For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அய்யர், பிரபுவுக்கு 'ஆப்பு'-வாசன் தரப்பு தீவிரம்!

By Sridhar L
Google Oneindia Tamil News

Vasan
சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தங்களுக்கும் தங்களது ஆதரவாளர்களுக்கும் இடம் பிடிக்க மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் கடும் போட்டா போட்டியில் இறங்கியுள்ளனர்.

பல தலைவர்களும் டெல்லியிலேயே முகாமிட்டு இடம் பிடிக்க முயன்று வருகின்றனர்.

மத்திய அமைச்சர்களான வாசன், ப.சிதம்பரம், இளங்கோவன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் மணிசங்கர் அய்யர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தங்களுக்கும் தங்களது ஆதரவாளர்களுக்கும் அதிகபட்ச இடங்களைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தொகுதிகள் சீரமைப்புக்குப் பின் உருவாக்கப்பட்ட புதிய தொகுதிகளான காஞ்சிபுரம் (தனி), ஆரணி, ஈரோடு, திருப்பூர், தேனி, விருதுநகர் ஆகிய 6 தொகுதிகளும், கடந்த தேர்தலில் போட்டியிட்ட மயிலாடுதுறை, சேலம், சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் கடந்த முறை காங்கிரஸ் போட்டியிடாத கோவை, கடலூர், தென்காசி, திருச்சி, புதுச்சேரி ஆகிய 5 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ளன.

கடந்த 2004ம் ஆண்டில் காங்கிரஸ் போட்டியிட்ட பழநி, கோபி, ராசிபுரம், பெரியகுளம் ஆகிய தொகுதிகள் இப்போது, தொகுதி சீரமைப்பில் நீக்கப்பட்டுவிட்டன.

ஊருலேயே பெரிய கோஷ்டி நாங்க தான்..:

தமிழக காங்கிரசில் பெரிய கோஷ்டியின் தலைவரான வாசன், தன் ஆதரவாளர்களுக்கு காஞ்சிபுரம், நாமக்கல், கோவை, திண்டுக்கல், திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, தென்காசி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளைக் கேட்டுள்ளார்.

காஞ்சீபுரம் தொகுதியில் போட்டியிட வாசனின் ஆதரவாளரான ராணியும், நாமக்கல் எம்எல்ஏ ஜெயக்குமாரும் முயற்சிக்கின்றனர்.

திருச்சி தொகுதியில் போட்டியிட மேயர் சாருபாலா தொண்டைமான் தனியாக டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார். மேலும் ஜெரோம் ஆரோக்கியராஜ், சுப.சோமு ஆகியோரும் இந்தத் தொகுதியைக் கேட்கின்றனர்.

தங்கபாலு கோரும் காஞ்சி, திருச்சி:

சேலம் தொகுதியை கேட்டு வாங்கிவிட்ட தங்கபாலு தனது ஆதரவாளர்களுக்கு காஞ்சிபுரம் (தனி), திருச்சி உள்ளிட்ட சில தொகுதிகளைப் பெற முயன்று வருகிறார்.

தென்காசி, விருதுநகர் மீது ப.சிதம்பரம் கண்:

ப.சிதம்பரம் தனக்கு சிவகங்கை தொகுதியையும் தனது ஆதரவாளர்களுக்காக விருதுநகர், தென்காசி ஆகிய தொகுதிகளைக் கேட்டுள்ளார். தென்காசி தொகுதியில் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் விசுவநாதன் போட்டியிட விரும்புகிறார்.

குழம்பித் தவிக்கும் இளங்கோவன்:

இளங்கோவன் ஈரோடு அல்லது திருப்பூரில் எதில் போட்டியிடுவது என்று புரியாமல் குழம்பிப் போய் இரு தொகுதிகளையும் கேட்கிறார். ஒன்று அவருக்கு இன்னொன்று ஆதரவாளருக்கு. அத்தோடு திருச்சி தொகுதியையும் தன் ஆதரவாளருக்குப் பெற முயல்கிறார்.

பாமக நிறுவனர் ராமதாசின் சம்பந்தியும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான கிருஷ்ணசாமி ஆரணி தொகுதியைக் கேட்கிறார்.

அய்யர், பிரபுவுக்கு 'ஆப்பு'-வாசன் தரப்பு தீவிரம்:

கோவை தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் பிரபு களம் இறங்கி உள்ளார். அவருக்கு அந்தத் தொகுதி கிடைத்துவிடாமல் செய்ய வாசன் களமிறங்கியுள்ளார். அதே போல மணிசங்கர் அய்யருக்கு மயிலாடுதுறை கிடைத்துவிடக் கூடாது என்பதில் வாசனின் சித்தப்பா ஜி.ஆர். மூப்பனார் தீவிரம் காட்டுகிறார்.

பிரபுவும் அய்யரும் தப்பித்தவறி சீட் கிடைத்து போட்டியிட்டாலும் அவர்களது வெற்றிவாய்ப்பை வாசன் தரப்பே காலி செய்து விடும் என்கிறார்கள் காங்கிரஸ் கோஷ்டிகளை நன்கு உணர்ந்தவர்கள்.

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட என்.எஸ்.வி.சித்தன், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் வாய்ப்புக் கேட்கின்றனர்.

நெல்லைக்கு குமரி அனந்தன், தனுஷ்கோடி குறி:

நெல்லை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மூத்த தலைவர் குமரி அனந்தன், அவரது தம்பி வசந்தகுமார், முன்னாள் எம்எல்ஏ ஆலங்குளம் ராமசுப்பு உள்பட பலர் போட்டி போட்டு வருகின்றனர். தனக்கு அல்லது வசந்தகுமாருக்கு அந்தத் தொகுதி வேண்டும் என்கிறார் குமரி அனந்தன்.

தனக்குத் தராவிட்டாலும் தனது மகள் அனுஷா தேவிக்காவது இந்தத் தொகுதியைத் தர வேண்டும் என்கிறார் தனுஷ்கோடி ஆதித்தன்.

இந்த போட்டா போட்டி காரணமாக காங்கிரஸ் தலைமையால் வேட்பாளர்களை அவ்வளவு சீக்கிரத்தில் இறுதி செய்துவிட முடியாது என்று தெரிகிறது.

புதுச்சேரியில் சிக்கல் இல்லை..:

அதே நேரத்தில் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை அது மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கே எனபது உறுதியாகிவிட்டது. அம் மாநில முதல்வர் வைத்தியலிங்கம் உள்பட முக்கிய கோஷ்டிகள் அவரை ஆதரிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X