For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்முறை வெடிக்கும் என்றவர்களின் முகத்தில் கரியைப் பூசிய தேர்தல் - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி வன்முறையில் ஈடுபடப் போகிறது என்றும், பெரிய கலவரம் ஏற்படப் போகிறது என்றும் தமிழ்நாடே ஸ்தம்பிக்கப் போகிறது என்றும் சிலர் பிரசாரம் செய்தார்கள். தமிழ்நாடே ரத்தக் களறியாகப் போகிறது என்று பிரசாரம் செய்தவர்களின் முகத்தில் கரி பூசும் அளவிற்கு தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ளது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
:
மக்களவை தேர்தல் ஒன்றிரண்டு சிறு சம்பவங்களை தவிர அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்று தேர்தல் ஆணையமே அறிவித்துள்ளது. 68 சதவிகிதம் வாக்குப் பதிவுகள் நடந்துள்ளது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு என்று ஒரு சில இடங்களில் செய்திகள் வந்த போதிலும், சிறிது நேரத்திற்குள் சரி செய்யப்பட்டு விட்டது. அந்த சிறு கோளாறுகள்கூட தேர்தல் ஆணையத்தின் பொறுப்பே தவிர, அதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை.

ஆனால் சில நாட்களாக தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி வன்முறையில் ஈடுபடப் போகிறது என்றும், பெரிய கலவரம் ஏற்படப் போகிறது என்றும் தமிழ்நாடே ஸ்தம்பிக்கப் போகிறது என்றும் சிலர் பிரசாரம் செய்தார்கள். தமிழ்நாடே ரத்தக் களறியாகப் போகிறது என்று பிரசாரம் செய்தவர்களின் முகத்தில் கரி பூசும் அளவிற்கு தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ளது.

ஆனாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏட்டில் ஆளுங்கட்சியினர் வன்செயல், தி.மு.க.வினர் கொலைவெறி தாக்குதல் என்றெல்லாம் தலைப்பிட்டு அறிக்கை அரசி ஜெயலலிதா கொடுத்த செய்திகளை கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றி கொல்கத்தா நாளேடான டெலகிராப் வெளியிட்டுள்ள செய்தியின் சில பகுதிகள் வருமாறு:

அரசியல் தெளிவுள்ள மாநிலமான மேற்கு வங்கத்தில், நேற்று நடைபெற்ற தேர்தலில் மிக அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

நேற்றிரவு தன் தாயின் மடியில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் வீட்டிற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டபோது குண்டு ஒரு வயது 11 மாதங்களே ஆன சானியா என்ற குழந்தையின் கால் வழியாக சென்று, 27 வயதான அலியா என்ற தாயின் வயிற்றுக்குள் சென்றது.

மேற்கு வங்கத்தில் எந்த கட்சியும் தேர்தல் நேரத்தில் இது போன்ற வன்முறை நடைபெற்று குழந்தையை கொன்ற சம்பவத்தை நினைவுகூர இயலவில்லை. கடந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலில், நான்கு வயதான மிலி கட்டூன் என்ற குழந்தை தன் வீட்டு வராந்தாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது குண்டு வெடித்து மடிந்தது.

தற்போது சானியா கொலையுண்டது பற்றி யாரும் கைது செய்யப்படவில்லை. ஏனெனில் இந்த சம்பவம் குறித்து யாரும் புகார் கொடுக்கவில்லை என்று காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு டெலகிராப் செய்தி வெளியிட்டதோடு நிற்கவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு 'வன்முறை மாநிலம்" என்றே தலைப்பிட்டு எழுதிய தலையங்கம் என்ன தெரியுமா?

மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறையின் புதிய பரிமாணம், தாயின் கரங்களில் இருந்த ஒரு குழந்தை சுடப்பட்டு இறக்கும் காட்சிதான். அரசியலில் வன்முறையை பயன்படுத்துவதை நியாயப்படுத்தி 32 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த மார்க்சிஸ்ட்களின் நீண்டகால ஆட்சியின் பாரம்பரியமிக்க வரலாற்றுத் தொடர்ச்சியாக இது உள்ளது.

அரசியலில் வன்முறையை அடிப்படையாக வைத்து அவர்கள் ஆட்சியில் நீடித்து வருகின்றனர். அதன் காரணமாக சட்டம் மற்றும் நிர்வாகம் உட்பட துறைகள் அனைத்தும் வன்முறைக்கு அடிபணிந்து போகும் வகையில் அடக்கி வைக்கப்பட்டுள்ளன. தொழில் தாவாவிற்கு தீர்வு காண்பதாகட்டும், தேர்தலில் போட்டியிடுவதாகட்டும், மார்க்சிஸ்ட் கட்சியினரின் கரங்களில் அச்சுறுத்தல், மிரட்டுதல், வன்முறை ஆகியவை பிரதான ஆயுதங்களாக உள்ளன. தற்போது பிரசாரம் துவங்கியதிலிருந்து வெடித்துக் கிளம்பியுள்ள வன்முறை இத்தனை ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி பேணி வருகின்ற அரசியல் கலாசாரத்தின் விளைவேயாகும்.

அக்கட்சியின் அரசு வன்முறையை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ தவறிவிட்டது என்றால், அது நிர்வாக திறமையின்மையினால் மட்டுமல்ல. அந்த தோல்விக்கு வன்முறையை ஒரு அரசியல் தந்திரமாக கருதும் கட்சியின் கண்ணோட்டமே பெரும் காரணமாகும்.

இவ்வாறு டெலகிராப் ஏட்டில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

இத்தகைய பாராட்டுக்குரியவர்கள்தான் தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் வன்செயல் என்றும், கொலைவெறி தாக்குதல் என்றும் செய்தி வெளியிட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் டாடா கார் தொழிற்சாலை தொடங்க விவசாய நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று போராடிய அப்பாவி விவசாயிகள் மீது மார்க்சிஸ்ட் அரசு நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்ட வன்முறையில் 14 பேர் கொல்லப்பட்டதை மறக்க முடியுமா?

தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் 8 பேர் பலியான செய்தியை இல்லையென்று கூற முடியுமா?

தமிழக ஆளுங்கட்சியை பற்றி இந்த அளவிற்கு குறைகூறும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சில மாதங்களுக்கு முன்பு பேசியது என்ன? மதுரையில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது தெரிவித்த கருத்து என்ன? இதோ:

இந்தியாவின் பெரிய பதவியான ஜனாதிபதி தேர்தலுக்கு மாதர் குல பிரதிநிதியாக பிரதிபா பாட்டிலை அறிவித்தபோது நாடே மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது. அதை எதிர்த்து தமிழ்நாட்டில் இருந்து ஒரு அவலக் குரல். பிரதிபா பாட்டீல் தேர்வு அரசியல் ஜோக் என ஜெயலலிதா கூறினார்.

இந்த அகம்பாவத்திற்கு மேற்கு தொகுதி மக்கள் சரியான அடி கொடுக்க வேண்டும். தேச நலன் கருதி எடுத்த சிறந்த முடிவை அரசியல் ஜோக் என்பது அகம்பாவம்.

உ.பி. தேர்தலுக்கு பிரசாரம் செய்ய சென்ற ஜெயலலிதா பா.ஜ. பற்றி வாயே திறக்கவில்லை. நாளை மதவெறி கூட்டத்தோடு இணைந்திட ஜெயலலிதா எடுக்கும் முயற்சிதான் இது. போர்க்காலத்தில் வதந்திகளை பரப்புவது தேச துரோகம். தற்போது ஜெயலலிதா வதந்திகளை பரப்பி வருகிறார். தமிழகத்தில் குடிசைகளுக்கு பட்டா வழங்கப்படுவது குறித்து குறைசொல்ல ஜெயலலிதாவிற்கு அருகதை உள்ளதா?

- இவ்வாறு அதே மார்க்சிஸ்ட் ஏட்டில் செய்தி வந்தது.

சட்டமன்றத்தில் எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். கம்யூனிஸ்டுகள் தி.மு.க. அரசுக்கு ஜால்ரா போடுவதாக கூசாமல் பேசுகிறார்கள்.

யார் ஜால்ரா போடுவது? உள்நாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் பன்னாட்டு பகாசூர முதலாளிகளுக்கும் ஜால்ரா போட்டது அ.தி.மு.க. ஆட்சிதான். முதலமைச்சர் கலைஞர் ரேஷன் கடைகளில் இருந்து அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டுகிறோம். கல்விக் கொள்ளைக்குதான் ஜெயலலிதா அரசு உடந்தையாக இருந்தது என்றும் அந்த ஏடு எழுதியது.

துணை நகரம் அமைப்பது குறித்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அது ஆரோக்கியமற்ற முறையிலும், முதலமைச்சர் மீது வெறுப்பை காட்டுகிற முறையிலும் வந்திருப்பதை மார்க்சிஸ்ட் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

துணை நகரம் சம்பந்தமான விஷயங்களை விட்டுவிட்டு, முதல்வர் கருணாநிதி குடும்பத்தினரையும் சொந்த பந்தங்களையும் குறிவைத்து வன்மத்துடன் செய்யப்பட்ட தனிநபர் தாக்குதல் இது. 2006 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவின் அராஜக மக்கள் விரோத போக்கிற்கு மக்கள் புகட்டிய பாடத்தை அவர் புரிந்து கொண்டதாக தெரியவில்லை என்று இன்னொரு நாள் எழுதியது.

- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும், முன்னணியினரும் இப்படியெல்லாம் அவர்களே பேசியதை மறந்து விட்டுதான் நமது அணியை விட்டு சென்றார்கள். அவர்கள்தான் இப்போதும் நம்மீது காழ்ப்பு வீசும் கருத்துகளை எழுதி வருகிறார்கள்.

நம்மைப் பற்றி தாக்குகிறவர்களைப் பற்றி நண்பர்கள் கூறும்போது நான் ஒன்றைச் சொல்வதுண்டு. அவர்கள் நம்மைப் பாராட்டிய அளவிற்கு திட்டவில்லையே என்று கூறுவேன். எனவே தான் அந்த அருமை நண்பர்கள் நம்மைப் பற்றி தாக்குவதைப் படித்து விட்டு, அவர்கள் இதற்கு முன்பு எழுதிய பாராட்டுகளை படித்துப் பார்த்து எனக்கு நானே சமாதானப் படுத்திக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X