For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வரின் உண்ணாவிரத அறிவி்ப்பு கண் துடைப்பு நாடகம்: ராமதாஸ்

By Sridhar L
Google Oneindia Tamil News

Ramadoss
சென்னை: முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரத அறிவிப்பு ஒரு கண் துடைப்பு நாடகம் போல தோன்றுகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் டாக்டர் ராமதாஸ், வைகோ, தா.பாண்டியன், திருமாவளவன் ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர்.

பேட்டியின்போது டாக்டர் ராமதாஸ் கூறுகையில்,

தி.மு.க. அரசை கவிழ்க்க சதி செய்கிறார்கள் என்று மருத்துவமனையில் இருந்தபடி முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். இங்கே இருப்பவர்கள் யாரும் சதிகாரர்கள் இல்லை. அதற்காக இந்த இயக்கத்தை நாங்கள் தொடங்கவில்லை. இது அரசியல் கூட்டணியும் கிடையாது. இலங்கை தமிழர்களுக்காக போராடுவதற்காக இந்த அமைப்பை உருவாக்கும் போதே 10 வித கொள்கையுடன் தான் உருவாக்கியிருக்கிறோம்.

ஏன் சொல்கிறார் என்று புரியவில்லை...

ஆட்சியை கவிழ்க்க சதி என்று முதல்-அமைச்சர் கருணாநிதி திரும்ப திரும்ப ஏன் சொல்கிறார் என்றே தெரியவில்லை. இந்த ஆட்சியை யாரால் கவிழ்க்க முடியும். 35 எம்.எல்.ஏ.க்களால் மட்டும் தான் முடியும். அப்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சியால் மட்டும் முடியும். அவர்கள் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என்று கூறி விட்டார்கள்.

மத்திய அரசும் 356 சட்டத்தை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்க்காது. எங்கள் கட்சி 18 எம்.எல்.ஏ.க்களும் ஆட்சியை கவிழ்க்கும் வேலையில் ஈடுபட மாட்டார்கள். பிறகு ஏன் அதைப் பற்றி திரும்ப திரும்ப பேசுகிறீர்கள். ஆட்சியைக் கவிழ்க்க முயல்பவர்கள் யார் என்பதை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்க வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்காக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தி வரும் போராட்டத்தை தடுப்பதற்காகவும், அதை திசை திருப்புவதற்காகவும், எங்கள் அணிக்கு கூடும் மக்கள் கூட்டத்தை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் எங்கள் மீது அவதூறுகளை பேசி வருகிறார்.

ஐகோர்ட்டில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு காரணமான அதிகாரிகளை இதுவரையில் பதவி நீக்கம் செய்யவில்லை. எங்களை பார்த்து சதிகாரர்கள் என்கிறீர்களே. ஐகோர்ட்டில் நடந்த சம்பவத்திற்கு யார் சதி செய்தது? தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அந்த சதிகாரர் யார்? இதை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்க வேண்டும்.

தேவை போர் நிறுத்தம்தானே ...

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்துவதை விட்டு விட்டு உணவு, மருந்து பொருட்களை அனுப்ப வேண்டும் என்று கூறி வருகிறீர்களே? போர் நிறுத்தம் ஏற்பட்டால் நீங்கள் சொன்னது நடந்து விடாதா? முதல் கட்டத்தை விட்டு விட்டு கடைசி கட்டத்துக்கு போய் விட்டீர்களே? முதல் தேவை போர் நிறுத்தம் தானே.

வக்கீல்-போலீஸ் ஒற்றுமைக்காக உண்ணாவிரதம் இருப்பேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருப்பது கூட கண்துடைப்பு நாடகம் போல் தான் இருக்கிறது என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X