For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் அமைச்சரானார் பூங்கோதை-ஐடி துறை ஒதுக்கீடு

By Sridhar L
Google Oneindia Tamil News

Poongothai
சென்னை: தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பூங்கோதை ஆலடி அருணா இன்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட உறவினரைக் காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் பரிந்துரை செய்ததாக எழுந்த புகாரையடுத்து சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பூங்கோதை அமைச்சரவையிலிருந்து கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார்.

இந் நிலையில் இப்போது அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தத் துறையை முதல்வர் கருணாநிதி தான் கவனித்து வந்தார்.

ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற எளிய விழாவில் பூங்கோதை அமைச்சராகப் பதவியேற்றார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகளான பூங்கோதை 2006ல் திமுக அமைச்சரவையில் சமூக நலத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். லஞ்சப் புகாரில் சிக்கிய தனது உறவினரைக் காப்பாற்ற, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் தொலைபேசியில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் பதவி விலக நேர்ந்தது.

இந்தத் தொலைபேசி உரையாடல், கடந்த ஆண்டு மே மாதம் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. அப்போது, பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், இந்தப் பிரச்னை சட்டப் பேரவையில் அமளியைக் கிளப்பியது.

இதைத் தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை முதல்வர் கருணாநிதியிடம் அளித்தார் பூங்கோதை. இந்தக் கடிதம் கடந்த ஆண்டு மே 14-ம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப் பேரவையில் பெரும் பிரச்னையைக் கிளப்பிய, தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து விசாரிக்க நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தக் கமிஷனின் அறிக்கை, கடந்த நவம்பர் மாதம் சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரில் வைக்கப்பட்டது.

அதில், பூங்கோதையின் செயல்கள் குறித்து ஏதும் கூறப்படவில்லை. இதைச் சுட்டிக் காட்டிய, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமார் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என சட்டப் பேரவையில் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்கிறார் பூங்கோதை. இந்தத் துறைதான் தமிழகத்தில் இலவச தொலைக்காட்சி திட்டம், அரசு கேபிள் டிவி ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பூங்கோதையுடன் சேர்த்து தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்கிறது.

ஆலடி அருணா ஊரில் கொண்டாட்டம்:

இதற்கிடையே, 9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பூங்கோதை அமைச்சராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது சொந்த தொகுதியான நெல்லை மாவட்டம் ஆலங்குளம் முழுவதும் திமுக ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, நகர செயலாளர் பாப்புலர் செல்லத்துரை, வழக்கறிஞர் மாலதி மனோ, பூங்கோதையின் சகோதர் மதிவாணன் தலைமையில் பட்டாசு வெடித்து ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் நாடார் சமூக ஓட்டுகளை மனதில் வைத்தே அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X