For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர், ராகுல் 9ம் தேதி நெல்லையில் பிரசாரம்

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி: தென்மாவட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமரும், ராகுல் காந்தியும் 9ம் தேதி வருகை தருகின்றனர். இதனால் காங் தொண்டர்கள் உற்சாகத்தோடு உள்ளனர்.

தமிழ்நாட்டில் வரும் 13ம்தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் அணிகள் மாறி உள்ளது. திமுக-காங், அதி்முக அணியில் பாமக, மதிமுக, கம்யூ, போன்ற கட்சிகள் உள்ளன. இந்த இரு கூட்டணி கட்சிகளிடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது.

அதிமுக அணியில் ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, தா.பாண்டியன் நல்லகண்ணு, டி.ராஜா ஆகியோர் உள்ளிட்ட தலைவர் 39 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இக்கூட்டணி தலைவர்கள் செல்லும் இடமெல்லாம் தவறாமல் இலங்கை தமிழர் பிரச்சனையை மையப்படுத்தி பேசுவதால் மக்களிடையே அதிகளவு வரவேற்பு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி இக்கூட்டணிக்கு மக்களிடம் ஆதரவு பெருகியும் வருகிறது.

அதே சமயம் திமுக கூட்டணியில் அன்பழகன், ஸ்டாலின், தங்கபாலு, வாசன், திருமாவளவன், கனிமொழி உள்ளிட்டவர்கள் மட்டுமே பிரச்சாரத்தில் வலம் வருகின்றனர். இவர்களில் முதல்வரை தவிர மற்றவர்களில் ஸ்டார் அந்தஸ்து குறைவு.

கூட்டணி வலுவாக இருப்பது போல் திமுக காட்டி கொண்டாலும் மக்களிடம் பல்வேறு குறைகள் ஆளும் கட்சி மீது குவிந்து கிடக்கிறது. மேலும் முதல்வர் உடல் நலக்குறைவு பாதிப்பில் மருத்துவர்கள் யாரையும் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை. அதனால் அவரது பிரச்சார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

நெருக்கடியான நிலைக்கு போதிய தலைவர்கள் பலமின்றி திமுக-காங் கூட்டணி தள்ளப்பட்டுள்ளதால் காங்கிரஸ் சார்பில் தமிழகத்தில் இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா பிரச்சாரம் மேற்கொண்டு காங் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இந்நிலையில் வரும் 9ம் தேதி தென்மாவட்ட காங்-திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் ராகுல்காந்தி ஆகியோர் பிரச்சாரம் செய்கின்றனர்.

நெல்லை ராமசுப்பு, தென்காசி வெள்ளப்பாண்டி, குமரி திமுக வேட்பாளர் ஹெலன் டேவிட்சன், தூத்துக்குடி ஜெயத்துரை ஆகியோரை ஆதரித்து பேசுகின்றனர். பின்னர் விருதுநகரில் வைகோ-வை எதிர்த்து போட்டியிடும் காங் வேட்பாளர் மணிதாகூர்க்கு ஆதரவு திரட்டுகிறார். (இவர் ராகுல் காந்தியின் நண்பர் ஆவார்).

முக அழகிரிக்கும் ஆதரவு திரட்டுகிறார். பின்னர் சிவகங்கை தொகுதியில் ராகுல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தின் வடமுனையில் திமுக கூட்டணிக்கு ஆதரகவாக சோனியா காந்தியும், தென்முனையி்ல் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி ஆகியோரது பிரச்சார அறிவிப்புகளால் அக்னி வெயிலில் சோர்வோடு பணியாற்றி திமுக-காங் தொண்டர்கள் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர்.

கலக்கத்தில் இருந்து வேட்பாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிரதமர் வருகை தகவலை தொடர்ந்து மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. வாகன சோதனை, எல்லையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவைகளை குறித்து காவல் துறை அதிகாரிகள் ஆய்வுகள், பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்த ஆயத்தமாகி விட்டனர்.

பிரதமர், ராகுல் வருகை அறிவிப்பு கோஷ்டி பூசலில் இருக்கும் காங்கிரஸாரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் தென்மாவட்ட பார்லி தேர்தல் களைகட்ட தொடங்கிவிட்டது.

மத்திய போலீசார் தீவிர வாகன சோதனை

தேர்தலை சீர்குலைக்கும் விதமாக தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் ஊடுருவலாம் என உளவு துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.

நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் நக்சல்கள் பதுங்கியிருக்கலாம் என்று கிடைத்த தகவலை தொடர்ந்து எஸ்பி ஆஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு வனத்துறையினருடன் இணைந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கேரள மாநில எல்லை பகுதி வழியாக தேர்தலுக்கு முறையற்ற வகையில் பணம் பட்டுவடா செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் ரகசிய கண்காணி்ப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் தமிழக போலீசார் உதவியுடன் மத்திய பாதுகாப்பு படை போலீசார் நேற்று முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரச்சாரத்திற்கு பிரதமர் மற்றும் ராகுல்காந்தி வர உள்ளதால் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X