பிரஸ்ஸல்ஸில் 30 ஆயிரம் தமிழர்கள் பங்கேற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டம்
பிரஸ்ஸல்ஸ்: இலங்கையில் நடக்கும் இனப் படுகொலையை கண்டித்து பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் புலம்பெயர் ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் 30,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது.
பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கார் டி நோத் பிரதான தொடருந்து நிலையத்தில் இருந்து ஐரோப்பிய நேரப்படி நேற்று காலை 11:00 மணிக்கு ஆரம்பமான பேரணி, நான்கரை மணி பயணத்திற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அருகில் வந்து சேர்ந்தது.
பேரணியில் கலந்து கொண்ட மக்கள்...
சிங்கள அரசு தமிழின அழிப்பை உடன் நிறுத்தி, போர் நிறுத்தம் செய்ய வேண்டும், உணவு, மருந்துப் பொருள்களை உடனடியாக அனுப்ப வேண்டும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் உண்மையான ஏக பிரதிநிதிகள், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும், தமிழீழமே எமக்கு வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களையும் போர் படங்களையும் ஏந்திச் சென்றனர். வழியெங்கும் ஆங்காங்கு பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தியபடி பேரணி சென்றது.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டதால் செல்லும் வழியெங்கும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
Free Tamil Eelam என எழுதப்பட்ட பதாகை கொண்ட மேடையில் பிற்பகல் 3.30 அளவில் கண்டன நிகழ்வுகள் தொடங்கின.
பிரான்சில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவுக்கு மோட்டார் சைக்கிளில் வந்திருந்த ஐந்து இளைஞர்களில் ஒருவர் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி வைக்க, அக வணக்கம் இடம்பெற்று கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் ஐரோப்பிய தமிழ் இளையோர் பிரதிநிதிகளுடன், கனடிய தமிழ் இளையோர் பிரதிநிதி ஒருவரும் தமிழ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கில மொழிகளில் உரையாற்றினர்.
அத்துடன், இங்கிலாந்தின் சமத்துவ, இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த டன்கன் சப்பல், நார்வே சமத்துவ இளையோர் மத்திய மையத்தின் பிரதிநிதி சைமன் ஸ்ரும்சே ஆகியோரும் உரையாற்றினர்.
பாலஸ்தீனத்தில் உள்ள காசாவிற்கு இங்கிலாந்திலிருந்து உணவு, மருந்துப் பொருள்கள் அனுப்பியதுபோன்று தமிழீழத்திற்கும் அனுப்ப வேண்டும் என டன்கன் சப்பல் கூறினார்.
பிரஸ்ஸல்ஸை ஸ்தம்பிக்க வைத்த இந்தப் போராட்டத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகளிலும், ஏனைய ஐரோப்பிய, நார்டிக் நாடுகளான நெதர்லாந்து, இத்தாலி, டென்மார்க், நார்வே, மற்றும் சுவீடன் போன்ற நாடுகளில் இருந்து பேருந்துகள், மற்றும் தனியார் ஊர்திகளிலும் பல மணி நேரங்கள் பயணித்து வந்தடைந்த மக்கள், பெல்ஜிய வாழ் புலம்பெயர் தமிழ் மக்களுடன் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தினர்.












Click it and Unblock the Notifications