல்பட்டும் வருகிறீர்கள், என்றெல்லாம் கேள்விக்கு மேல் கேள்விகள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கடற்கரை பெருவெளியில் அமர்ந்தவாறு பிரபாகரனுடனும், சிறீசபா ரத்தினத்துடனும், பத்மநாபாவுடனும், முகுந்தனுடனும், பாலகுமாருடனும், ஆண்டன் பாலசிங்கத்துடனும், யோகியுடனும், பேபியுடனும், காசி ஆனந்தனுடனும் என்று மணிக்கணக்கிலே பேசிய நாட்கள் எனக்கு நினைவுக்கு வருகிறது.

அது மட்டுமா? இன்று 2009-ம் ஆண்டு. இதற்கு இருபதாண்டுகளுக்கு முன்பு 1989-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் நாள் தமிழினத் தலைவர்கள் பலர், குறிப்பாக வழக்கறிஞர் சந்திரஹாசன், சச்சிதானந்தம், ஈழவேந்தன், எஸ்.சிவசுப்பிரமணியம், எஸ்.சிவானந்தம், க.சிவநாயகன், ர.பத்மநாபன், த.அருணாசலம், ஞானகணேசன், பி.ஆனந்தராஜா ஆகியோர் என்னை இல்லத்திலே சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சினை குறித்த மூன்று மணி நேரம் உரையாடினர்.

இதற்கு பின் நான்கு நாட்கள் கழித்து 4.1.1990 அன்று இலங்கை அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜயரத்னே, அவருடைய ஆலோசகர் பிராட்மேன் வீராகூன் மற்றும் ராணுவத்துறை செயலாளர் செபபாலா அட்டிகலா ஆகியோர் என்னை இல்லத்தில் சந்தித்து, தமிழ் போராளிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக நான் எடுத்து வரும் முயற்சிகளுக்காக தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

அதற்கு பிறகு இரண்டு நாட்கள் கழித்து 7-ந் தேதியன்று ஈராஸ் குழுவினை சேர்ந்த பாலகுமார், சங்கர், முகிலன் ஆகியோர் என்னை சந்தித்தனர். 8-ந் தேதியன்று இலங்கையிலுள்ள இந்திய தூதர் மல்கோத்ரா என்னை சந்தித்தார். 9-ம் தேதியன்று இலங்கை வடக்கிழக்கு மாகாண முதல்-அமைச்சர் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தை சேர்ந்த வரதராஜபெருமாள் என்னை சந்தித்தார். அதே ஆண்டு பிப்ரவரி 16,17, ஆகிய நாட்களில் பாலசிங்கம், யோகி போன்றவர்கள் மீண்டும் சந்தித்தார்கள்.

அப்போது மத்திய அரசின் பிரதிநிதியாக முரசொலிமாறன் மத்திய மந்திரி என்ற முறையில் உடன் இருந்தார். ஒரு சில நாட்களில் இந்த அளவிற்கு பேராளிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களை மாற்றி மாற்றி தொடர்ந்து நான் சந்தித்தது தற்போது போராட்டம் நடத்த முன் வந்திருப்பவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த சந்திப்புகள் பற்றி செய்தியாளர்கள் என்னிடம் கேட்ட போது, போராளிகளுக்கிடையே மோதல் ஏற்படாமல் இருப்பதற்காகவே பேசிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினேன். அந்த பேச்சுவார்த்தையின் போது விடுதலைப்புலிகள் ஜனநாயகப்பாதைக்கு வருவதற்கு சில நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டார்கள். ஈழத்தில் ஜனநாயக அடிப்படையில் அமைதியும், பாதுகாப்பும் தொடர்ந்து நிலவ வேண்டும் என்பதே என் நோக்கமும், அன்றைய பிரதமர் வி.பி.சிங்கின் நோக்கமும் ஆகும் என்று அவர்களிடம் தெரிவித்தேன்.

நான் அப்போது தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் மட்டும் பலித்திருக்குமேயானால், வெற்றி பெற்றிருக்குமேயானால் இந்த இருபதாண்டு காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் செத்து மடிந்திட நேர்ந்திருக்காது.

1990-ம் ஆண்டைப் பற்றி சொன்னேன். அதற்கு முன்பே 1981-ம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க. நடத்திய போராட்டங்கள் எத்தனையெத்தனை? அதன் காரணமாக அப்போதிருந்த அ.தி.மு.க. ஆட்சியினரால் நான் கைது செய்யப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டதும்-அதனை கண்டித்து கோயிலடி பிருந்தாவன், திருச்சி மனோகரன், பெருந்துறை முத்துப்பாண்டியன், திருவாரூர் கிட்டு, சென்னை மேரி, கல்லாவி ராஜேந்திரன், மேல்மாயில் ஜெகன்னாதன் ஆகிய 7 பேர் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை தங்களுக்கு தாங்களே போக்கிக் கொண்டார்கள் என்பது நாடறிந்து செய்தியாகும்.

அதன்பிறகு, யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட சிவனேசன் என்ற போலீஸ்காரரை சுட்டுக் கொன்றதாக கூறி, தமிழ் இளைஞர்கள் குட்டிமணி, ஜெகன் ஆகியோர் மீது வழக்கு நடைபெற்று, 13.8.1982 அன்று இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நீதி மன்றத்தில் அப்போது குட்டிமணி, தன்னை தூக்கிலிடுவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குட்டி மணிகள் உதயமாவார்கள் என்றும், தன் இனத்திற்காக தரக்கூடியதாக இருப்பது தன் உயிர் மாத்திரம் தான் என்றும், தன் கண்களின் மூலம் மலரப்போகும் தமிழ் ஈழத்தை பார்க்க போவதாகவும், தன் உடலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டதோடு-தனக்காக வாதாடிய வழக்கறிஞர்களிடம் தன் உயிரை காப்பாற்றுவதற்காக யாரிடமும் மண்டியிட வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தி வந்ததும், தமிழ் இனம் மெல்ல மெல்ல அழிவதா? என்ற தலைப்பிலே முரசொலியில் கடிதம் எழுதியவன் தான் இன்று உண்ணாவிரதம் இருப்பதாக அறிக்கை கொடுத்துள்ளேன். முரசொலியில் அப்போது எழுதிய கடிதத்தில் வாழ்வின் எல்லைக்கோட்டில் நிறுத்தப்பட்டுள்ள நேரத்திலும் அந்த வாலிபர்களின் வைரம் பாய்ந்த உள்ளத்தினை எண்ணியெண்ணி வையகமே திகைத்து தான் நிற்கிறது.

தீரர் இருவர்க்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு கேட்டுத் தீயை மிதிப்பது போல ஆகி விட்ட தமிழா நீ உலகத்தின் எந்த மூலையிலே இருந்தாலும் அந்த இடத்தில் நீ தன்னந்தனியளாக ஒருவனாக இருந்தாலும், அந்த இனந்தம்பிகளின் உயிரை காக்க, எக்கு கம்பிகளின் மரண தண்டனையைத் தடுத்து நிறுத்த குரல் கொடுத்தே ஆக வேண்டும்.

உடன் பிறப்பே, உனக்கும், எனக்கும் ஏற்படுகிற இந்த உணர்வு எங்கெங்குமிருக்கின்ற எல்லா தமிழர்களுக்கும் ஏற்பட்டே தீரும். ஏற்பட்டே ஆக வேண்டும். இல்லையேல் தமிழ் இனம், மெல்ல, மெல்ல ஆனால் உறுதியாக அழிக்கப்பட்டே விடும் என்று இப்படி தான் முடித்திருந்தேன்.

அதே திங்கள் 28.8.1982 அன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு நாள் என்ற பெயரில் அனைவரும் தங்கள் உடையில் கறுப்புச்சின்னங்கள் அணிய வேண்டுமென்றும், மாலையில் பொது கூட்டங்களை நடத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டேன். சென்னையிலே நடைபெற்ற கூட்டத்தில் நான் கலந்து கொண்டு உரையாற்றினேன். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யும் படி கேட்டு இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவிற்கு தந்திகள் கொடுக்கும் படி வேண்டிக்கொண்டேன்.

அதற்கு ஒரு மாதத்திற்கு பிறகு 25.7.1983 அன்று பிற்பகல் 2.30 மணி அளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இருந்த குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை போன்ற தமிழ் இளைஞர்களை சிங்கள காடையர் உள்ளே புகுந்து கொன்று குவித்தனர்.

பொங்கி வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு மறுநாளே சென்னையில் தமிழர் பாதுகாப்பு பேரணி நடைபெறும் என்று அறிவித்து, ஏழு மணிநேர அவகாசத்தில் எட்டு லட்சம் பேர் சென்னையிலே திரண்டனர். கடைகளை மூட வேண்டுமென்று யாரும் கேட்கவில்லை. ஆனால் அன்று எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. ஆட்டோக்கள் ஓடாது என்று யாரும் கூறவில்லை. ஆனால் அன்று ஆட்டோக்கள் சென்னையிலே ஓடவில்லை. இதனை தொடர்ந்து எத்தனையெத்தனையோ போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

இதெல்லாம் தமிழகத்தின் வரலாற்றுப்புத்தகத்தில் அத்தியாயங்களாக பதிவாகியுள்ளன. ஆனால் தற்போது சிலர் இலங்கை தமிழர் பிரச்சினை என்பது அவர்களுக்கு மட்டுமே உரியதை போலவும்-நானும், நமது கழகமும் அதிலே அக்கறையற்றதைப் போலவும் மக்களிடம் செய்தி பரப்பிட முனைகின்றார்கள்.

என் கையால் எழுதப்பட்ட செயற்குழு, பொதுக்குழு தீர்மானங்களிலேயே எந்த பிரச்சினைக்காக அதிகமாக தீர்மானங்களை எழுதியிருப்பேன் என்று என் விரல்களை கேட்டால், அது கூறும் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தான் என்று. ஆனால் சிலர் தற்போது நம்முடைய தீர்மானங்களில் தீவிரம் இல்லை என்கிறார்கள், பதவியைத் துறக்க விருப்பமில்லை என்கிறார்கள், ஆட்சியிலே இருப்பதால் அதனைக் காப்பாற்ற முயலுகிறேன் என்றெல்லாம் பிரசாரம் செய்கிறார்கள்.

ஆமாம், இலங்கையிலே இருக்கிற தமிழர்களை காப்பாற்ற எனக்கு இருக்கிற அக்கறையைப் போல, இங்கேயிருக்கின்ற தமிழர்களையும் காப்பாற்ற வேண்டிய அக்கறையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது அல்லவா? ஆனாலும், கடந்த மாதம் சட்ட மன்றத்திலே இலங்கை தமிழர்களுக்காக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இலங்கையிலே தமிழ் ஈழம் மலருமென்பதால் அதற்காக ஆட்சியை இழக்க கூட நாங்கள் தயார் என்று அறிவித்தவன் தான் நான்.

ஆனால், அதையெல்லாம் வசதியாக மறைத்து விட சிலர் முயலுகிறார்கள். தாங்கள் தான் இலங்கை தமிழர்களுக்கான பாதுகாவலர்கள் என்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் தான் ஒரு சிலரை தூண்டிவிட்டு தமிழகத்திலே ஒரு கலவரத்தை தூண்டி விட முடியாதா? அதைத் கொண்டு சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. என்று ஆட்சியை கவிழ்த்து விட முடியாதா? சட்டமன்றம் கூடப்போகிறது என்றவுடன் எந்த பிரச்சினையை கிளப்பலாம் என்று தேடி பார்த்து- தேவையில்லாமல் ஏதோ ஒரு வழக்கிற்காக நீதிமன்றம் செல்கிறேன் என்று கூறிக்கொண்டு, அங்கே சென்று, அந்த இடத்திலே ஒரு தகராறு வரக்கூடிய அளவிற்கு நடந்து கொண்டு, அதன் காரணமாக அங்கே ஒரு விரும்பத்தகாத சம்பவத்தை உருவாக்கினார்கள்.

நீதி மன்றத்திலே தகராறு- சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று ஏடுகளில் கற்பனையாக செய்தி வரக்கூடிய அளவிற்கு நிலைமைகள் ஏற்பட்டன. அந்த செய்தி கிடைத்தவுடன் நானே காவல் துறை அதிகாரிகளை விட்டு நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவிக்க செய்தேன். இதற்கு பிறகும் பிரச்சினை தீர்ந்த பாடில்லை.

வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கசப்புணர்வு ஏற்படுகின்ற அளவிற்கு நிலைமை போய் விட்டது. வழக்கறிஞர்கள் வீட்டிலே உள்ளவர்கள் பலர் காவல் துறையிலே பணியாற்றுகிறார்கள். காவல்துறையினர் வீட்டிலே உள்ளவர்கள் பலர் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். ஆனால், இருவருக்குமிடையே பகை உணர்ச்சி.

இரு தரப்பினரும் யார்? இரு தரப்பினருமே தமிழர்கள் தான். என்னுடைய உடன் பிறப்புகள் தான். இவர்கள் இடையே மோதுதல் உருவாகாதா, ரத்தம் வடியாதா? அதிலே இன்பம் காண முடியாதா? என்று ஏங்குபவர்களுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக தான் நான் நேற்றைய தினம்( நேற்று முன்தினம்) உண்ணாவிரத அறிக்கையை விட நேர்ந்தது.

என் உயிரை பற்றி கவலைப்பட்டு, உடல் நலம் இல்லாத நிலையில் இப்படி அறிக்கை விடலாமா என்று அன்போடு கோபிக்கிறார்கள். இருப்பது ஓர் உயிர் தான், அது போக போவது ஒரு முறை தான். அது ஒரு நல்ல காரியத்திற்காகக் போகட்டும் என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவின் உண்மையான தம்பி நான் என்ற உணர்வோடு விடப்பட்டது தான் அந்த அறிக்கை.

வீட்டிலே அண்ணன் தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் முரண்டு பிடித்து கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அவர்களை ஒற்றுமைப்படுத்த உண்மையான ஒரு தாயார் வேறு என்ன தான் செய்ய முடியும்.? நீங்கள் ஒழுங்காக இல்லாவிட்டால் எனக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று உரைப்பதில்லையா? அதைத் தான் நானும் அறிக்கையாக்கிருக்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X