For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரனைக் கைது செய்யக் கோரி ஜெயலலிதாவைத்தான் வரலாறு மன்னிக்காது - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக 50 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருபவன் நான். என்னையா வரலாறு மன்னிக்காது?. மாறாக, பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும் என்று முழங்கிய, எம்.ஜி.ஆருக்கு செய்த துரோகத்திற்காக ஜெயலலிதாவைத்தான் வரலாறு மன்னிக்காது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் குறித்து அங்கே உடனடியாக நிரந்தரப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென்று இந்திய அரசை வலியுறுத்தி தந்திக்கு மேல் தந்தி கொடுத்தும், கடிதங்கள் எழுதியும், அறிக்கைகள் கொடுத்தும் கடந்த 3 நாட்களாக நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இலங்கையிலே போர் நிறுத்தம் நிரந்தரமாக ஏற்படவும், அதற்கு ஆவன செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்திடவும் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் அறிக்கையினை நேற்று முன்தினம் இரவு விடுத்ததோடு, நேற்றைய தினம் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும், பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் நேற்று நான் கொடுத்த அறிக்கையின் நகலை இணைத்து, இந்த வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளேன்.

அந்த வேண்டுகோள் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும், அவருடைய தோழமைக் கட்சிகளுக்கும், அவருடைய தொலைக்காட்சி நிறுவனத்துக்கும், அவரது பத்திரிகைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்திலே நானே கையெழுத்திட்டு கட்சி சார்பின்றி அந்த வேலை நிறுத்தத்திற்கு தமிழர் உயிரைக் காப்பாற்றுவதற்காக வேலை நிறுத்தம் செய்திடலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளேன்.

ஆனால் இவ்வளவிற்கும் பிறகும் ஜெயலலிதா இன்று அவசர அவசரமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வேலை நிறுத்தம் என்பது கபடநாடகம் என்றும் வரலாறு என்னை மன்னிக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்.

- இலங்கைத் தமிழர்களுக்காக 1956-ம் ஆண்டு முதல் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக குரல் கொடுத்து வருகிற என்னை வரலாறு மன்னிக்குமா? என்று கேட்கிற ஜெயலலிதாவே, இலங்கையில் இப்போது ராஜபக்சே நடத்தும் யுத்தம், தமிழர்களை எதிர்த்து அல்ல, விடுதலைப் புலிகளைத்தான் என்று அபாண்டமாக பொய் சொன்னீரே, உம்மை வரலாறு மன்னிக்கும் என்று கனவு காண்கிறீரா?

- ஒரு போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான், அதுபோல்தான் இலங்கையிலே அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள், இதில் என்ன குற்றம்? என்று கேட்டீரே, உம்மை மாத்திரம் வரலாறு மன்னித்துவிடும் என்று மனப்பால் குடிக்கிறீரா?

- பிரபாகரனை கைது செய்து, இந்தியாவிற்குக் கொண்டு வர வேண்டுமென்று தமிழகச் சட்டமன்றத்திலே தீர்மானத்தை முன்மொழிந்தீரே, அப்போது உம்மை வரலாறு மன்னித்து விடும் என்று தானே எண்ணிக் கொண்டு செயல்பட்டீர்?

- அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து அரசின் சார்பில் இலங்கைப் பிரச்சினைக்காக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்தீரே, உம்மை வரலாறு என்ன வாழ்த்திக் கொண்டா இருக்கின்றது?

- உம்மையும், வைகோவையும் தவிர மற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் அடாது பெய்த மழையில் விடாது மனித சங்கிலி நடத்தினார்களே, அதை கபடநாடகம் என்று கூறினீரே; அந்த எட்டப்ப துரோகத்தை எப்படி அம்மா வரலாறு மன்னிக்கப் போகிறது?

- தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும், இலங்கைப் பிரச்சினைக்காக டெல்லி சென்று போர் நிறுத்தக் கோரிக்கை வைத்தபோது, அவர்களோடு போக மறுத்தீரே; அதற்காக உம்மை வரலாறு மன்னிக்கப் போகிறதா?

- எம்.ஜி.ஆருக்கு நீர் செய்த துரோகங்களை வரலாறு மன்னித்தாலும் மன்னிக்கும். இலங்கைத் தமிழர்களுக்காக நீர் அடுக்கடுக்காக செய்து வரும் துரோகங்களை எந்தக் காலத்திலும் வரலாறு மன்னிக்காது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்க என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இன்னொரு அறிக்கை:

கருணாநிதி விட்டுள்ள இன்னொரு அறிக்கையில் இப்படிக் கூறியுள்ளார் ...

தமிழ் இனத்தைப் படுகொலை புரியும் இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட

நிலையில் அமைதியான முறையில் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X