For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு அறிவிக்கும் சலுகைகளால் என்ன பலன்?

By Sridhar L
Google Oneindia Tamil News

கடல்ல ஊசிய போட்டுட்டுத் தேடற மாதிரி... என்று ஒரு பழமொழி சொல்வார்கள். யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... பெரும் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும், மெல்ல மெல்ல ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தி்ன் நிலைக்கு வெகு பொருத்தமான பழமொழி இதுதான்.

சர்வதேச பொருளாதார பெருமந்தம் இந்தியாவில் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பது போலத்தான் தெரிந்தது. ஆனால் உண்மையில் பலவித எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது, கண்ணுக்குப் புலப்படாமல்.

அதனால்தான் அமெரிக்காவில் 5 லட்சம் பேருக்கு வேலை போய்விட்டது என்றதும், 'போச்சா... நல்லது போகட்டும். என்னமா ஆட்டம் போட்டாங்க!' என்று கமெண்ட் எழுதி மகிந்தார்கள் நம்மவர்கள்.

ஆனால், அமெரிக்காவுக்கு வைக்கப்பட்ட அந்த ஆப்பு, இப்போது இந்தியா போன்ற நாடுகளை நோக்கித் திரும்பியிருக்கிறது.

இனிமேலும் பொருளாதாரத்தின் பின்னோக்கிய சரிவைத் தவிர்க்க முடியாது எனும் சூழ்நிலையில், நாட்டின் மொத்த உற்பத்தி 3 சதவிகிதம் வரை குறைந்துவிட்டதை அரசு நாடாளுமன்றத்திலேயே அறிவித்தது.

இதனால் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதத்துக்குக் குறைந்துள்ளது வெளிப்படுத்தப்பட்டது, வேறு வழியில்லாமல். இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் வெளிவரத் துவங்கியுள்ளன.

கணிணித் துறை தவிர, ஜவுளித்துறை, ஆட்டோமொபைல்ஸ், சிறு தொழில் வளர்ச்சி தொழிற்பேட்டைகள் போன்றவற்றில் வெளிப்படையான வேலை இழப்புகள் தெரிய ஆரம்பித்துள்ளன. இதன்மூலம், பொருளாதார சரிவென்பது ஏதோ கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கானது என்ற மாயை மெல்ல விலகத் தொடங்கியுள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஏற்றுமதி முழுமையாக நின்று போயுள்ளது.

இந்த பாதிப்பு பெருமளவு ஏற்பட்டால் இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை மீண்டும் நிமிர்த்த பல ஆண்டுகள் தேவைப்படும். காரணம் இங்கு முழுமையான பொருளியல் நிபுணர்களோ நீண்டகாலத் திட்டமிடல்களோ கூடக் கிடையாது. 'பணவீக்கம் வேறு, விலைவாசி உயர்வு வேறு!' என மிகத் தெளிவாக விளக்கம் சொல்லும் மேதைகள் மலிந்த இந்த நாட்டின் பொருளாதாரம் ஒரு முறை விழுந்தால் எழுந்து நிற்க வெகு காலம் பிடிக்கும்.

இந்த உண்மை தாமதமாக உறைத்ததாலோ என்னமோ, பொருளாதாரச் சலுகைகளை அள்ளிவிட்டுக் கொண்டுள்ளது மத்திய அரசு. ஆனால் இந்த சலுகைகளும்கூட மக்களுக்கு போய்ச் சேருகின்றனவா என்றால் பெரிய கேள்விக்குறிதான் பதிலாய் நிற்கிறது.

அரசு அறிவிக்கும் சலுகைகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வங்கிகளோடு நின்று போவதுதான் மகா கொடுமை.

விமான எரிபொருளுக்கான பலவித வரிகளை மத்திய அரசு 5 முறைக் குறைத்துள்ளது. ஆனால் விமான நிறுவனங்களோ, ஒரே ஒரு முறை (சில வாரங்களுக்கு மட்டும்) விமானக் கட்டணங்களைக் குறைப்பதாய் போக்குக் காட்டிவிட்டு, மறுபடியும் முன்பைக் காட்டிலும் அதிக அளவு கட்டணங்களை தாறுமாறாக உயர்த்திக்கொண்டன. குறைந்தபட்சம் அதைத் தட்டிக் கேட்கக் கூட யாருக்கும் தோன்றவில்லை. இதை கேள்வியாக எழுப்பிய பத்திரிகையாளரிடம், 'நாங்கள் எப்போது சம்பாதிப்பது?' என வெளிப்படையாகக் கேட்டுள்ளார் கிங்பிஷர் நிர்வாகி ஒருவர்.

மற்றொரு நிர்வாகி, 'விமானங்களில் ஏழைகளா பயணிக்கிறார்கள்? பணக்காரர்கள்தானே? அதனால் இனி கட்டணங்களைக் குறைப்பதாக இல்லை!' என அறிவித்துள்ளார்.

வணிக வங்கிகள் இன்னமும் கூட ரிசர்வ் வங்கி அறிவித்த முழுமையான சலுகைகளை மக்களுக்குக் கொண்டுபோய் சேர்க்கவில்லை என ரிசர்வ் வங்கி கவர்னரே குற்றம் சாட்டும் நிலைதான் இன்னமும். ஒவ்வொரு வங்கியும் தலைமை நிர்வாகியும் கடமை உணர்வை விட, அதிகபட்ச உரிமை உணர்வுடன் பணியாற்றுவதே இதற்குக் காரணம்.

பல்வேறு தொழில் நிறுவனங்கள் அரசிடம் வரிச் சலுகையை முழுமையாகப் பெற்றுக் கொண்டு, அதில் குறைந்தபட்ச சதவிகிதத்தைக் கூட பொதுமக்களுக்கு வழங்க மறுக்கின்றன. இதனால் பணப்புழக்கம் நிறுவனங்களோடு நின்றுவிடும் அபாயம்.

மொத்த விற்பனை விலைக் குறியீட்டெண்களை மட்டும் கணக்கில் கொண்டு பணவீக்கத்தைக் கணக்கிட்டு, பணவீக்கம் அடியோடு குறைந்துவிட்டது, நாட்டில் விலைவாசிப் பிரச்சினையே இல்லை என்கிற ரீதியில் அரசு அறிக்கை விட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் எத்தனை நாளைக்கு உண்மையை மறைக்க முடியும்?

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் அடிப்படை, Price Mechanism என்ற முக்கியமான கருவியை அரசு தன் கட்டுப்பாட்டிலிருந்து நழுவவிட்டுவிட்டதுதான். இதை இப்போதாவது மீட்டு, அரசு கையிலெடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பலவீனத்தின் அறிகுறிகள் தெரிந்த போதே அதைச் சரிசெய்வதை விட்டுவிட்டு, சரிந்து விழுந்த பிறகு தூக்கி நிறுத்தும் வேலையைத்தான் இந்திய அரசுகள் காலகாலமாகச் செய்துவருகின்றன. இப்போதும் அதுவே தொடர்கிறது. முழுமையாக விழுந்து நொறுங்கிவதற்குள் அரசும், நாட்டின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அதிகாரிகளும் மாற்று நடவடிக்கைகளில் முழு வேகம் காட்ட வேண்டும்.

காட்டுவார்களா?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X